வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

1890 ஆம், 1950 ஆம், 2010 ஆம் ஆண்டுகளில் ஆசிரியராக சேவை புரிந்த, புரிபவர்களுக்கிடையே பாரிய தலைமுறை இடைவெளி காணப்பட்டது. ஒவ்வொரு அறுபது ஆண்டுகளுக்கொரு முறை ஏனையவற்றில் மாற்றம் ஏற்படுவது போன்று ஆசிரியர்களின் மனப்பாங்கிலும் மாற்றம் ஏற்படும் போலும்.
1890, 1950 ஆண்டுகளில் ஆசிரியர்களாக வந்தவர்கள் அதை ஒரு தொழிலாக கருதாமல் சேவையாக கருதியே, ஆசிரியர்களாக வந்தார்கள். அதனால் மாணவர்களின் நன்மை, முன்னேற்றம், எதிர்கால நல்வாழ்வு பற்றி மிகவும் கரிசனையுடன் இருந்தார்கள். கல்வி பற்றி இங்கு எழுதுவது எனது நோக்கமன்று.
ஆனாலும் கிறிஸ்தவ மிஷனரிகளால் தான் எமது நாட்டில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டது என்பதையும், தமிழையும் சைவத்தையுயும் பாதுகாக்க கருதி நாவலர்பெருமான் சில பாடசாலைகளை அமைத்தார் என்பதையும் மட்டும் குறிப்பிட்டு செல்கின்றேன்.
1890 களில் இருந்த ஆசிரியர்கள் மனத்தில் இனம், மதம், சாதி பற்றிய சில உறுதியான சிந்தனைகள் இருந்தமையால் எல்லோருக்கும் ஒரேமாதிரி சேவை செய்தார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் 1950 ஆம் ஆண்டுக்கு பின் வந்த அறுபது ஆண்டுகளில், சமூகத்திலும், அரசியலிலும், சட்ட திட்டங்களிலும் ஏற்பட்ட மாற்றங்கள், ஆசிரியர்களையும் உயர்ந்த தரம் உள்ளவர்களாக மாற்றியது. அவர்களுக்கு மிக குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது. ஆனாலும் மிகுந்த சேவை மனப்பான்மை உள்ளவர்களாய் திகழ்ந்தார்கள்.
ஆங்கிலேயருக்கு அவர்களின் நிர்வாகத்தை திறம்பட நடத்திச் செல்ல ஏராளம் எழுதுவினைஞர்கள் தேவைப்பட்டார்கள். எழுதுவினைஞர்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலான சம்பளமும் வழங்கப்பட்டது. ஒருவர் Clerical (Class-2)(எழுதுவினைஞர் தரம்-2) சித்தியடைந்து உத்தியோகம் பெற்று, கொழும்புக்கு வேலைபர்க்க போவாராயின் அவரது மதிப்பே வேறு. அவர் புகையிரத்த்தில் வந்து இறங்கி, ரக்ஸி பிடித்து வீட்டில் வந்து இறங்குவதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். நீளக்கால்ச்சட்டைக்குள் முழுக்கை சேர்ட்டை விட்டு, சப்பாத்து அணிந்த காலுடன் இராசநடை நடந்து வருவார். சிலர் மறக்காது கழுத்துப் பட்டியையும் அணிந்திருப்பார்கள். அவரது வீடே கலகலத்துப் போகும்.
அவர் சீதன சந்தையில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பார். சீமான்களும், வியாபாரிகளும் அவரை தமது மகள்களுக்கு மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ள தவியாய் தவிப்பார்கள். பின்னாளில் டாக்டர்களுக்கும் என்ஜினியர்களுக்கும் கூட அவருக்கு கிடைத்த அளவு கௌரவம் கிடைத்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் 1950 களில் ஆசிரியர்களாக வந்தவர்கள், சேவை செய்யத்தான் வந்தார்கள் என்பதை ஏற
எனக்கு ஆரம்பக்கல்வியை வழங்கிய வைத்தீஸ்வரக்குருக்களை, நமசிவாய வித்தியாலயத்தில் நான்காம் வகுப்பில் கற்பித்த குருக்கள் வாத்தியாரை, அங்கு ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலம் கற்பித்த ஐயர் மாஸ்டரை, வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் தமிழ் மொழியை அமிர்தமாக ஊட்டி விட்ட பண்டிதர் நடராசாவை, வித்துவான் கனகசபையை, வித்துவான் பொன்.முத்துக்குமாரனை, மனித தன்மையை உணர்த்திய கார்த்திகேசு மாஸ்டரை, வைத்திலிங்கம் மாஸ்டரை, பிரதி அதிபர் திரு.வைரமுத்துவை, அதிபர் உயர்திரு. அம்பிகைபாகனை நினைக்கும் போதெல்லாம் கை கூப்பி தொழ தோன்றுகின்றது.

