செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மணற்கொள்ளையை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை எம்மிடம் கையளியுங்கள் | ரவிகரன்

மணற்கொள்ளையை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை எம்மிடம் கையளியுங்கள் | ரவிகரன்

2 minutes read

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் மிக தீவிரமாக அதிகரித்து வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றபோதே இக்கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

பொலிஸாரால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், எமது இளைஞர், யுவதிகளிடம் ஆயுதங்களை கையளித்தால் அவர்கள் இவற்றைக் கட்டுப்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், விசுவமடு நெத்தலியாறு தொடக்கம் மன்னாகண்டல், கெரடமடு பேராறு வரை தினசரி அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்தால், சம்பவ இடத்திற்குச் செல்லும் சில பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களிடம் கையூட்டு (லஞ்சம்) பெற்றுக்கொண்டு திரும்புவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் புல்மோட்டையில் அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் மன்னாகண்டல் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்,

“விடுதலைப் புலிகளின் காலத்தில் 6 அடியாக இருந்த ஆறு, தற்போது சட்டவிரோத மணல் அகழ்வினால் 45 அடியாக மாறியுள்ளது. உள்ளூர் மக்கள் சொந்தத் தேவைகளுக்கு மணல் பெற முடியாத நிலை உள்ளபோதும், சட்டவிரோத மணற்கொள்ளை தங்குதடையின்றி நடக்கிறது.

விடுதலைப் புலிகளின் காலத்தில் இரவு 12 மணிக்குக் கூட பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடிந்த நிலை இருந்தது. ஆனால் இன்று கசிப்பு, கஞ்சா, ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாத பொலிஸார், சீருடையைக் கழற்றிவிட்டுச் செல்ல வேண்டும்.

பொலிஸாரால் இச்சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், ஆயுதங்களை எங்களிடம் கையளிக்கட்டும். எமது இளைஞர், யுவதிகளிடம் அதைக் கட்டுப்படுத்தும் வல்லமை உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி, 19 கிராம அலுவலர் பிரிவுகளையும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களையும் கொண்ட இப்பகுதிக்கு 75 பொலிஸார் மட்டுமே கடமையில் உள்ளனர்.

இருப்பினும், இந்த ஆண்டில் இதுவரை  கசிப்பு உற்பத்தி தொடர்பாக 702 வழக்குகளும் (ரூ. 37,27,500 தண்டப்பணம்),  ‘ஐஸ்’ போதைப்பொருள் தொடர்பாக 91 வழக்குகளும், சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக 69 வழக்குகளும், கோடா (45), கஞ்சா (25), ஹெரோயின் (33), சட்டவிரோத துப்பாக்கி (14) மற்றும் மண் அகழ்வு (09) எனப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், அனைத்துப் பொலிஸாரும் இலஞ்சம் வாங்குவதில்லை என்றும், இலஞ்சம் பெறும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றி உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பொலிஸ் பொறுப்பதிகாரியின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட ரவிகரன் எம்.பி, வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் சட்டவிரோதச் செயல்கள் குறையவில்லை எனச் சுட்டிக்காட்டினார். பொலிஸார் தொடர்ந்து அலட்சியமாகச் செயற்பட்டால், நாடாளுமன்றின் ஒவ்வொரு அமர்விலும் இது குறித்துப் குரல் எழுப்பப்படும் என எச்சரித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.