இந்தியாவில் சினிமாவுக்கு வயது 100 ஆகிவிட்டது. இருந்தாலும், இதுவரை எந்தவொரு இந்தியா சினிமாவும் நிகழ்த்தாத ஒரு சாதனையை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பாகுபலி-2’ படம் நிகழ்த்தப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த ‘பாகுபலி-2’ தற்போது நான்கு நாட்களை கடந்துள்ள நிலையில் ரூ.600 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் இன்னமும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.
எனவே, இன்னும் சில தினங்களில் இப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்டிவிடும் என்ற ஒரு கணிப்பு சினிமா வட்டாரங்களில் உலாவுகிறது. இப்படம் ரூ.1000 கோடியை வசூல் செய்தால், இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை எந்த படமும் செய்யாத ஒரு சாதனை என்றே கூறலாம்.
இப்படம் ரூ.1000 கோடி வசூலித்தால் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்கு பங்குதொகையாக ரூ.400 கோடி போக மீதி ரூ.600 கோடி வரை தயாரிப்பாளருக்கு கிடைக்கும் என்கிறார்கள். இப்படத்திற்காக ரூ.320 கோடி செலவிட்டதுபோக, மீதியுள்ள ரூ.280 கோடி தயாரிப்பாளருக்கு நிகர லாபமாக கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
இதுவரை, ‘அவதார்’, ‘டைட்டானிக்’, ‘லார்ட் ஆஃப் ரிங்ஸ்’, ‘ஹாரி பார்ட்டர்’ போன்ற ஹாலிவுட் படங்களே ரூ.1000 கோடி வரை வசூலித்து சாதனைகளை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.