கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சமஅளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போகோஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கின்றனர். இவர்களால் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நிலை என்னவாயிற்று? என்பது தொடர்பான எவ்வித விபரமும் தெரியாத நிலை நீடித்து வருகிறது.
வடக்கு நைஜீரியாவில் உள்ள சில சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ள போகோஹரம் தீவிரவாதிகள், தற்போது, வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரான மைடுகுரியை கைப்பற்றும் நோக்கத்தில் அவ்வப்போது இப்பகுதியில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள இரண்டு கிராமங்களுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த போக்கோஹரம் தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், கழுத்தை அறுத்தும் அப்பாவி பொதுமக்கள் 30 பேரை கொன்று குவித்துள்ளனர்.
யாக்ஷாரி கிராமத்துக்குள் புகுந்த போக்கோஹரம் தீவிரவாதிகள் 22 பேரின் கழுத்தை அறுத்துக் கொன்றனர். அருகாமையில் உள்ள கச்சிபா கிராமத்துக்குள் புகுந்து 8 பேரை சுட்டுக் கொன்றனர். இரு கிராமங்களிலும் மக்கள் சேமித்து வைத்திருந்த உணவுப் பொருட்களை நாசப்படுத்தி, அங்கிருந்து கால்நடைகளையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆறாண்டுகளாக நடைபெற்றுவரும் போகோஹரம் தீவிரவாதிகளின் வெறியாட்டத்துக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிமானோர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.