அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிதாரி ஒருவர், கர்ப்பிணிப் பெண் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட 08 பேரை சுட்டுக் கொன்ற பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரி உட்பட 09 பேரின் சடலங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பென்சில்வேனியாவின் ஈரி நகரில் உள்ள வீதியொன்றில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவாறு வீடொன்றுக்குள் நுழைவதைக் கண்ட சாட்சிகளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது வீட்டின் வெளியே இரண்டு பெண்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்ட பொலிஸார், அங்கு துப்பாக்கிதாரி உட்பட ஏனையோரின் சடலங்களை மீட்டதாக ஈரி நகர பொலிஸ் மா அதிபர் ரிக் லோரா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறவினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இத்தாக்குதலுக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை எனவும், துப்பாக்கிதாரியின் உளநலப் பிரச்சினைகளே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்த சிசிடிவி வீடியோப் பதிவுகளின்படி, வீட்டின் வெளியே கொல்லப்பட்ட 51 மற்றும் 37 வயதுடைய இரு பெண்கள் அயலவர்களிடம் உதவி கோரி ஓடியுள்ளனர். அவர்களில் ஒருவர் குடும்பத்தின் திருமண வழி உறவினர் என்பதுடன், மற்றையவர் குடும்ப நண்பர் எனத் தெரியவந்துள்ளது. வீட்டின் உள்ளிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து வெளியே வந்த துப்பாக்கிதாரி அவ்விரு பெண்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
வீட்டின் முதல் மாடியில் 05 மற்றும் ஒரு வயதுடைய இரு சிறுவர்களின் சடலங்களும், இரண்டாவது மாடி மற்றும் படிக்கட்டுப் பகுதியில் 24 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்கள், 19 மற்றும் 21 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் துப்பாக்கிதாரியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த பெண்களில் ஒருவர் 08 மாதக் கர்ப்பிணி என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷபிரோ தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.