எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவரது மகன் ராமச்சந்திரன், ‘கபாலி தோட்டம்’ என்ற படத்தில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை டி.ஆர். பாஸ்கர் இயக்குகிறார்.
புதுமுகம் விக்கி, எம்.ஜி.ஆர். பேரன் ராமச்சந்திரன் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அனிஷா நடிக்கிறார். கோலிசோடா வில்லன் மது, கே.ராஜன், ரோபோ சங்கர், நெல்லை சிவா உள்பட பலர் நடிக்கிறார்கள். இசை – யு.கே.முரளி.
‘கபாலி தோட்டம்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர்கள் பேரரசு, சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
நடிகர் ஆனது குறித்து ‘கபாலி தோட்டம்’ படத்தில் நடிக்கும் எம்.ஜி.ஆர். பேரன் ராமச்சந்திரனிடம் கேட்ட போது…
‘எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தன்று ராமாவரம் தோட்டத்தில் அன்னதானம் செய்து கொண்டிருந்தோம். அப்போது, அங்கு வந்த இயக்குனர் பாஸ்கர் எனது அம்மாவிடம் என்னை நடிக்க வைக்க விரும்புவதாக கூறினார். நான் ஒப்புக் கொண்டேன். கதை சொன்னார். கபாலி தியேட்டர் இருந்த கபாலி தோட்டம் பகுதியை மையப்படுத்திய கதை. எனவே கபாலி தோட்டம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் எனக்கு ‘நெகட்டிவ் ரோல்’ என்றாலும் மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன். நான் ஒரு வயது சிறுவனாக இருந்த போது எனது தாத்தா எம்.ஜி.ஆர். என்னை அவரது மடியில் உட்காரவைத்து நீயும் என்னைப்போல் பெரிய ஆளாக வரவேண்டும் என்று வாழ்த்தினார். அவரைத்தான் நான் கடைபிடிக்கிறேன். இயக்குனர் சொன்னதை செய்கிறேன்’ என்றார்.