
அன்னையின் மடியில் ஆரம்பப் பயணம்
தந்தையின் கரம்பிடித்து தளிர்நடைப் பயணம்
மூன்று வயதில் துவங்கும் கல்விப் பயணம் .
ஆசிரியர் துணையுடன் அறிவுப் பயணம் .
பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிப் பயணம்
எதிர்காலத்தை அதுவே நிர்ணயிக்கும் பயணம்
அடுத்து துவங்கிடும் அலுவல் பயணம் .
பணம் சம்பாதிக்கும் சாகசப் பயணம் .
இருபத்தைந்திற்கு மேல் இல்லறப் பயணம் .
துணையுடன் துவங்கிடும் நல்லறப் பயணம். .
வருங்காலத்திற்கு வசதிகள் சேர்க்கவும் ,
அறுபது கடந்ததும் அமைதியாய் வாழவும்
வியர்வை சிந்தியும், விவேகமாய் சிந்தித்தும்
உழைப்பை நல்கி உயர்ந்திடும் பயணம் .
சந்ததி பெருக்கிடும் சந்தோஷப பயணம் .
அவர்களை வளர்க்கும் ஆனந்தப் பயணம்.
பிள்ளைகளுக்கு இல்லறம் அமைத்திடும் பயணம் .
பேரக்குழந்தைகளுடன் பேரின்பப் பயணம் .
பெற்றோர் , உற்றோர் என உறவுகளுடன் பயணம்
நண்பர்கள் துணையுடன் நல்லதோர் பயணம் .
பணி ஓய்வு பெறும்வரை உழைத்திடும் பயணம் .
இனிமையாய் ஓய்வினை கழித்திடும் பயணம்.
பிறந்தவர் பயணம் இறப்பினில் முடியும் .
பாதையில் ஆயிரம் பயணியர் வருவார்
பாதியில் பலரும் பாதை மாறுவார் .
இறுதிவரையில் உடன் வருவார் எவருளர் .
முதலும் தெரியாது , முடிவும் தெரியாது .
இடையினில் சிலகால வாழ்க்கைப் பயணத்தில்
இனியது பேசி, இனியன செய்து
இயன்ற வரையில் உதவிகள் செய்து
இந்தப் பயணம் முடிவுற்றாலும் ,
இறந்தும் வாழ்வோம் பலரது மனதில்
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்