செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய ‘கவனயீர்ப்பு போராட்டத்துக்கான’ அழைப்பு

நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய ‘கவனயீர்ப்பு போராட்டத்துக்கான’ அழைப்பு

3 minutes read

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய ‘கவனயீர்ப்பு போராட்டத்துக்கு’ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது எமது அழகிய தீவு. நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளில் சிக்கி, நாளாந்தம் மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது என்பது எமது மக்கள் அனைவரும் அறிந்ததே.

நெடுந்தீவில் சராசரியாக 1418 குடும்பங்கள் உள்ளன. அவற்றில், இதுவரை காலமும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு 688 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. தற்போது 200 குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், மீதமுள்ள 488 குடும்பங்களுக்கு நெடுந்தீவு மேற்கு சாராப்பிட்டியில் இருந்து நீர் வழங்கப்படுகின்ற போதும், அந்நீர் பயன்படுத்த முடியாத நிலையில் உவர்த்தன்மை கொண்டதாக காணப்படுகின்றது. இதை விட மீதமுள்ள 730 குடும்பங்களின் வீடுகளுக்கு நீர் இணைப்பு இல்லாத நிலையில், அவர்களும் சாராப்பிட்டி நீரையே நம்பியிருக்கின்றனர்.

சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் லீற்றருக்கும் அதிகமான நீர் சாராப்பிட்டியில் இருந்து நுகரப்படுகின்றது. கடந்த வருட இறுதியில் சராசரிக்கும் மிக அதிக அளவில் மழை பெய்து, மூன்று மாதங்கள் கடப்பதற்குள் சாராப்பிட்டி நீர் உவர் நீராக மாறியமை, ஒரு முறையற்ற ‘நீர்ச் சுரண்டல்’ அங்கு இடம்பெறுவதையும், நன்னீருடன் கடல் நீர் கலந்து நிலத்தடி நீர் ஆபத்தான கட்டத்திற்குள் உள்ளமையையும் கோடிட்டுக் காட்டுகின்றது.

நெடுந்தீவின் கடல் போக்குவரத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய பாரிய கடப்பாடு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உள்ளது. குமுதினி, வடதாரகை, நெடுந்தாரகை ஆகிய மூன்று கடற்கலன்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரியதாகும். அதில் வடதாரகை திருத்த வேலைக்காகக் கொண்டு சென்றுள்ள நிலையில், நெடுந்தாரகை பழுதடைவது மீண்டும் ஓடுவது என நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

50 வருடங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபட்ட குமுதினி கடந்த மூன்று மாதங்களாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தது தொடக்கம் இன்று வரை நான்கு தடவைக்கு மேல் குமுதினி திருத்த வேலைக்காகக் கொண்டுசெல்லப்பட்டு, பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்த வேலைகளில் ‘எஞ்சின்’ மாற்றுதல் போன்ற பாரிய மாறுதல்கள் ஏதும் இதுவரை இடம்பெறவில்லை.

நெடுந்தீவு மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்த குமுதினியை வீதி அபிவிருத்தி அதிகார சபை பாராமுகமாக தூர எறிந்துள்ளது. இச்செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தவிர, நாளாந்தம் 100 பேருக்கும் அதிகமான அரச ஊழியர்கள் நெடுந்தீவுக்கு வருகை தருகின்றனர். ஊர் மக்கள் நாளாந்தம் பயணம் செய்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். தனியார் படகுகளும் இங்கு பலமான நிலையில் இல்லை.

எனவே, கடற்போக்குவரத்தில் திருப்தியான சேவையை வழங்கவேண்டிய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பற்ற, மனிதாபிமானமற்ற செயலை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, துறைமுகத்திலும் கப்பல்களிலும் பயணம் செய்யும் எமது மக்கள் இம்சிக்கப்படும் செயலை வெறுக்கின்றோம், அருவருக்கின்றோம்.

நெடுந்தீவில் க.பொ.த உயர்தரத்தில் கல்வியைப் போதிக்கும் மூன்று பாடசாலைகள் உள்ளன. நீண்ட காலமாக கலைப் பிரிவுக்குரிய பாடங்களே உயர்தரத்தில் கற்பிக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் கலைப்பிரிவைக் கூட, திருப்தியான முறையில் கொண்டு நடத்தத் தேவையான ஆசிரியர் வளம் என்பது போதியளவில் இல்லை. உயர்தரத்தில் வரலாறு, புவியல் இந்து நாகரிகம், அரசறிவியல், போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாத நிலை காணப்படுகின்றது. தமிழ் பாடத்திற்கு ஒரு ஆசிரியரே வாரத்தில் மூன்று நாட்கள். ஒரு பாடசாலையிலும், வாரத்தில் இரண்டு நாட்கள் பிறிதொரு பாடசாலையிலும் கற்பிக்கவேண்டிய கட்டாயச் சூழல் உள்ளது.

