இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் உணவு உட்கொண்ட போது மூச்சுத் திணறி கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்ட 3 வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தியாகோ வால் (Thiago Wall) என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மிடில்டன் (Middleton) பகுதியில் இயங்கிவரும் ‘கோசி டோஸ் நர்சரி’ (Cosy Toes Nursery) ஆரம்ப பாடசாலையில் இம்மாதம் 2ஆம் திகதியன்று உணவு உட்கொள்ளும் போது தியாகோ உணவுத் துண்டு தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறியுள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கடந்த 5ஆம் திகதி அவர் ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் வைத்தியசாலையில் உயிரிழந்ததாக ராட்ச்டேல் கொரோனாஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளைக்குச் செல்லும் ஒட்சிசனின் அளவு குறைந்ததால் ஏற்பட்ட ‘ஹைபோக்சிஸ் மூளை காயம்’ (Hypoxic Brain Injury) காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததை ஸ்கேன் பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கோசி டோஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆரம்ப பாடசாலைகள் மற்றும் ஏனைய மூன்று கிளைப் பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சிறுவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஆரம்ப பாடசாலைக்கு வெளியே ஏராளமான குழந்தைகள் மலர்களையும், பொம்மைகளையும் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
“தியாகோ நர்சியில் டைனோசர் பொம்மைகளுடன் விளையாடுவதை மிகவும் விரும்புவான். நாங்கள் டைனோசர் விளையாடும் போதெல்லாம் உன்னை நினைவில் கொள்வோம்” என்று சிறுவனின் நண்பர்கள் எழுதியுள்ள உருக்கமான குறிப்புகள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
