ஆரம்பம் – விமர்சனம்ஆரம்பம் – விமர்சனம்

‘தல’ படத்திற்கு எவரும் எதிர்பார்ப்புடன் செல்வதில்லை. ஏனென்றால் அண்மைக் காலங்களில் தல படங்களின் இடம்பெற்ற கடந்தகால கசப்பான அனுபவங்கள் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது.

 

இளையதளபதி படம் எப்போதாவது ஊற்றிக்கொள்ளும் என்றால், தல படம் எப்போதாவது ஹிட்டடிக்கும். ஆனால் இப்போது வரை தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் மிகப்பெரிய ஓப்பனிங் அஜித்திற்கு இருக்கிறது. ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கவே செய்கிறது. வெளிநாடுகளிலும் இதற்கு விதிவிலக்கல்ல.

அஜித்- நயன்தாரா, ஆர்யா- நயன்தாரா இரண்டு கூட்டணியுமே சமகால தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்த, வருகின்ற கூட்டணிகள். இவர்கள் மூன்றுபேரும் இணைந்தால் கேட்கவா வேண்டும்..? மூன்று மணிநேர ஆக்சன். இறுதிவரை தொய்வில்லாமல் அட்டகாசமாக செல்கிறது. தயங்காமல் சொல்லலாம், தல-க்கு இன்னொரு மங்காத்தா..!

a3

ஹொலிவூட் படத்தை சுட்ட மாதிரியும் இருக்கணும்… சுடாத மாதிரியும் தெரியனும். இது விஷ்ணுவர்தனுக்கு கைவந்த கலையாச்சே… அப்பப்ப ஹொலிவூட் படத்தை சுட்டுப் போட்டுள்ளார். ஹொலிவூட் கொப்பியாச்சே என்பதால் அங்கங்கே சுட்டிருக்கிறார். அதே கதைக்களம். ஹொலிவூட்டுடன் தென்னிந்திய மசாலாவை தூவி கார சாரமாக பரிமாறியிருக்கிறார்.

அரசியல்வாதிகள் ஊழல் மோசடியில் சம்பாதிக்கும் பணத்தை சுவிஸ் வங்கியில் சேமிக்கின்றனர். இவ்வாறு சேமிக்கும் பணத்தை எடுத்து இந்தியன் வங்கிக்கு மாற்றுவது தான் படத்தின் முக்கிய கதையாகவுள்ளது.
அதற்காக, திரைப்படத்தின் வெளியீட்டுக்கு தடங்கலோ அல்லது தற்காலத்து அரசியல் பின்னணிகளே இல்லாத ஊழல் சம்பவத்தை கையாண்டுள்ளார் இயக்குனர்.

‘புல்லட் புரூவ் ஜக்கெட்” வாங்கியதில் இடம்பெற்ற ஊழலாக இத் திரைப்படத்தில் கதையை கோர்த்திருக்கின்றனர்.

இத் திரைப்படத்தில் குறிப்பாக சுவிஸ் வங்கியில் உள்ள வங்கிக் கணக்கை ஹெக் செய்து பணப் பரிமாற்றம் செய்வதாக திரைக்கதையை அமைக்கும்போது ஹொலிவூட் கொப்பி தெளிவாகின்றது.

ஆரம்பத்தில் மும்பையில் உள்ள பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் தீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி சின்னாபின்னாமாகிறது. அதற்கு காரணம் கைதுசெய்து வைத்துள்ள தீவிரவாதி துரானிதான் என்று மும்பை பொலிஸாக வரும் கிசோர் அறிந்து அவரது நெட்வேர்க்கை கண்டுபிடித்து அழிக்க அலைகிறார்.

இன்னொருபுறம் (ஏ.கே.) அஜித், நயன்தாராவுடன் சேர்ந்து இந்த நெட்வேர்க்கின் மேல்மட்ட அரசியல் தொடர்புகளை குறிவைத்து வேட்டையாடுகிறார். இடைவேளைவரை யார் வில்லன், யார் ஹீரோ என்று வரும் குழப்பத்திற்கு இடைவேளைக்குப் பின் தெளிவு கிடைக்கிறது.

ஆர்யாவின் பாடசாலைத் தோழிகள் நயன்தாராவும், டாப்சியும். கல்லூரியில் படிக்கும்போது ஆர்யா பயங்கர கெட்டிக்காரான். கணனித்துறையில் அவருக்கு அனைத்தும் அத்துப்படி. கணனியில் ஊடுருவி அதாவது ஹேக் செய்து கல்லூரி விடைத்தாளில் கைவைக்கும் அளவுக்கு புத்திசாலி. அப்படி உதவப்போய் டாப்சியின் கடைக்கண் பார்வையில் சிக்குகிறார். கல்லூரி மாணவராக ஆர்யா வரும் கெட்டப் செம.. தமிழ் சினிமாவில் புதிய யுத்தி. திரையில் பாருங்கள், ஆர்யா கலக்கியிருப்பார்.

