செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்

3 minutes read

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என 6 கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (3) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறித்த பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதன்போது விசேடமாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும், எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குறித்த பணியை அவசரமாகச் செய்ய முடியாது எனவும், பல்வேறு சமூகங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக்கூடிய சமூகப் பரிசீலனையாக அது குறித்துக் கவனம் செலுத்துவது முக்கியம் எனவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இது 1948, 1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புகளைப் போன்று, ஒரு தரப்பினரால் மாத்திரம் அறிமுகப்படுத்தப்படும் அரசியலமைப்பாக இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதுடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனக் குறிப்பிட்டார். எனினும், இந்த சந்தர்ப்பத்தில் அவசரமாகக் கொண்டுவரப்படும் அரசியலமைப்புத் திருத்தத்தை விட, புதிய மக்கள் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வதே அவசியமாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான கருத்தாடலைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

பல்வேறு சமூகப் பிரிவினரும் தமது தேவைகளுக்காக மாத்திரம் செயற்படுவதைத் தாண்டி, இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்படும் நாட்டை உருவாக்கும் அடித்தளம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலத்தில் நாட்டில் எந்தவொரு இனவாத மோதல்களும் இடம்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் முறையான ஆட்சி முறைமையே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

மலயக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டு, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களுக்கு வதிவிடத்துக்காக 10 பேர்ச் காணிக்கான சட்டபூர்வ உரிமையை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) வி. ராதாகிருஷ்ணன், கம்பனிகளின் எதிர்ப்பு காரணமாகத் தங்களது அரசாங்கங்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியாதிருந்த அந்தப் பணியானது, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிறைவேறும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

எந்தவொரு மக்களும் வசிக்காத மலையகப் பிரதேசங்களில் கூட நில வெடிப்புகள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கேற்ப மத்திய மலையகத்தின் நிலையான தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே அந்த சிக்கலுக்கான தீர்வு காணப்பட வேண்டும் எனவும், அதற்காகத் தற்போது தனி அதிகாரசபையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்தகைய நடவடிக்கைகளின் ஊடாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு தேவைகளின் அடிப்படையில் தோட்ட கம்பனிகளுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், 2042ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன்படி, வெகுவிரைவில் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளமையால், மலையக மக்களுக்கு நிலத்திற்கான சட்டபூர்வ உரிமையை வழங்குவது தொடர்பான சரத்துகளை அதில் உள்வாங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த மக்களுக்கு வீட்டுரிமை கிடைத்த போதிலும், நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

அந்த மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதற்காக தொண்டமான் அமைப்பையும் நெவிடா அமைப்பையும் இணைத்து புதிய வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு ஏற்கனவே முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை விட அதிகமான தொகையினை 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் நிலவும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், ஆணைக்குழுக்களை நியமிப்பது உள்ளிட்ட அதற்கான பல சாதகமான நடவடிக்கைகள் இதுவரையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், போரினால் வீடுகளை இழந்த மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வாக, அந்த மக்களுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் 13,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

டித்வா  அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தப் பணிகள் நிறைவடையும் வரை அந்த மக்களுக்கு வாடகை வீட்டுக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் முறை மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பணிகள் குறித்தும் இங்கு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்ததுடன், தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அதிகார சபை போன்ற நிறுவனங்கள் பழைய கொள்கைகளின் அடிப்படையில் செயற்படுவதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் பிரதிநிதிகள் ஜனாதிபதியை தெளிவுபடுத்தினர்.

இந்த அனைத்துக் கருத்துகளையும் கேட்டறிந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தமிழ் மொழி பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு, இவ்வாறான ஒரு கூட்டணியை உருவாக்குதல் தொடர்பில் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், சமூகத்தில் தவறான புரிதல்கள் ஏதும் ஏற்படாதவாறு பொதுவாக மக்கள் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும்  பிரதிநிதிகளிடம்  ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) சார்பில் அதன் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம். தாஹிர், என்.பி.எம்.எம். தாஹிர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) சார்பில் எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் நிசாம் கரியப்பர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் மற்றும் பரத் அருள்சாமி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.