இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான சர்வதேச அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் தனது முயற்சி தோல்வியடைந்தால், பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்க முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரென் ஃபேபியஸ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், இஸ்ரேல், பாலஸ்தீனம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய, அரபு நாடுகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்துள்ளோம்.
எங்களது இந்த முயற்சி தோல்வியடைந்தால் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.
பாலஸ்தீனப் பிரச்னைக்கு “இரு நாடுகள்’ தீர்வே சரியானது என்று பிரான்ஸ் கூறி வந்தாலும், பாலஸ்தீனத்துக்கு உடனடியாக தனி நாடு அந்தஸ்து வழங்கத் தயங்கி வந்தது.
அணுசக்தி விவகாரத்தில் வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சர்வதேச முயற்சியின் பலனாக, சிரியா உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையும் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்தச் சூழலில், நீண்டகாலமாக நிலவி வரும் பாலஸ்தீனப் பிரச்னைக்கும் சர்வதேச நாடுகளின் முயற்சியில் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.