பிரான்சு நாட்டில் 1800ஆம் ஆண்டளவில் நெப்போலியனின் படையில் கடமை புரிந்த சார்ள்ஸ் பாபியர் என்ற இராணுவ வீரர் இரவுநேரத்தில் இராணுவ வீரர்களால் பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கூடிய “இரவு எழுத்து (night writing) என்னும் குறியீட்டு முறையைக் கண்டு பிடித்திருந்தார். இரவு வேளைகளில் தகவல்களைப் படிப்பதற்கு விளக்குகளைப் பயன்படுத்தியதால் பல இராணுவ வீரர்கள் கொலையுண்டதைக் கவனித்துத் தீர்வாக இந்த முறையைக் கண்டு பிடித்தாராம். இந்த முறையில் 6 துளைகள் உயரமும், 2 துளைகள் அகலமும் இருந்தன. இந்தத் துளைகளால் ஏற்படுத்தப்படும் வவ்வேறு வடிவங்கள் எழுத்துக்களைக் குறித்தன.
லூயிஸ் பிரைல் 1809ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் உள்ள கூப்விரே என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் ஒரு தோல் உற்பத்திப் பொருள் செய்யும் தொழிலாளி. இவர் தனது தோல் உற்பத்திப் பொருட்களைத் துளையிட வைத்திருந்த ஆயுதத்தால் தவறுதலாக லுர்யிஸ் பிரைல் தனது கண்ணைக் குத்தியதால் சிறுவயதிலேயே பார்வையிழந்தார். தனது 11வது வயதில் தன்னைப் போன்று பார்வையிழந்தவர்கள் பயன்படுத்துவதற்காக எழுத்துத் தொடர்பாடல் முறையை சார்ள்ஸ் பாபியரின் இரவு எழுத்துக் குறியீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார். இதில் அகலப்பாட்டிற்கு 2 துளைகளும், உயரப்பாட்டிற்கு 3 துளைகளுமாக ஆறு துளைகள் இருந்தன. அவர் பரிஸ் நகரத்தில் தேசிய விழிப்புலனற்றோர் பாடசாலையில் சேர்ந்து தனது பெயரைக்கொண்ட பிரைல் Braille)முறையை அபிவிருத்தி செய்தார். இவர் தனது 43வது வயதில் உயிரிழந்தார். இவர் இறந்து ஒரு வருடத்தின் பின்பு பிரான்ஸ் நாடு பிரைல் முறையை விழிப்புலனற்றோருக்கான தொடர்பாக்கல் முறையாக அறிவித்ததாகக் கூறப்படுகின்றது. லூயிஸ் பிரைல் அவர்களின் கண்டுபிடிப்பு உலகெங்கும் உள்ள எண்ணற்ற விழிப்புலனற்றோருக்கு கல்வி வழங்குவதற்கு உதவும் முறையாக விளங்கியது. பிரைல் தொழில் நுட்பத்தில் பாரிய வளர்ச்சியையும் உலகம் பெற்றிருக்கின்றது.
இன்று விழிப்புலனற்றோர் அல்லது பார்வைக்குறைபாடு உள்ளவர்களால் பயன்படுத்தப்படுவதற்கு ஏராளமான உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன. உருப்பெருத்தல் செய்யும் மென்பொருட்கள், கணினித் திரையக வாசிப்பான்கள் (Computer Scree Readers), பெரிய நிறமுள்ள எழுத்துக்கள் கொண்ட தொலைபேசிகள், விசேடமாக வடிவமைக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் எனப் பல்வேறு உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒலிவடிவ வெளியீட்டு வசதி உள்ள வழிசெலுத்தும் அமைப்புக்கள் (navigation system) பெரியளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கணினித் தொழில் நுட்பம் மூலம் ஒலிவடிவத்தில் இருந்து தகவல்களையும், தகவல்களில் இருந்து ஒலி வடிவங்களையும் மாற்றக்கூடிய மென்பொருட்கள் பாரிய அளவில் விழிப்புலனற்றோரின் தேவைக்காகப் பயன்படுத்தக் கூடிய விதத்தில் உருவாக்கப்படுகின்றன.
