பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இந்தியப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். நடிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் மும்பையில் உள்ள காற்பந்துத் திடல் ஒன்றிலிருந்து வெளியேறிய பிரபல நடிகர் டைகர் ஷ்ரோஃபின் காரை இலக்கு வைத்து மூவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் மற்றும் இதில் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் எட்டுப் பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாதாள உலகக் குழுவினருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, மற்றுமொரு சம்பவமாக பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் பலத்த பாதுகாப்புடன் கூடிய கண்ணாடித் தடுப்புக்குப் பின்னால் நின்றவாறு தனது ரசிகர்களை நோக்கிக் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் காட்சிகள் அண்மையில் இணையத்தில் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது.
இவ்வாறான அச்சுறுத்தல் சம்பவங்கள் அடுத்தடுத்து பதிவாகியுள்ள சூழலில், பெரிய அளவிலான பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதையோ, பொது நிகழ்வுகளில் பங்கேற்பதையோ தவிர்க்குமாறு அதிகாரிகள் நடிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இரசிகர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதைத் தவிர்க்குமாறும் பொலிஸ் அதிகாரிகள் நடிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