இவர்கள் வரிசையில் வைத்து போற்றத்தக்கவர்களான திரு.செல்வரத்தினம் எனக்கு இரசாயனவியலையும், திரு,சித்திரவடிவேல் எனக்கு உயிரியலையும் வைத்தீஸ்வராவில் கற்பித்தார்கள். இந்த இருவரும் எனது ஆசிரியர் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
எங்கள் இலகடிப்பிட்டி பாடசாலை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 2.00 மணிக்கு நிறைவடையும். நான் பாடசாலை விட்டவுடன் தொடர்ந்து 3.10 வரை மாலை வகுப்பு வைப்பேன். பிள்ளைகள் கட்டிக்கொண்டு வந்த உணவை இடைவேளையில் சாப்பிட்டு விடுவார்கள். 3.10 இற்கு நடந்து 3.30 அளவில் உயிலங்குளத்தை அடைய, யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பஸ் வந்து சேரும். பி.ப. 3.50 மணியளவில் மன்னாரில் இறங்கி விடுவேன். அறைக்கு நடந்து சென்று, படுக்கையில் விழுந்து விடுவேன். பின் எழுந்து, ஆயத்தமாகி, நூல் நிலையத்தை நோக்கி நடப்பேன்.
திரு.செல்வரத்தினம் அவர்கள், விஞ்ஞானக் கல்வி அலுவலராக, மன்னார் மாவட்டத்திற்கு நியமனம் பெற்று வந்தார். அவர் எப்படி கடமை தவறாத ஆசிரியராக இருந்தாரோ, அதே போல சிறந்த அலுவலராகவும் இருந்தார். ஒரு பாடசாலையை தரிசிக்க சென்றால், பாடசாலை ஆரம்பிக்க முன்னர் சென்று விடுவார். பாடசாலை நிறைவு பெற்ற பின்னர் அதிபருடனேயே வெளியேறுவார். பின்னர் அவர் பஸ் பிடித்து மன்னாருக்கு வருவதற்கு 4, 4.30 ஆகிவிடும். நான் நண்பர்களுடன் நூலகம் நோக்கி செல்லும் அதே நேரம், அவர் தரிசிப்பு முடிந்து திரும்பி வருவார். சிரித்து தலையாட்டி விட்டு செல்வார். என்னை அவரது மாணவன் என்று தெரிந்து, தலையாட்டும் அவருக்கு நானும் ஆசிரியர் தான் என்று தெரிந்திருக்கவில்லை. வேறு ஏதோ வேலை செய்கிறான் என்று எண்ணிவிட்டார்.
அவர் எல்லா பாடசாலைகளுக்கும் சென்று, கணித/விஞ்ஞான ஆசிரியர்களின் சேவையை மதிப்பீடு செய்து, ஆலோசனைகளும் வழங்குகின்றார் என்பதை நான் அறிந்திருந்தேன். அந்த மாதம் அவர் கூட்டிய, விஞ்ஞான ஆசிரியர் சங்க அங்குரார்ப்பண கூட்டத்திற்கு, நான் சென்ற போது கூப்பிட்டு, விசாரித்து, பாடசாலை விபரமும் அறிந்து கொண்டார். என்னுடைய தாயார், இவன் கடமை தவறி விடுவானோ? என்று பயந்தது மாதிரியே 4.30 மணிக்கு நூல்நிலையம் செல்லும் இவன், ஒழுங்காக கற்பிப்பானா? என்ற சந்தேகம் எனது ஆசிரியருக்கும் ஏற்பட்டது.
என்னை கடமை தவறும் போது கையும் மெய்யுமாக பிடிக்க எண்ணி, எப்போதும் ஒரு நாளைக்கு ஒரு பாடசாலைத் தரிசிப்பு என்பதை, அன்று காலை முதல் மதியம் வரை சூரியகட்டைக்காடு றோ.க.த.க. பாடசாலைத் தரிசிப்பு என்றும், மதியம் முதல் நிறைவு வரை எங்கள் பாடசாலை என்றும் திட்டமிட்டு கொண்டார். இடைவேளையின் போது எங்கள் பாடசாலைக்கு வந்து சேர்ந்தார். எனது மாணவர்கள் யாவரினதும் கணித, விஞ்ஞான பயிற்சிக் கொப்பிகளை சேர்த்துத் தரச் சொல்லி, கண்ணுக்குள் எண்ணை ஊற்றிக் கொள்ளாத குறையாக துருவி, துருவி வாசித்தார்.
