என் சிங்கள தோழர்களே
எங்கள் போராட்டம் மௌனிக்கப்படலாம்
எங்கள் வரலாறு சிதைக்கப்படலாம்
எங்கள் வரலாறு புனையப்படலாம்
எம் இனம் அழிக்கப்படலாம்
எங்கள் அடையாளங்கள் தகர்க்கப்படலாம்
என்னருமை தோழர்களே – உங்கள்
சிந்தனைகளையும் ஆற்றல்களையும்
வளர்த்துக்கொள்ளுங்கள்
தொல்லியல் தடவியல் பூரண
அறிவினை வளர்த்திடுங்கள்
என்றோ ஒரு நாள் எம் இனம்
மீண்டும் புதைக்கப்படலாம்
எம் சடலங்கள் உங்களுக்காய்
காத்திருக்கும்
அங்கே நான் வெள்ளை
கொடியுடன் உறங்கலாம்
என் பிள்ளை பொலுத்தீன்
பைக்குள் உறங்கலாம்
என் தாய் தந்தை மனைவி
தலைகள் சிதைக்கப்பட்டு
உடல்கள் நசுக்கப்பட்டு
புதைக்கப்படலாம்
என் தோழன் இராணுவ
ஊர்தியால் மோதுண்டு
இறந்துபோகலாம்
என் தோழி வன்புணரப்பட்டு
சிதைந்து போகலாம்
என் சொந்தங்கள்
விசாரணையின் பெயரில்
புதைக்கப்படலாம்
இவ்வாறு நடந்தே தீரும்
இலங்கைத்தீவில் ஒரு
தமிழ் தேசம் இருந்தது
அது இன வன்முறைகளால்
அழிக்கப்பட்டது
என உலக அரங்கில்
உரைப்பீர்களா……?
மண்ணுக்குள் புதைத்தாலும்
போராடுவோம் – ஆனாலும்
தோற்றுவிடுவோமோ
என்ற அச்சம் கொள்கிறது – என்னுள்
என் பரம்பரை வாழ
உயிரோடு ஒருவரையேனும்
மிச்சம் விட்டிருந்தால்
அன்று
என் ஈழம் வந்தால் பாருங்கள்
புதிதாக முளைத்த புத்தன்
என் மார்பிலேறி
உங்களை ஆசீர்வாதிக்கக்கூடும்
என் உதிரத்தின் முகர்ச்சியில்
எழுந்து செல்ல மறுக்கக்கூடும்
என்றாலும் என் தேசம் பெரிது
என் தேசம் அழகானது
தோற்றுப்போகாமல் – நாம்
இருந்தால் உணர்வீர்கள்
இல்லையெனில் எமக்காய்
மாயமாகிய என் தேச சேதி
உரைப்பீராக..!
கேசுதன்