செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை அந்நியர்களின் வருகை! | பகுதி 1அந்நியர்களின் வருகை! | பகுதி 1

அந்நியர்களின் வருகை! | பகுதி 1அந்நியர்களின் வருகை! | பகுதி 1

2 minutes read

முற்குறிப்பு : இக்கட்டுரையில் உள்ளடங்கியிருக்கும் தகவல்கள் ஒருசாராருக்கு தமது வாழ்நாளில் கேள்விப்பட்டிராத, ஒரு சுத்தப் பைத்தியக்காரத்தனமான, நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விடயமாக தோற்றமளிக்கலாம். ஆனால் இது சம்பந்தமான ஆர்வமுள்ள மறுசாராருக்கு ஒரு புதுச்சிந்தனை ஓட்டத்தை தூண்டிவிடுவதாக இருக்குமென்பதுடன் இக்கட்டுரை ஒரு விருந்தாகக்கூட அமையலாம். அவையெல்லாம் அவரவர்கள் கொண்ட அறிவையும் அதில் ஊற்றெடுக்கும் சிந்தனைகளின் பரிமாணங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இங்கு நான் வேற்றுகிரக உயிரினங்கள் உண்டு என்று அவற்றின் இருப்பை நிறுவ வரவில்லை. இக்கட்டுரை அத்தளத்தினை தாண்டி அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பைப்பற்றி ஆதாரங்களுடன் விபரிக்க முற்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் எமது சிற்றறிவுகொண்டு இப்பரந்த முடிவற்ற பிரபஞ்சத்திலே வேற்றுக்கிரக உயிரினங்களின் இருப்பை மறுப்பது இப்பூமியிலே மனிதனது இருப்பை மறுப்பதற்கு ஒப்பானது.

மர்மமான பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects – UFO) தொடர்பாகவும் அதில் பயணிப்பதாக நம்பப்படும் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாகவும் நாளுக்கு நாள் புதுப்புது விடயங்கள் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும்  வெளிவந்த வண்ணமேயுள்ளன. பெரும்பாலான பறக்கும் பொருட்கள் ‘பறக்கும் தட்டுகள்’ (flying saucers) போன்றே  தோற்றமளிக்கின்றன. இந்த பறக்கும் தட்டுகள் தொடர்பான கதைகள் இன்று நேற்றல்ல அது பல நூற்றாண்டு காலமாக இருந்துவருகின்ற ஒரு மர்மமாகும்.

இவை எங்கிருந்து வருகின்றன? இதில் பயணிக்கும் அந்நியர்கள் எப்படியானவர்கள்? அவர்கள் பூமிக்கு வருவதன் நோக்கமென்ன? அவர்களுக்கும் மனிதர்களுக்குமுள்ள தொடர்பு என்ன? அவர்களுடைய தொழிநுட்பம் எத்தகையது? போன்ற பல கேள்விகள் விடையின்றி விரிந்துகொண்டெ செல்கின்றன.

இவ்வாறிருக்கையில் அமெரிக்காவின் ரொஸ்வெல் எனும் பிரதேசத்தில் 1947ம் ஆண்டு நடந்த ஒரு மிக முக்கியமான சம்பவம், பறக்கும் தட்டுகள் தொடர்பாகவும் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாகவும் இருந்து வந்த மர்மத்தை மேலும் அதிகரித்ததுடன், உலக மக்களிடையே பறக்கும் தட்டுகள் தொடர்பான ஆர்வத்தையும் பெருமளவில் கிளறிவிட்டது. அந்நிகழ்ச்சியின் பின்னர் அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள் பறக்கும் தட்டுகள் தொடர்பான கருத்தியலுக்கு மேலும் வலுச்சேர்த்து, அது தொடர்பான பல ஆய்வுகளுக்கும் வழிகோரியது.

1947ம் ஆண்டு ஜுலை மாதம் நியுமெக்சிகோவில் அமைந்துள்ள ரொஸ்வெல் எனும் நகருக்கு அண்மையிலுள்ள பண்ணை ஒன்றில் அதிகாலையில் பெரும் சத்தத்துடன் மர்மமான பறக்கும் பொருளொன்று விழுந்து நொருங்கியது. இதனை பண்ணைக்கு அருகிலுள்ள பலர் கண்டு அருகில் சென்றுபார்த்தபோது தாம் அதுவரை கண்டிராத மர்மமான தட்டுப் போன்ற வடிவுடைய பொருளொன்று விழுந்து கிடப்பதையும் அதற்கு சற்று அப்பால் வீசுண்ட நிலையில் மூன்று விசித்திரமான அமைப்புடைய குள்ள மனிதர்கள் கிடப்பதையும் கண்டுள்ளனர்.

அதற்குள் இச்சம்பவம் தொடர்பாக அப்பண்ணையின் உரிமையாளர் அருகிலிருந்த விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கவே, சிறிது நேரத்தில் அங்கு வந்த விமானப்படையினர் சேதமடைந்து கிடந்த பறக்கும் தட்டையும் அதன் அருகில் வீழ்ந்து கிடந்த குள்ளமனிதர்களின் உடல்களையும் மிகவேகமாக அகற்றி தமது தளத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர். இதிலே ஒரு குள்ளமனிதன் உயிருடன் காணப்பட்டதாகவும் அச்சம்பவத்தை நேரில் கண்ட பலர் தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர் 1947ம் ஆண்டு ஜுலை 8ம் திகதி இச்சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ரொஸ்வெல் விமானப்படைத் தளத்தின் (Roswell Army Air Field – RAAF) தகவல் தெரிவிக்கும் அதிகாரி வோல்டர் ஹோட் (Walter Haut) பத்திரிகைக்கான செய்தி வெளியீட்டில் தங்களது 509 வது படைப்பிரிவு ரொஸ்வெலுக்கு அருகிலுள்ள பண்ணையொன்றில் இருந்து, விழுந்து சேதமடைந்து காணப்பட்ட ‘பறக்கும் தட்டு’ ஒன்றை மீட்டெடுத்ததாக குறிப்பிட்டார்.

இச்செய்தி பத்திரிகைகளில் மிகப்பரபரப்பாக அச்சமயம் பேசப்பட்டது. ஆனால் இதற்கு மறுநாள் பத்திரிகைகளுக்கு கருத்து தெரிவித்த விமானப்படைப் பிரிவின் கட்டளையிடும் அதிகாரி ரோஜர் எம்.ரமே (Roger M.Ramey) ரொஸ்வெலில் கைப்பற்றப்பட்டது பறக்கும் தட்டல்லவெனவும் அது வானநிலை பற்றிய ஆய்வுக்காக ஏவப்பட்ட ஒரு பலூனே (weather balloon) எனவும் கூறி மழுப்பியிருந்தார்.

அதன்பின்னர் ரொஸ்வெல் சம்பவம் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வெளியிட்டுவந்த பல ஆய்வறிக்கைகள், அவற்றில் முக்கியமானது மோகுல் கருத்திட்டம் (Project Mogul), அச்சம்பவத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்ததுடன் இடையிடையே அது தொடர்பாக வெளிவரும் தகவல்களும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

தொடரும்…

நன்றி : பதிவுகள் இணையம் |  பொ.மனோ

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.