மேலும், க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரத்தில் சித்திரம், நடனம் ‘தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்’ (ICT) மற்றும் உயர்தரத்தில் ‘பொது தகவல் தொழிநுட்பவியல்’ (GIT) என்பன பாடமாக உள்ளபோதும், ஆசிரியர்கள் இல்லை. ஆரம்பப் பிரிவில் இரண்டு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையிலும் பாடசாலை உள்ளது. இந்ந நிலையில் நெடுந்தீவு கல்வியின் எதிர்காலம் தான் என்ன?

நெடுந்தீவு மேற்கு பிரதான வீதி கட்டம் கட்டமாக திருத்தப்பட்டு தற்போது 2 கிலோ மீற்றர் தூரம் இன்னும் திருத்தப்படாது பாரிய குன்றும் குழியுமாக உள்ளது. நெடுந்தீவு மேற்கு மக்களாகிய நாம் வைத்தியசாலை, பிரதேச சபை, பிரதேச செயலகம் போன்ற அரச திணைக்களங்களில் நாளாந்த தேவைகளை நிறைவேற்றவும் பயணம் மேற்கொள்ளவும் இதர தேவைகளுக்காகவும், நெடுந்தீவு கிழக்கு நோக்கி வரவேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் நெடுந்தீவு மேற்கு பிரதான வீதியை முழுமைப்படுத்தாது இழுத்தடிக்கும் செயற்பாட்டை மக்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இறுதியாக, நெடுந்தீவு பிராந்திய வைத்தியசாலையில் பின்வரும் குறைபாடுகள் உள்ளன. நிரந்தரமான மருந்துக் கலவையாளர் இல்லாத நிலையில் இதுவரையில் ஞாயிற்றுக் கிழமைகளிலும், பொது விடுமுறை நாட்களிலும் மு.ய 8.00 மணியில் இருந்து மு.ப 10.00 மணி வரை இயங்கிய வைத்தியசாலை இந்நாட்களில் முழுமையாகவே இயங்குவதில்லை. ஏனைய ஆறு நாட்களிலும் மருந்துக் கலவையாளர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து மருந்து கொடுத்து விட்டு மதியம் திரும்புவதால் பி.ப 2.00 மணியில் இருந்து 4.00 மணி வரை வைத்தியசாலை இயங்குவதில்லை. அவசரமாக மருத்துவம் தேவைப்படுகின்றவர்கள் வைத்தியசாலையில் தங்கித் தான் சிகிச்சை பெறவேண்டும்.

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு இரண்டு மருத்துவ மாதுக்கள் இருக்கவேண்டும். ஆனால் தற்போது ஒரு மருத்துவ மாது மட்டுமே கடமையில் உள்ளார். ஆறு பரிசாரகர்கள் (Attndans) இருக்க வேண்டிய நிலையில் தற்போது மூன்று பேர் மாத்திரமே உள்ளனர். சுகாதாரப் பணி உதவியாளர்கள் 08 பேர் இருக்கவேண்டிய நிலையில் தற்போது 04 பேர் மாத்திரமே உள்ளனர். கடந்த காலங்களில் வெள்ளி அல்லது புதன் கிழமைகளில் நடைபெற்ற பற்சிகிச்சை தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கென நிரந்தர சமையலாளர் இல்லை. DO இல்லை. MOHஇன் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை. தற்போதைய நிலையில் வைத்தியசாலையில் குடிநீர்த் தட்டுப்பாடு பாரிய பிரச்சினையாக உள்ளது.

இவ்வாறான குறைபாடுகளின் மத்தியில் நெடுந்தீவு மக்களின் வாழ்வியல் பாரிய சவாலாக மாறியுள்ளது. நெடுந்தீவு மக்களின் நியாயமான விருப்பங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வெறும் உறுதிமொழிகள் மாத்திரமே எஞ்சியுள்ளன.

இந்த நிலையில் நெடுந்தீவில் உள்ள மக்கள் மற்றும் மக்களைப் பல்வேறு வகையில் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்து ஒரு பொது வேலைத்திட்டத்திற்குள் செல்லவேண்டிய வரலாற்றுத் தேவை உருவாகியுள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்படி, பொறுப்புக்கூற வேண்டிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தை வலியறுத்தி 2026.04.24 அன்று வெள்ளிக்கிழமை ஜனநாயக விழுமியங்களை அடியொற்றி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கமைப்பட்டுள்ளது என்பதை நெடுந்தீவிலும், நெடுந்தீவுக்கு வெளியிலும் வசிக்கின்ற எமது மக்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களுக்கும் நாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றோம். இச்செயற்பாட்டுக்கு பூரண ஆதரவு வழங்குமாறு எமது மக்களை நாம் வினயமாக கேட்டு நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.