பாரிஸில் நடைபெற்றுவரும் 2023 உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கை பரா வீரர் சமித்த துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
பாரிஸில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஆண்களுக்கான F42/43/44/64 ஆகிய பிரிவுகளுக்குரிய ஈட்டி எறிதல் போட்டியில் 64.06 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து சமித்த துலான் கொடிதுவக்கு (F44) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
அப் போட்டியில் இந்தயாவின் சுமித் (F64) உலக சாதனையுடன் (70.83 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும் அவுஸ்திரேலியாவின் பியூரியன் மைக்கல் (F44) வெள்ளிப் (65.21 மீற்றர்) பதக்கதையும் வென்றனர்.

பாரிஸில் நடைபெறும் உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றும் 3 வீரர்கள் அடங்கிய இலங்கை குழுவுக்கு டயலொக் ஆசிஆட்டா அனுசரணை வழங்குகிறது.
பராலிம்பியர்களான தினேஷ் ப்ரியன்த (F46), சமன்த துலான் கொடிதுவக்கு (F44), 1500 மீற்றர் தேசிய பரா சாதனையாளர் ப்ரதீப் சோமசிறி ஆகியோரே பாரிஸ் 2023 உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றுகின்றனர். அணி பயிற்றுநராக ப்ரதீப் நிஷான்த செயற்படுகிறார்.
டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் தினேஷ் ப்ரியன்த தங்கப் பதக்கதையும் (67.79 மீற்றர்), சமித்த துலான் வெண்கலப் பதக்கத்தையும் (65.61 மீற்றர்) வென்றிருந்தனர்.
பாரிஸ் உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் 60 நாடுகளைச் சேர்ந்த பரா விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.