செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ‘ரசிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த `மைக்’ மோகன்..!’ – நடந்தது என்ன?

‘ரசிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த `மைக்’ மோகன்..!’ – நடந்தது என்ன?

5 minutes read

தன்னுடைய ரசிகை ஒருவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார், நடிகர் மோகன்…

வினோதினி திருமணத்தில் மோகன்

வினோதினி திருமணத்தில் மோகன்

‘ரசிகை ஒருவரின் வேண்டுகோளை ஏற்று அவருடைய திருமணத்தில் கலந்து கொள்கிறார் நடிகர் மோகன்’! – இப்படியொரு தகவல் கிடைக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை மாதவரம் பகுதியிலிருக்கும் அந்தத் திருமண மண்டபத்தில் இருந்தோம். மண்டபத்தைச் சுற்றிலும் ‘வெள்ளி விழா நாயகனே’ என விளித்தன எக்கச்சக்க ஃபிளக்ஸ் போர்டுகள்.

‘அவர் நடிப்பை நிறுத்தியே இருபது வருஷம் இருக்குமே. யார்யா அந்த ரசிகை, பார்க்கணும்போல இருக்கே’ என்கிற உங்களது அவசரம் புரிகிறது. வாங்க மணப்பெண்ணான வினோதினியிடமே பேசலாம்..

’’ஏன் சார் 90 கிட்ஸ்ல அவருக்கு ரசிகை இருக்கக் கூடாதா? எண்பதுகள்ல அவர் புகழின் உச்சத்துல இருந்தப்ப நான் பிறக்கலைதான். ஆனா இன்னைக்கும் பெருமையாச் சொல்றேன், நான் மோகன் சாரின் தீவிர ரசிகை. என்னோட ஃப்ரெண்ட்ஸ்லாம் கூட முதல்ல இதுக்காக என்னைக் கேலி பண்ணினாங்க. ஆனா அப்படிக் கேலி செய்தவங்களில் சிலரே பின்னாடி என்னை மாதிரியே அவரோட ரசிகைகளாகிட்டாங்க. நான் எப்படி அவரோட ரசிகை ஆனேன்னுதானே கேக்கறீங்க, அந்த மேட்டருக்கு வர்றேன். எங்க வீட்டுல என்னோட அப்பாதான் மோகன் சாரின் முதல் ரசிகர். ரசிகர்னா உடனே கட் அவுட்டுக்குப் பால் ஊத்திட்டெல்லாம் இருக்கலை அவர். மோகன் சார் படத்தின் பாடல்களுக்கு ரசிகரா இருந்தார். எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்களில் அப்பா விரும்பிக் கேட்ட எல்லா பாடல்களும் மோகன் சார் படப் பாடல்கள்தான். அந்தத் தாக்கத்துல நானும் அந்தப் பாடல்களுக்கு அடிமையானேன். ‘நிலாவே வா’, ‘இதயம் ஒரு கோவில்’, ‘ஈரமான ரோஜாவே’, ‘மலையோரம் வீசும் காத்து’ போன்ற பாடல்களையெல்லாம் ஆயிரம் தடவைக்கு மேல கேட்டிருப்பேன். இப்படிப் பைத்தியமா இருந்ததால இந்தப் பாடல்கள் இடம்பெற்ற படங்களைப் பார்க்கணும் போல தோணுச்சு. டிவிடி, ஆன்லைன்னு எல்லா படங்களையும் பார்த்தேன். டிவி சேனல்களில் அவரோட படங்கள் போடறாங்கன்னு தெரிஞ்சா அன்னைக்கு ஆபீஸ்க்கு லீவு போட்டெல்லாம் பார்த்திருக்கேன். இப்படிப் பார்த்துப் பார்த்தே அவரை ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அதனாலேயே அவர் பத்தின தகவல்களைத் தேடினப்ப, முகநூல்ல அவருடைய ‘ஃபேன் கிளப்’ பக்கத்தைப் பார்த்து அந்த குரூப்ல சேர்ந்தேன்.

மோகன்
அந்த குரூப்ல சேர்ந்த பிறகுதான் தெரியுது, அவருக்கு ரசிகர்களை விட ரசிகைகள்தான் அதிகம்னு! அவர் பீக்ல இருந்த காலத்துல அவரோட ரசிகைகளா இருந்த எக்கச்சக்க ஆள்களுக்கு இப்போ டீன் ஏஜ்ல பசங்க இருக்காங்க. அவங்களும் அந்த குரூப்ல இருக்காங்க. அவங்களில் ஒரு சிலர்கிட்ட பேசினா, மோகன் சார் பத்தி அவ்வளவு சிலாகிச்சுப் பேசறாங்க…’’ எனப் பேசிக் கொண்டே போனவரை இடைமறித்து, திருமணத்தில் மோகன் கலந்து கொண்டது குறித்துக் கேட்டோம்.

