செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கமல்ஹாசன்–கவுதமி பிரிந்தனர் | நடிகை கவுதமி அறிவிப்புகமல்ஹாசன்–கவுதமி பிரிந்தனர் | நடிகை கவுதமி அறிவிப்பு

கமல்ஹாசன்–கவுதமி பிரிந்தனர் | நடிகை கவுதமி அறிவிப்புகமல்ஹாசன்–கவுதமி பிரிந்தனர் | நடிகை கவுதமி அறிவிப்பு

1 minutes read

13 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமல்ஹாசனும், நடிகை கவுதமியும் பிரிந்து விட்டார்கள். ‘‘இது, வேதனைப்பட்டு எடுத்த முடிவு’’ என்று கவுதமி கூறினார்.

நடிகர் கமல்ஹாசன், ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த வாணி கணபதியை முதலில் திருமணம் செய்தார். 1978–ம் வருடம் இவர்கள் திருமணம் நடந்தது.

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1988–ம் ஆண்டில் விவாகரத்து செய்துகொண்டார்கள்.

அதன்பிறகு கமல்ஹாசன், இந்தி நடிகை சரிகாவுடன் சேர்ந்து வாழ்ந்தார். இவர்களுக்கு சுருதிஹாசன், அக்ஷராஹாசன் என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள். குழந்தைகள் பிறந்தபின், கமல்ஹாசனும் சரிகாவும் திருமணம் செய்து கொண்டார்கள். 2004–ம் வருடம் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது.

‘குரு சிஷ்யன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கவுதமி, 1998–ம் ஆண்டில் டெல்லியை சேர்ந்த நகை வியாபாரி சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது.

கவுதமிக்கு அவருடைய கணவர் மூலம் சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார். சுப்புலட்சுமி, 12–ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார்.

கமல்ஹாசன்–கவுதமி இருவரும் ‘அபூர்வ சகோதரர்கள்,’ ‘தேவர் மகன்,’ ‘நம்மவர்,’ ‘குருதிப்புனல்,’ ‘பாபநாசம்’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், 13 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள்.

இப்போது இரண்டு பேரும் பிரிந்து விட்டார்கள். இதை கவுதமி உறுதி செய்து இருக்கிறார். இதுகுறித்து கமல்ஹாசன் தரப்பில் இருந்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கமல்ஹாசனை பிரிந்தது ஏன்? என்பது பற்றி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கவுதமி கூறியதாவது:–

‘‘இது, வேதனைப்பட்டு எடுத்த முடிவு. யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. எல்லோருடைய வாழ்க்கையிலும் மாற்றங்கள் வருவது சகஜம். என் வாழ்க்கையிலும் அது வந்திருக்கிறது. பக்கத்தில் பக்கத்தில் போய்க்கொண்டிருக்கும் இரண்டு பாதைகள், ஒரு இடத்தில் பிரிந்து செல்லுமே அதுபோல்தான் இந்த முடிவு.

ரொம்ப நாளாகவே எனக்குள் இந்த மாற்றம் இருந்து வந்தது. வாழ்க்கையில் நான் நிறைய போராடி விட்டேன். இனி, சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை. நான் மன நிம்மதியாக இருந்தால்தான் என் மகளுக்கு நினைக்கிற மாதிரி தாயாக இருக்க முடியும். அது முடியாது என்பதால் பிரிந்து வாழ்கிறோம்.’’

இவ்வாறு கவுதமி கூறினார்.

அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கவுதமி அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– கமல்ஹாசனும், நீங்களும் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:– இப்போது அந்த பேச்சை எடுக்க வேண்டாம்.

கேள்வி:– கமல்ஹாசனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த நீங்கள், இப்போது வேறு வீட்டுக்கு வந்து விட்டீர்களா?

பதில்:– சேர்ந்து வாழ முடியாது என்று பிரிந்த பின், வேறு வீட்டில்தானே வசித்தாக வேண்டும்…

கேள்வி:– ‘பாபநாசம்’ படத்தின் மூலம் நடிகையாக மறுபிரவேசம் செய்த நீங்கள், தொடர்ந்து நடிப்பீர்களா?

பதில்:– தொடர்ந்து நடிப்பேன். என் வேலைகளை நான் செய்து கொண்டிருப்பேன்.’’

மேற்கண்டவாறு கவுதமி பதில் அளித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.