
பேசிக்கொள்கிறார்கள்…
உன்னை அரியணை ஏற்றிய
மக்கள் உடல்களில்
ஒரு இலட்சத்து நாற்பதாயிரம்
ஆவிகள் இருப்பதாக…
பிரித் ஓதினாய்,
வெண்ணூல் கட்டினாய்,
தானம் கொடுத்து,
போதியில் காவியும் போர்த்தினாய்,
பின்னர்,
பிக்கு தரிசனம் செய்துமா,
ஆவிகளின்,
எக்காளம் உன்னைத் துரத்துகிறது?
துறவிகளின் கையில்
திருவோட்டுக்குப் பதிலாக
துப்பாக்கியைப் பரிசளித்தவன் நீ!
புல்லாசனத்துக்குப் பதிலாக
பாராளுமன்ற நாற்காலி
பரிசளித்தவன் நீ!
அவ்வாறிருந்தும்
அவர்களிலும் ஆவிகள் ஏறி
எப்படி உன்னைப் பயமுறுத்துகின்றன?
உன்னை விரட்டும் குரல்களில்
ஆவிகளின் பாஷையில்
எழுதப்பட்டிருப்பதாவது:
“வானமும் பூமியும்
காற்றும் கனலும்
குருதியால் தோய்ந்த,
மரணம் பெருகிய
வாய்க்கால் கரையில்,
காற்றினால் வேய்ந்த கல்லறையிலிருந்து
தலைநகர் வந்துள்ளோம்.
பிணங்கள் குவிந்து மலையாகிய
ஒரு இனத்தின்
ஒரு மொழியின்
ஒரு வரலாற்றின் சாட்சியாக வந்துள்ளோம்,
ஏனெனில், பதிலுக்காய்
ஓர் ஊழியை நிகழ்த்த!
உனது மக்களைக் கொண்டே,
உனக்கு அவமானமும்
ராச்சியப் பறிப்பும் செய்வோம்.
அந்தச் செய்தியை,
சூரியன் உதிக்காத ஒரு கரையில்
நிலவு கொழிக்காத ஒரு கரையில்
நாட்டுவோம்.
தலைநகரைத் திருவாலங் காடாக்கி
திரும்புவோம்”
செ.சுதர்சன் 09/07/2022