அனைவரதும் கொப்பிகளும் திருத்தப்பட்டு, பிழை திருத்தம் செய்யப்பட்டு, கையொப்பமிடப்பட்டு, அதிபரால் மேற்பார்வை பார்க்கப்பட்டு, அதிபரது கையொப்பம் வார வாரம் பெறப்பட்டு இருந்தன. பாடப்பதிவு, பாடக்குறிப்பு என்பன முறையாக பேணப்பட்டிருந்தன. அவரால் எந்த தவறையும் கண்டு பிடிக்க முடியவில்லை. பாடத்திட்டம் (Syllabus) மட்டும் சற்றே பின் தங்கி இருந்தது. ஒரு மாணவனை அனுப்பி, சம்பவ திரட்டு புத்தகத்தை எடுப்பித்து, Syllabus பின் தங்கியிருப்பதனால் மாலை நேர வகுப்பு வைத்து அவற்றை முடிக்க வேண்டும் என்று பதிவு செய்து விட்டு, அதிபர் அலுவலகம் சென்றார். அதிபரிடம், நான் மாலை வேளையில் நண்பர்களுடன் நூல் நிலையத்தில் பொழுது போக்குவதனையும், தான் அந்த நேரத்தை பிரயோசனமாக்க மாலை நேர வகுப்பு வைக்கும்படி கூறியதையும் கூறினார்.

அதிபர் திகைத்து விட்டார். “சேர் அவர் கடமையேற்று வந்து ஒரு மாதம் மட்டும் தான் மாலை நேர வகுப்பு வைக்கவில்லை. அதன் பின் தொடர்ந்து கிழமையில் நான்கு நாட்கள் மாலை நேர வகுப்பு வைக்கின்றார். பிள்ளைகள் இப்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்” என்று அதிபர் சொல்ல, கேட்டு என் ஆசான் திகைத்து விட்டார்.
செய்தி அறிந்த மடுத்தீன் மாஸ்டர் அவரிடம் போய் “முந்தி நான் தான் இடைக்கிடை மாலை நேர வகுப்பு வைப்பேன். இப்போது பத்மநாபன் எனக்கு நேரம் தாறாரில்லை” என்று கூறிச் சிரித்தார். விஞ்ஞானக் கல்வி அலுவலரும் தான் விட்ட தவறை உணர்ந்து கொண்டார்.
பாடசாலை விட்டதும், மாணவர்கள் ஒரு வகுப்பில் ஒன்று சேர்ந்ததையும், நான் கற்பிக்க ஆயத்தமாவதையும் கண்டார். இரண்டு கிழமைகளின் பின் மீண்டும் எங்கள் பாடசாலைக்கு வருகை தந்தார். மாலை வரை என்னுடன் சேர்ந்து, தானும் கற்பித்தார். நான் ஆறுதலாக, மாலை நேரத்தில் கற்பிப்பவற்றை, பாடசாலைப் பதிவேட்டில் பதிவு வைப்பதில்லை என்னபதனை கூறினேன். Syllabus ஒழுங்காக செல்வதை அவர் புரிந்து கொண்டார்.
நான் தொடர்ந்து மாலை நேர வகுப்பு வைக்கும் விபரத்தினையும் தான் அதிபருடனும், ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் கதைத்து எனது சேவை பற்றி அறிந்தவற்றையும், பொதுவாகவே எனது கற்பித்தல் சிறப்பாக இருப்பதாகவும் சம்பவத்திரட்டு புத்தகத்தில் பதிவு செய்தார். “எனது மாணவன் பிழை விட்டு விடக் கூடாது என்று கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்” என்று கூறினார். நான் அதனை பெரிய விடயமாக எண்ணவில்லை.
சில பொறுப்பில்லாத ஆசிரியர்கள் அவரிடம் கேட்ட விமர்சனங்களுடன் ஒப்பிடும் போது இது சின்ன விடயம். அதன் பின் மாலை நேரத்தில் அவர் வீடு வரை சென்று உரையாடுவதும், அவரது அலுவலக எழுத்து வேலைகளில் உதவுவதும், அவர் வீட்டு தேனீரைக் குடிப்பதும் எனது இன்னொரு மாலை நேரக் கடமையாகியது. அவரது மாணவன் என்றதால் ஏனைய ஆசிரியர்கள் மத்தியில் எனக்கு ஒருவித மதிப்பும் ஏற்பட்டது. அவர் விஞ்ஞானக் கல்வி அலுவலராக இருந்த காலத்தில் மன்னாரில் விஞ்ஞான பாடத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை மறக்க முடியாது.
2010 ஆம் ஆண்டிற்கு பின், சேவை செய்ய என்று ஆசிரிய சேவைக்கு வராது, ஏதாவது ஒரு வேலை வேண்டும் என்பதற்காக, ஒரு தொழிலாக ஆசிரியர் வேலைக்கு வந்தவர்களே அதிகம். அவர்களில் ஒரு பகுதியினர் விசுவாசமாக சேவை செய்கின்றார்கள் என்பதும் உண்மையே. அரசும் இளைஞர்களின் வேலையில்லா பிரச்சனையைத் தீர்க்க, பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்ளீர்க்கின்றது. அவர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்குவதன் மூலமும் அவர்களின் சமூக கடமைகளை உணர்த்துவதன் மூலமும் அவர்களை சிறந்த ஆசிரியர்களாக மாற்ற முடியும்.
தொடரும்….
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
முன்னைய பகுதிகள் ….
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-12-12-01-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-13-12-08-16/