சிமாட் கிளாசஸ் (Smart Glasses) எனப்படும் கண்ணாடிகளை விழிப்புலனற்றோர் அணிந்திருக்கும் பொழுது வீதிச் சமிக்ஞைகளை ஒலி வடிவத்தில் மாற்றி அவர்களுக்குத் தெரிவிக்கின்றன. பெரும்பாலான விழிப்புலனற்றோர் ஒரேயளவான ஒளி மற்றும் அசைவுகளை உணரத்தக்கவர்களாக இருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது. இங்கிலாந்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய இந்தக் கண்ணாடிகளில் உள்ள கமராக்களும், மென்பொருளும் பொருட்களைப் பதிவுசெய்து அவர்கள் உணரத்தக்க வகையில் காட்டுகின்றன. இரண்டு கண்ணாடிகளிலும் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் கண்கள் செய்யும் வேலையைச் செய்கின்றன. விழிப்புலனற்றோரில் காணப்படும் ஒளியுணர்வுத்தன்மையைக் கொண்டு காணக்கூடிய வகையில் தகவல்கள் கண்ணாடியில் காட்டப்படுவதோடு அவர்கள் அணிந்திருக்கும் ஹெட்போன்கள் (Headphones) மூலம் மென்பொருட்களால் மாற்றியனுப்பப்படும் ஒலி வடிவான தகவல்களையும் கேட்க முடியும். இந்தக் கண்ணாடிகள் திசைகாட்டி(compass), ஜிபிஎஸ்(GPS), போன்றவற்றையும் கொண்டிருக்கின்றன.
Canadian National Institute for the Blind என்ற நிறுவனம் கணினித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விழிப்புலனற்றோருக்கும், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் உரிய உபகரணங்களை விநியோகித்து வருவதாக அக்டோபர் 2014 இல் குளோபல் நியூஸ் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை ஒன்று தெரிவிக்கின்றது. Canadian National Institute for the Blind என்ற நிறுவனம் சஸ்கட்டூன்(Saskatoon) இல் உள்ள பார்வைக்குறைபாடுள்ளவர்களையும், விழிப்புலனற்றோர்களையும் அழைத்துப் புதிய தொழில்நுட்பத்தில் உருவான உபகரணங்களைப் பரீட்சித்து வருகின்றது. டயன் கூப்பர் 1989ஆம் ஆண்டில் இருந்து சட்டரீதியாகப் பார்வையிழந்தவராக உள்ளார். தாதியாகப் பணிபுரிந்த இவர் கடந்த ஆண்டில் முற்றாகப் பாதிக்கப்பட்டார். இவருக்கு மிகுதி இரண்டு வீதமான பார்க்கும் திறன் மட்டுமே தற்பொழுது உள்ளது. புதிய உபகரணங்கள் மூலம் இவரால் கடிதங்களை வாசிக்க முடிந்ததாகக் கூறப்படுகின்றது. டொல்பின் கைட் மென்பொருள்(Dolphin Guide Software) பார்வைக்குறைபாடுள்ளவர்களும், விழிப்புலனற்றவர்களும் பயன்படுத்தக்க முறையில் இணையத்தளங்களைப் படித்தல், கடிதம் எழுதுதல், மின்னஞ்சல் அனுப்புதல், படிமங்களை ஒலி வடிவத்தில் படிக்கச்செய்து கேட்டல் போன்றவற்றைச் செய்ய உதவுகின்றது.