ஆர்யாவின் ஹேக்கர் மூளையைத்தான் பிற்பாடு நயன்தாரா மூலம் அஜித் பயன்படுத்திக் கொள்கிறார். அதற்கு டாப்சியை வைத்து பிளக் மெயில் செய்து அந்தக் காரியத்தை சாதிப்பார். அஜித் பின்புலம் எதுவும் தெரியாமல் அவரை பொலிஸில் ஆர்யா சிக்கவைக்க, வேறு வழியில்லாமல் அந்த பிளாஸ்பேக்கை ஆர்யாவிடம் அவிழ்க்கிறார் நயன்தாரா..

அஜித் வழக்கம்போல இதிலும் ஒரு நேர்மையான அஸிஸ்டண்ட் கமிஷனர். அதுதவிர அன்டி டெரரிசம் படையணி இல் ‘பொம் எக்ஸ்பேர்ட்” ஆகவும் இருக்கிறார் அதாவது வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்வதில் வல்லவர்.

மும்பையில் தீவிரவாதிகள் குண்டு வைத்தால் அதை செயலிழக்கச் செய்வது இதன் வேலை. அப்படி ஒரு தாக்குதலில் அவரின் சக ‘பொம் எக்ஸ்பேர்ட்’டும் உயிர் நண்பனுமாகிய ராணா பலியாகிறார். இவரின் தங்கைதான் நயன்தாரா.

a2

புல்லட் புரூப் ஜக்கெட்டு போட்டும் எப்படி குண்டு உடலைத்துளைத்தது என ஆராய்கையில், அது தரமற்ற புல்லட் புரூவ் என தெரியவருகிறது. உடனே மேலதிகாரியிடம் முறையிடுகிறார். அவரும் இதற்கு உடந்தை என பிறகு தெரியவர, இதில் 200 கோடிக்குமேல் ஊழல் நடந்திருப்பது வெளிப்படுகின்றது.

அந்த ஊழலை செய்திருப்பது மத்திய அமைச்சர் என்பதையும் கண்டுபிடித்து, இப்படி ஊழல் செய்த பணம் சுவிஸ் வங்கியில் வைப்பு செய்திருக்கும் உண்மையை கண்டறிகிறார் ஏ.கே.

அதை மறைக்க ரானா குடும்பத்தில் அனைவரையும் விஷம் கொடுத்து கொன்று, அஜித்தையும் தீவிரவாதிபோல் உருவாக்கி அவரை ஆற்றில் தள்ளி கொலை செய்கிறது குறித்த அமைச்சரின் பட்டாளம். விஷம் குடித்த நயன்தாராவும் ஆற்றில் விழுந்த அஜித்தும் ஒருவாறு தப்பி இவர்களை பழிவாங்குவதுதான் மீதி கதை.

படத்திற்கு மையபலம் அஜித்துக்கா ஆரியாவிற்கா எனபதில் குழப்பம். இதில் அஜித்தின் வில்லத்தன நடிப்பை குறைத்திருக்கலாம். படத்தில் அஜித்துக்கு வசனங்கள் அதிகமாக கிடையாது. அனைத்தும் ஆக்சன் தான். ஆனால் மொத்தமாக கிளைமாக்சில் கேப்டன் மாதிரி, ஊழல், இலஞ்சம், அரசியல் என சமகாலப் பிரச்சினைகளைப் பன்ச்களாக அடித்து பின்னியெடுக்கிறார்.

வழக்கம் போல இந்தப்படத்திலும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தனது நடையை காட்டுகிறார் அஜித். ஆனால் அதுதான் அவரின் அட்டகாசமான ஸ்டைல் என்பதால் சலிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அதற்கு தல ரசிகர்களிடமிருந்து விசில் பறக்கிறது. ஆனால் தல யின் தொப்பை அப்பட்டமாக வயதை கூட்டிக் கண்பிக்கிறதே..

சுவிஸ் வங்கிக் கணக்கிலிருந்து டுபாயிலுள்ள அமைச்சர் மகளின் கணக்கிற்கு பணம் மாறிவிட, அதை ஆர்யாவும், அஜித்தும் ஹேக் செய்து தமது கணக்கிற்கு மாற்றும் அந்த பரபர பத்து நிமிடங்கள் அட்டகாசம்.

ஆனால் ஹொலிவுட் படத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப விறுவிறுப்பாக செல்கிறது ஆரம்பம். ஆனால் தல ரசிகர்களுக்கு இந்தப்படம் தீபாவளி விருந்து என்றே சொல்லலாம்.

ஆரம்பம் ‘தல” யுக்கா!! அல்லது ஆரியாவுக்கா!!!

 

நன்றி – வீரகேசரி | இலங்கை 

ஆசிரியர்