இலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி 8–ந் தேதி நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். மைத்ரிபாலா சிறிசேனா புதிய அதிபர் ஆனார்.
அதை தொடர்ந்து ராஜபக்சே ஆட்சியில் நடந்த ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலமாகி வருகின்றன.
ராஜபக்சே அவரது தம்பிகள், மகன்கள் மற்றும் மனைவி மீது ஊழல் புகார்கள் குவிகின்றன. இந்த நிலையில் தற்போது புதிய மோசடி அம்பலமாகியுள்ளது.
ராஜபக்சே ஆட்சியின் போது இலங்கையை சுற்றியுள்ள பல தீவுகள் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியாருக்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கற்பிட்டி பகுதியில் 25 தீவுகள் உள்ளன. அவற்றில் 14 தீவுகள் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 தீவுகளையும் தற்போதைய அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சஜீவ சாம்கர தெரிவித்துள்ளார். இந்த தீவுகளை சுற்றி 2,600 மீனவ தலங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் இழக்கக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ராஜபக்சே ஆட்சியின் போது பெரிய அளவில் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.