வட அயர்லாந்தின் கவுண்டி டவுன் பகுதியிலுள்ள நியூகாஸில் கடற்கரை நடைபாதையில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான ‘பெண்டி’ விச் எல்ம் (wych elm) மரம், இங்கிலாந்தின் 2026ஆம் ஆண்டிற்கான ‘ஆண்டின் சிறந்த மரமாக’ (Tree of the Year 2026) தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியில் வட அயர்லாந்தைச் சேர்ந்த மரமொன்று, இந்த விருதை வெல்வது இதுவே முதன்முறையாகும்.
வுட்லேண்ட் ட்ரஸ்ட் (Woodland Trust) அமைப்பால் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் இப்போட்டி, இயற்கை எவ்வாறு சம நிலைகளை எதிர்கொண்டு வாழ்கிறது என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இவ்வருடம் ‘எல்லா தடைகளையும் தாண்டி’ (Against All Odds) என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்டது.
இதில் நாடு தழுவிய ரீதியில் பொதுமக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இந்த வளைந்த எல்ம் மரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இறுதிச் சுற்றுக்குத் தெரிவான ஏனைய 09 மரங்களைப் பின்தள்ளி இந்த மரம் வெற்றியை ஈட்டியுள்ளது.
டெவோன் தேவாலயக் கோபுரத்தின் சுவர்களில் 200 ஆண்டுகளாக வளர்ந்து வரும் யூ மரம், இடி மின்னல் தாக்கத்திலிருந்து தப்பிய ஸ்கொட்லாந்தின் ஆஷ் மரம் மற்றும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்து உள்நாட்டுப் போர் பீரங்கிக் குண்டு புதைந்த நிலையில் கண்டறியப்பட்ட சர்ரே பகுதியின் யூ மரம் என்பனவும் இப்போட்டியில் போட்டியிட்டன.
19ஆம் நூற்றாண்டில் கடல் காற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக இந்த கடற்கரை நடைபாதையில் நடப்பட்ட மரங்களின் வரிசையில், எஞ்சியிருக்கும் ஒரேயொரு மரம் இதுவாகும். ஏனைய மரங்கள் 1980களில் மேற்கொள்ளப்பட்ட மீள் அபிவிருத்திப் பணிகளின் போது வெட்டி அகற்றப்பட்டன. கடுமையான கடல் காற்று காரணமாக இம்மரத்தின் அடிமரம் நிலத்திற்கு கிடைமட்டமாக வளைந்து வளர்ந்துள்ளதுடன், நடைபாதையின் மேல் பசுமை வளைவு போலக் காட்சியளித்து மக்களுக்கு தொடர்ந்தும் நிழலை வழங்கி வருகின்றது.
இம்மரத்தின் கீழ் உள்ளூர் சபை, அமரும் ஆசனங்களை அமைத்துள்ளதால், மக்கள் அங்கு அமர்ந்து மோரன் மலைகளின் அழகையும் கடல் காட்சியையும் இரசித்து வருகின்றனர்.
இயற்கையின் அபாரமான மீளெழும் ஆற்றலுக்கும் சகிப்புத்தன்மைக்கும் இந்த மரம் ஒரு சிறந்த சான்றாக விளங்குவதாக வுட்லேண்ட் ட்ரஸ்ட் அமைப்பின் வட அயர்லாந்து பணிப்பாளர் ஜோன் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.