செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை கூர்ப்படையும் மனிதர்… | பகுதி 1கூர்ப்படையும் மனிதர்… | பகுதி 1

கூர்ப்படையும் மனிதர்… | பகுதி 1கூர்ப்படையும் மனிதர்… | பகுதி 1

3 minutes read

உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலைக்கொண்ட ஒரே ஒரு கிரகமாக தற்போதுவரை ஏகோபித்த உரிமையை கொண்டாடிவரும் நாம் வாழும் பூமியானது தன்னகத்தே பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டு காத்துவருகிறது. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு கலத்தைக்கொண்ட அங்கியாக தோற்றம் பெற்ற உயிரின ஆட்சியானது இன்று பல சிக்கலான கட்டமைப்புகளையுடைய தாவரங்கள், விலங்குகளாக பரிணாம வளர்ச்சியடைந்து அவற்றின் உச்சமாக ஆற்றிவு படைத்த மனிதனை உருவாக்கியுள்ளது.

ஒவ்வொரு யுகத்திலும் ஏதாவது ஒரு உயிரினம் கூர்ப்பில் தான் பெற்ற சாதகமான இயல்புகளை கொண்டு ஏனைய இனங்களை விட தன்னை மேன்நிலைப்படுத்தி பூமியின் ஆட்சியான உயிரினமாக இருப்பதும் பின்னர் அவ்வினம் பூமியில் ஏற்பட்ட பாரிய எரிகற்களின் மோதுகை, எரிமலைக்குமுறல்கள், நிலநடுக்கங்கள், வெள்ளப்பெருக்குகள் போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அவற்றை தொடர்ந்து ஏற்பட்ட காலநிலை மாற்றங்களாலும் முற்றாக அழிவடைவதும் அவ்வெற்றிடத்தை இன்னுமொரு ஆட்சியான உயிரினம் இட்டு நிரப்புவதுமாக இருந்துவந்துள்ளது. அந்தவகையில் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் மனித இனமானது (Homo sapiens) இன்றுவரை தனது ஆட்சியை பூமியில் நிலைநிறுத்தியுள்ளது.

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மூலம் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ள இந்நவீன மனிதன் ஏனைய உயிரினங்களைவிட பூமியின் இயற்கைச் சமநிலையில் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். இம்மனிதன் எதிர்காலத்தில் கூர்ப்பில் எத்திசையில் பயணிப்பான் என்பதும் அப்போது அவன் தனது இனத்தின் மீதும் பூமியின் மீதும் எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்துவான் என்பதும் தொடர்பான கருத்துக்கள் பல ஆய்வாளர்களின் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது.

உயிரினங்களின் தோற்றம் அவற்றின் பல்வகைத்தன்மை தொடர்பாக அதுவரை காலமும் இருந்துவந்த – அதாவது பூமியிலுள்ள ஒவ்வொரு இனமும் தனித்தனியாக தோற்றம்பெற்றன என்றும் அவை நிலையானவை – என்றதுமான தவறான கொள்கைகளை சாள்ஸ் டாவினின் (Charles Darwin) ‘இயற்கைத் தேர்வு’ (Natural Selection) தொடர்பான கூர்ப்புக்கொள்கையானது தலைகீழாக மாற்றிவைத்தது.

அவர் 1859 ம் ஆண்டில் தனது ‘உயிரினங்களின் தோற்றம்’ (The Origin of Species) என்ற ஆய்வுநூலில் உயிரினங்கள் அனைத்தும் ஒரு பொதுவான ஆரம்பத்திலிருந்து தோற்றம் பெற்றே இயற்கைத்தேர்வினூடாக பல்வகைத்தன்மை பெற்றன என்றும் இச்செயன்முறையானது ஒரு தொடர்ச்சியான நிகழ்வென்றும் தனது முடிவினை முன்வைத்தார்.  அவரது இயற்கைத்தேர்வு கொள்கையானது பின்வருமாறு அமைகிறது.

• ஒரு குடித்தொகையிலுள்ள ஒவ்வொரு தனியனும் (individual) ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டது. அந்த வேற்றுமை (variation) ஆனது மரபுவழியாக அதன் எச்சங்களுக்கு கடத்தப்படக்கூடியது.

• சூழலுடன் ஒத்துவாழ முடியாத தனியனுக்கு சூழலில் அது எதிர்கொள்ளும் சவால்களிலிருந்து தப்பி உயிர்பிழைத்து இனப்பெருக்கத்திலீடுபடும் வாய்ப்பு மிகக் குறைவு. சூழலுடன் ஒத்து வாழும் தனியன் தப்பிப்பிழைத்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு தனது மரபுவழியாக பெறத்தக்க பண்புகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும். இச்செயன்முறையே இயற்கைத்தேர்வு முறையை உருவாக்குகிறது.

• இவ்வாறு மெதுவாக நடைபெறும் இயற்கைத்தேர்வு முறையானது குடித்தொகைகளில் சுற்றுச்சூழலுடன் ஒத்துவாழ்வதற்கான இசைவாக்கத்தை ஏற்படுத்துகிறது. இறுதியில் அக்குடித்தொகையில் சிறிது சிறிதாக தோற்றம்பெற்ற வேற்றுமைகளானது புதிய இனத்தோற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்த வகையில் மனிதன் அவனது மூதாதையர்களான மனிதக் குரங்கிடம் இருந்தே கூர்ப்படைந்தான் என்ற கருத்து, டாவினின் கொள்கையின் பின் முன்வைக்கப்பட்டது. இதற்கு தோமஸ் ஹக்ஸ்லி (Thomas Huxly) என்ற ஆய்வாளரின் கருத்தும் வலுச்சேர்த்தது.

