இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் காட்டில் தற்போது பெரு மழைதான். இவருடைய படங்கள் வரிசையாக ஹிட் ஆவதால், தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், தற்போது ‘எனக்கு இன்னோர் பேர் இருக்கு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஏற்கெனவே நிக்கி கல்ராணி ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது இன்னொரு நாயகியாக அவிகா கோர் என்ற பாலிவுட் நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.
அவிகா கோர், பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகவுள்ளார். தற்போது இப்படத்திற்கான லொகேஷன் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் ஏற்கெனவே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் ஆனந்தி, மனிஷா யாதவ் என இரு நாயகிகளுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது, மீண்டும் இந்த படத்தில் இரண்டு நாயகிகளுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.