சினிமா துறையில் உலகின் மிகப்பெரிய விருதாக மதிக்கப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இம்மாதம் 28-ம் தேதி அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் உள்ள ஹைலேன்ட் சென்டரில் நடைபெறுகிறது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே இந்த விருதுக்கான படங்கள் மற்றும் நடிகர், நடிகையர் உள்ளிட்ட கலைஞர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
88-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் பங்கேற்பார் என விருது கமிட்டி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆஸ்கர் விருது விழாவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, விருதுகளை அளிப்போரின் பெயர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலில் பிரியங்கா சோப்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க திரைப்பட நடிகர்கள் பேரவையின் (SAGA) விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் நடிகருக்கான விருதினை நடிகர் பெட்ரோ பஸ்கல் என்பவருக்கு அளித்த பிரியங்கா சோப்ரா, ‘குவான்ட்டிகோ’ தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியமைக்காக அமெரிக்க மக்களின் சிறந்த தேர்வு (People’s Choice Awards) என்ற விருதினை கடந்த மாதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.