அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து 10-4-2006 அன்று தீர்ப்பளித்தது.
தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 2007-ம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானின் 5 ஆண்டு கால ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.
இதனால் அவர் ஜோத்பூர் போலீசாரிடம் சரண் அடைந்தார். 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் 6 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது.
பின்னர், ஜாமினில் விடுதலையான நடிகர் சல்மான்கான், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 9 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் சல்மான் கானை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், சல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜஸ்தான் அரசு மேல் முறையீடு செய்துள்ளது. தீபாவளி விடுமுறைக்கு பிறகு இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.