:உலகின் தென் துருவப் பகுதியான, அண்டார்டிகா, பெங்குயின் பறவைகளுக்கு புகழ் பெற்றது. இங்கு, 2010ம் ஆண்டில், 1.60 லட்சம் பெங்குயின்கள் இருந்தன; இது, தற்போது, 10 ஆயிரமாக சுருங்கி விட்டதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு, மிகப் பெரிய அளவில் ஏற்பட்ட, பனிப்பாறை சரிவு தான் காரணம்’ என, ஆஸ்திரேலியாவின், நியூசவுத் வேல்ஸ் பல்கலையின் பருவ நிலை மாறுபாடு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பனிப்பாறைகள் சரிந்து, 1,120 சதுர மைல் பரப்பிலான பகுதியை மூடிவிட்டன; இது, ஐரோப்பாவில் உள்ள, ரோம் நகரம் அல்லது லக்சம்பர்க் நாட்டின் பரப்பளவிற்கு ஈடான பகுதியாகும். நீர் சூழ்ந்த பகுதி, பனிக்கட்டி பகுதியாக மாறியிருப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
மூடிய பனிக்கட்டி, 2 கி.மீ., கனத்தில் உள்ளதால், அதன் அடியில் உள்ள நீரில் இருந்து, மீன், இறால் போன்ற உணவை உண்ண வழியின்றி, பெங்குயின்கள் இறந்துள்ளன. பல பெங்குயின்கள், தண்ணீர் மற்றும் இரையைத் தேடி, 70 மைல்களுக்கும் அப்பால் செல்லும் போது, மடிந்துள்ளன.
பனிப்பகுதி உடைந்து, நீர் தென்பட்டால் தான், எஞ்சியிருக்கும் பெங்குயின்களாவது பிழைக்கும்; இல்லையெனில், அடுத்த, 20 ஆண்டுகளில், பெங்குயின் என்ற பறவையே இருக்காது என, ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.