செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அரலை மகள் | முல்லையின் ஹர்வி

அரலை மகள் | முல்லையின் ஹர்வி

1 minutes read

பொழுதுகளை இனிமையாக்க
உணர்வுகளை பரிமாறிக் கொள்கிறது
நீலவானும் – வெண்முகிலும்

மட்கோல கோபுரத்தில்
நண்டுகள் கீறும் ஓவியங்களை
மண்ணுள் புதைந்திருந்து
ரசித்துக் கொண்டிருந்தது- மட்டி

வெண்ணுரை போர்த்தி
கரை தழுவ அலையாய்
நுரைத்துக் கொண்டிருந்தது
ஆழி நீர்…

ந(ர)கர ஊர்வலமாய்
சுடுமணலில் உயிர் மீன்களின்
விற்பனைச் சந்தை -எஞ்சியவை
காய்ந்த ஓலையின் மீதே
குடலற்றுத் தளர்கிறது

கைகள் நிரம்பி வழிய
சங்குச் சிப்பிகளை
சேர்கிறாள் – சிறுமி,
கவிழ்ந்த படகில்
மேல் நின்று
வால் நீண்ட பட்டத்தை
பறக்க விடுகிறான் – குறும்பன்

வானவிளக்கிற்கு போட்டியாக
துலங்கிக் கொண்டிருக்கிறது
கலங்கரை – விளக்கு

மறையும் சூரியனை மறு நாள் காண்பதற்கு
வாடிக் கொள்கிறது நீலாம்பல்

மரங்களின் உச்சியில் இருந்து
எட்டாத மீனுக்கு வீனித் தூண்டில்
போடுகிறது – மீன் கொத்தி

துளிர் காணாத
மரத்துக் கட்டையில் பாரமாகி,
கடல் உப்புக் காற்றின்
கறைபடிந்த சேலையில்
கூனிக் கிடக்கிறாள் நுளைச்சி

பூவும் பொட்டும்
மணம் விட்டகலாத
சாமப் பொழுதிலே
துடுப்பு, வலை சுமந்து
சென்றவனின் மீளாத நினைவுகளுக்காக….

உடலும் உணர்வும்
ஊமையாகிப் போனது
கண்கள் திறந்தபடியே
பார்வையற்றவளாகி,
விச ஒலிகளை கேட்டாக வேண்டிய
செவிட்டு காதுகளையும் மறந்து
தூது வரும் அலையிடம்
ஆவாவிக் கொள்கிறாள்
“கருகிய என் பொழுதில்
ஏதும் இனிப் பாதைகள் உண்டோ?
காரணம் தெரியும் அதற்கு
மொழிகளற்ற வெறுமையாய்
வந்து போகிறது மௌனித்து…

பாறையில் பிளந்த கல்லாகி
காத்திருக்கிறாள்
மீண்டும் வரும் அலையிடம்
வினவிக் கொள்ள!!!!

முல்லையின் ஹர்வி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.