சட்டவிரோத குடியேறிகளின் பெருமளவிலான வருகை பதிவாகும் சந்தர்ப்பங்களில், ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோருவதற்கான உரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என கிரேக்க குடியேற்றம் மற்றும் புகலிட விவகாரங்களுக்கான அமைச்சர் தானோஸ் பிளெவ்ரிஸ் முன்மொழிந்துள்ளார்.
கிரீஸின் இந்த சர்ச்சைக்குரிய முன்மொழிவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய குடியேற்றக் கொள்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
குறித்த முன்மொழிவு நடைமுறைக்கு வரும் பட்சத்தில், நாட்டிற்குள் நுழையும் குடியேறிகளின் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை தனித்தனியாக மதிப்பீடு செய்யாமலேயே அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வழிவகுக்கும். இதன் காரணமாக, தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய சட்ட விதிகளின் கீழ் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள “கூட்டுத் திருப்பியனுப்புதல்கள்” மீண்டும் முன்னெடுக்கப்படும் சூழல் உருவாகலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
சட்டவிரோத வருகைகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளில் குடியேற்றத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஆணையம் புதிய சட்டக் கட்டமைப்பொன்றை வகுத்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் முன்வைக்கப்படவுள்ள “ஐரோப்பிய அவசரகால பதிலளிப்புக் கட்டமைப்பு” எனும் புதிய சட்டத்தில் தமது இந்த முன்மொழிவையும் உள்ளடக்க வேண்டும் என கிரீஸ் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றது.
குறிப்பாக “சிறப்பு விலக்கு முறை” எனப்படும் விசேட பொறிமுறையொன்றையே ஏதென்ஸ் நிர்வாகம் இதற்காக முன்வைத்துள்ளது. மிக அரிதான மற்றும் விதிவிலக்கான அவசர சூழ்நிலைகளில் மட்டுமே செயல்படுத்தப்படக்கூடிய இந்த வழிமுறையானது, புகலிட விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும், விரைவுபடுத்தப்பட்ட திருப்பியனுப்பும் நடைமுறைகளைப் பயன்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை முகமையான ஃபிரான்டெக்ஸின் உடனடி உதவியைப் பெற்றுக்கொள்ளவும் அனுமதிக்கும் வகையில் அமையவுள்ளது.