ஆஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கு கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேச்சை மற்றும் சிறு கட்சிகளை சேர்ந்த செனட்டர்கள் கணிசமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் பாராளுமன்றத்தில் அரசு கொண்டு வரும் மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதனால் உயர்கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளுக்கான சீர்திருத்த மசோதாக்கள் முடங்கியுள்ளன.
எனவே பாராளுமன்ற தேக்க நிலையை தடுக்க முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் மால்கம் டர்ன்பல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக தேர்தல் சீர்திருத்த மசோதா ஒன்றை நேற்று பாராளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவின்படி சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் இடம்பெறுவதை கட்டுப்படுத்த வழிவகை செய்யப்படும். பிரதமரின் இந்த நடவடிக்கை சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகளை சேர்ந்த செனட்டர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் இதைத்தவிர பிரதமருக்கு எந்த வழியும் இல்லை என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என அவர்கள் கூறியுள்ளனர்.