ஆனால் டாவினின் கோட்பாடானது ஒரு உயிரினம் தனது பண்புகளை எப்பொறிமுறையினால் அதனது எச்சங்களுக்கு கடத்துகிறது என்பதையும் விலங்குகளில் காணப்படும் சிக்கலான கட்டமைப்பையுடைய அங்கங்கள் (organs) எவ்வாறு மெதுவாக நடைபெறும் இயற்கைத்தேர்வு முறையினால் உருவாக்கம் பெற்றன என்பதையும் விளக்க தவறிவிட்டது. டாவினின் கொள்கையை ஆதரித்த பலரில், முக்கியமாக அல்ஃரட் ரசல் வலஸ் (Alfred Russel Wallace) உம் சாள்ஸ் லயல் (Charles Lyell) உம் மனிதனின் தனித்துவமான பண்புகளான மனவாற்றலையும் தார்மீக பண்புகளையும் இயற்கை தேர்வு முறையால் விளக்கப்படுத்த முடியாது என்ற வாதத்தை முன்வைத்தார்கள்.

இதற்கு சரியான பதில் கிடைக்கப் பெறாவிட்டாலும் இதன்பின்னர் 1936 – 1947 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல உயிரியலாளர்களின் உதவியுடன் டாவினின் இயற்கைத்தேர்வு கொள்கையானது மரபியல் (genetics), தொல்லுயிரியல் ஆய்வு (paleontology), உயிரியல் ஒழுங்குமுறைகள் (biological systematics) என்பவற்றுடன் இணைக்கப்பட்டு நவீன டாவினின் கோட்பாடு/ நவீன பரிணாமத் தொகுப்பு (Neo-Darwinism/ The Modern evolutionary synthesis) உருவாக்கப்பட்டது. இக்கோட்பாட்டின்படி ஒரு தனியனுடைய பண்புகள் அதன் எச்சங்களுக்கு மரபணுமாற்றுமுறை (genetic transfer) மூலம் கடத்தப்படுவதினாலேயே கூர்ப்பு நடைபெறுவதாகவும் இம்மரபணு மாற்றுமுறையானது இயற்கைத் தேர்வு, மரபணுவின் நகர்வு (genetic drift), பிறழ்வு (mutation), பரம்பரைஅலகின் ஓட்டம் (gene flow) என்ற காரணிகளாலேயே தீர்மானிக்கப்படுவதாகவும் கொள்ளப்பட்டது.

நவீன டாவினின் கோட்பாட்டினைக்கொண்டு ஆய்வாளர்கள் பூமியில் ஒருகல அங்கியின் தோற்றத்திலிருந்து சிக்கலான கட்டமைப்பைக் கொண்ட மனிதன் வரை எவ்வாறு பரிணாமவளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை பல்வேறு யுகங்களாகப் பிரித்து ஆராய்ந்து ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளார்கள். அந்த வகையில் எவ்வாறு மனிதக்குரங்கிலிருந்து பலபடிநிலை மாற்றங்களினூடாக நவீன மனிதன் உருவானான் என்பதை சற்று நோக்கினால்,  Homo sapiens sapiens எனும் இனமே இப்போது Homo என்ற சாதியில் (genus) எஞ்சியுள்ள ஒரே ஒரு இனமாகும். ஆதாரங்களின்படி மனிதனின் ஆதி மூதாதையரான Homo habilis எனும் இனம் 2.4 – 1.4 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தெற்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் தோற்றம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து H.rudolfensis (1.9-1.6Ma), H.erectus (1.8 Ma- 70000 வருடங்களுக்கு முன்), H.antecessor (1.2Ma – 500ka), H.rhodesiensis (300ka- 125ka) H.neanderthalensis (40000 – 30000 வருடங்களுக்கு முன்) என பலபடிநிலைகளினூடாக பரிணாமமடைந்து நவீன மனிதன் உருவாகியுள்ளான். இவற்றிலே H.erectus உம் H.neanderthalensis உம் குறிப்பிட்ட காலப்பகுதியில் H.sapiens உடன் சமகாலத்தில் வாழ்ந்ததற்கான தொல்லுயிரியல் ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

இதில் H.neanderthalensis ஆபிரிக்காவுக்கு வெளியே முக்கியமாக ஐரோப்பா மற்றும் ஆசியாவிலேயே  தோற்றம் பெற்றதாகவும் ஆபரிக்காவை விட்டு வெளியேறிய நவீன மனிதன் இவ்வினத்துடனும் இனக்கலப்பில் ஈடுபட்டதாகவும்  தற்போதைய ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பின்னர் இவ்வினங்கள் நவீன மனிதனுடன் ஏற்பட்ட போட்டியின் காரணமாக அழிவடைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.

நவீன மனிதனுக்கும் அவனது மூதாதையினருக்கும் இடையேயுள்ள பிரதான வேற்றுமைகள் என்னவென்றால் அவை மனித மூதாதையர் கொண்டிராததும் நவீன மனிதன் கொண்டுள்ளதுமான நிமிர்ந்த தோற்றமும் அதீத நுண்ணறிவுமேயாகும். நுண்ணறிவு வளர வளர மனிதன் கருவிகளை பயன்படுத்த ஆரம்பித்ததோடு நாகரீகமாகவும் வாழப்பழகிக் கொண்டான். இன்று விஞ்ஞான அறிவோடு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான்.

 

 

தொடரும்……

 

 

நன்றி : பொ. மனோ | பதிவுகள் இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.