கொழுப்பு, மாப்பொருள், சீனி அதிகம் கொண்ட உணவுகளைத் தவிர்த்தல் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. விற்றமின்ஈ(E), விற்றமின் சீ(c) , விற்றமின் ஏ(A), விற்றமின் டி (D), சிங்(Zinc), ஒமேகா 3 (Omega 3), பற்றி அசிட்(Fatty Acid) போன்றவை கண்ணின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லவை. புகைத்தல் கண்ணிற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. கண்புரை, கண்ணின் நரம்புகளில் பாதிப்பு போன்றவை புகைத்தல் பழக்கத்தால் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கண்ணைப் புற ஊதாக்கதிர்களின் (UV Rays) பாதிப்பிலிருந்து பாதுகாப்பதில் சன்கிளாசஸ் (Sunglasses) முக்கிய பங்கை வகிக்கின்றன. சில குறிக்கப்பட்ட ஆபத்தான வேலைகளைச் செய்யும் பொழுது பாதுகாப்புக் கவசங்களை அல்லது கண்ணாடிகளை அணிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆபத்தான ஆயுதங்களால் குத்தப்பட்டுப் பார்வை இழந்தவர்களும் உலகில் உள்ளார்கள். எனவே கண்ணில் காயங்கள் அல்லது எரிவுகள் ஏற்படாது பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகின்றது. சிறு பிள்ளைகளுக்கு தொடுவில்லைகள் அணிவது நல்லதல்ல.
எந்த வயதில் அவர்கள் தொடுவில்லைகளைப் பாவிக்கலாம், தொடர்ச்சியாக எவ்வளவு நேரம் தொடுவில்லை போடலாம் போன்ற விடயங்களில் நல்ல ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது. கண்ணிலும் புற்று நோய் ஏற்படலாம். இதுபற்றியும் அறிந்திருத்தல் நல்லது. முதலாம் நிலை, இரண்டாம் நிலை என இரண்டு விதமான கண் புற்றுநோய்கள் வருகின்றன. முதலாம் நிலை கண்விழிகளில் ஏற்படுகின்றது. இரண்டாம் நிலை உடலின் வேறு பாகங்களில் ஏற்பட்டுப் பின்பு கண்ணைத் தாக்குகின்றது. கண்ணில் எற்படும் புற்றுநோய்களுக்கு சத்திரசிகிச்சை, சீரொளிச் சிகிச்சை, மற்றும் ஏனைய புற்றுநோய்கள் போன்ற சிகிச்சை முறைகள் எனப் பலவகையான சிகிச்சை முறைகள் பயன்பாட்டில் உள்ளன.
அதிக நேரம் கணினியைப் பயன்படுத்தும் பொழுது இடைக்கிடை (20 செக்கன்களுக்கு ஒரு தடவை) கண்ணால் திரையகத்தைத் (Monitor) தவிர்த்து ஏனைய இடங்களைப் பார்த்து (20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை) பயிற்சி செய்வது நல்லது. தொடர்ச்சியாகத் திரையகத்தைப் பார்ப்பது கூடாது. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை கொஞ்ச தூரம் நடந்து பயிற்சி செய்வது நல்லது. நமது கண்களை மிகவும் கவனமாகப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்பதையும் இந்தக் கட்டுரையின் வாயிலாக வாசகர்களாகிய உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். பார்வைக்குறைபாடுகளைப் பற்றியும், நமக்குள்ள தீர்வுகளைப் பற்றியும் உரையாடுவதன் மூலம் வாசகர்களின் நமது பொதுவறிவை விருத்தி செய்யும் நோக்கிலேயே இந்த அறிவியல் கட்டுரை எழுதப்படுகின்றது. பார்வைக் குறைபாட்டிற்குரிய சிகிச்சைகளுக்கு வைத்தியர்களின் ஆலோசனையைப் பெற்றுச் செயலாற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாமும் வாழ்வோம். நம்மைப் போன்று எல்லோரும் நன்கே வாழட்டும்.
நன்றி : அகணி சுரேஸ் (சி.அ.சுரேஸ் B.Sc.Eng., MSC in Computing) | பதிவுகள் இணையம்
உசாத்துணைகள்
http://www.allaboutvision.com/resources/anatomy.htm
https://ta.wikipedia.org/wiki/
http://www.acb.org/
http://www.guidedogs.org.uk/
Braille Works | Braille, Large Print, Audio & 508 Compliance
http://www.webmd.com/eye-health/good-eyesight