‘’எனக்கு அவரை நேர்ல ஒருதடவையாச்சும் பார்த்துடணும்னு ஆசையா இருந்தது. ஆனா அவர் இடம் தேடிப் போய்ச் சந்திக்கறதுக்குத் தயக்கம். இந்த நேரத்துல என் கல்யாணம் அமைய, ‘கல்யாணத்துக்கு அவரைக் கூப்பிட்டா என்ன’னு தோணுச்சு. அப்போதும் ஃப்ரெண்ட்ஸ் சிலர், ‘என்னது மோகன் ரசிகையா? இன்னுமா கல்யாணம் முடியாம இருந்தது’னு கலாய்க்கப் போறாங்கடீனு’ கிண்டல் செய்தாங்க. ஆனாலும் கண்டுக்காம ஃபேன் கிளப்’ மூலமாவே முயற்சி செய்தேன். ‘இந்த ஜெனரேஷன் ரசிகை.. நீங்க வந்து வாழ்த்தணும்னு ஆசைப்படறாங்க’னு `ஃபேன் கிளப்’ நிர்வாகி கருணாகரன் சார் கேட்டிருக்கார். நானும் நேர்ல போய் அழைப்பிதழ் வைக்கணும்னு கேட்டேன். ‘என்னோட ரசிகைங்கறீங்க; அதனால நோ ஃபார்மாலிட்டி’னு சொல்லிட்டார். அதனால பத்திரிகையே தரலைங்க. ஆனாலும் கடைசி நேரம் வரைக்கும் வருவாரா மாட்டாரான்னு ஒரு பதற்றம் இருந்துட்டே இருந்தது. சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு முதல்ல உறுதியாச் சொல்லாம இருந்திருக்கார்.

மோகன்
மோகன்

ஆனா கல்யாணத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே வந்துட்டார். மண்டபம் இருந்த இடம் குறுகலான சாலை கொண்ட பகுதி. ‘மோகன் வர்றாரா’னு கூட்டம் திரண்டதுல, ஒருமணி நேரத்துக்கு மேல ரோடே பிளாக் ஆகிடுச்சு’’ என ஆச்சர்யத்திலிருந்து விடுபடாதவராகவே பேசிக் கொண்டே சென்றவர், ‘’எனக்கு மட்டுமில்லீங்க, இன்னைக்கும் உலகம் முழுக்க இருக்கற மோகன் சார் ரசிகர்களுக்கு ஒரேயொரு ஆசை, அவரோட ரீ என்ட்ரிதான். மோகன் சார் ஹீரோவா மட்டுமில்ல, வில்லனாகவும் அந்தக் காலத்துலயே கலக்கினவர். ‘நூறாவது நாள்’லாம் பார்த்திருப்பீங்கதானே? அதனால மோகன் சார் மறுபடியும் சினிமாவுக்கு வரணும். அதுவும் வில்லனா வந்தா நிச்சயம் இன்னொரு ரவுண்ட் வருவார்ங்கிறது எங்க கணிப்பு’’ என்கிறார் வினோதினி.

ஃபேன் கிளப் அட்மின் கருணாகரனிடம் பேசிய போது, ‘’வினோதினி திருமணம் குறித்துச் சொன்னவுடனேயே, ’என்னது 90 கிட்ஸ்லயும் எனக்கு ரசிகையா, அப்ப நிச்சயம் அவங்களைப் பார்த்தே ஆகணும்’னு சந்தோஷத்துடன் சொன்னவர் சொன்ன மாதிரியே வந்து கலந்துக்கிட்டார்’ என்றார்.

இது குறித்து மோகனிடம் பேசினோம்.

‘’ஆக்சுவலா நான் சோஷியல் மீடியாவுல இல்லை. ஆனா என்னோட ரசிகர்கள் ஃபேஸ்புக் பேஜ் வச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்ட போதே மகிழ்ச்சியா இருந்தது. அதுலயும் இன்றைய ஜெனரேஷன்லயும் என்னோட படங்களை ரசிக்கறாங்கன்னு கேள்விப்பட்டப்போ நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அந்தப் பொண்ணையோ, அந்தக் குடும்பத்தையோ அதுக்கு முன்னாடி நான் பார்த்தது கிடையாது. ஆனா அந்த மாதிரியான உள்ளங்களோட அன்பாலதான் நான் இன்னைக்கும் நல்லா இருக்கேன் என்பதைப் பெருமையோடவே சொல்லிக்க விரும்பறேன்.

மோகன்

அதேபோல என்னோட ரீ என்ட்ரி பத்தியும் ரசிகர்கள் ஆவலா இருக்காங்க. அன்னைக்கும் சரி; இன்னைக்கும் சரி, நான் நல்ல கதை, இயக்குநர், தயாரிப்பு நிறுவனமான்னு பார்த்துட்டுதான் படங்கள் பண்ணினேன். என்னைப் பொறுத்தவரை ஹீரோவா வில்லனாங்கிறது முக்கியமில்லை. மார்க்கெட்ல ‘சேலபிள் ஸ்டாரா’ இருந்தபோதே வில்லன் ரோல் பண்ணியிருக்கேன். அதனால இப்போதும் நல்ல யூனிட் அமைஞ்சு வில்லன் ரோல் கிடைச்சா டபுள் ஓ.கே.தான். அப்படி சில முயற்சிகள் நடந்திட்டிருக்கு. அந்தப் படங்கள் நடக்குமாங்கிறதைப் பொறுத்திருந்துதான் பார்க்கணும்’’ என முடித்துக் கொண்டார், மோகன்.

எழுதியவர் அய்யனார் ராஜன். நன்றி – விகடன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More