சீனமொழியில் தனுஷ் நடித்த அசுரன் ரீமேக் !

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும் வயதானவராகவும் இரு தோற்றங்களில் வந்தார். கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, வெங்கடேஷ் ஆகியோரும் நடித்து இருந்தனர். தனுசின் மூத்த மகனை கொன்ற வில்லனை இளைய மகன் கொலை செய்து பழிதீர்ப்பதும் அந்த இளைய மகனை ரவுடிகளின் கொலை வெறியில் இருந்து காப்பாற்ற தனுஷ் போராடுவதும் கதை. தனுஷ் படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது.

இந்த படம் தெலுங்கில் வெங்கடேஷ், பிரியாமணி நடிக்க நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. சிவாராஜ் குமார் நடிக்க கன்னட மொழியிலும் அசுரன் படத்தை தயாரிக்க உள்ளனர். இந்த நிலையில் சீன திரையுலகினர் அசுரன் படத்தை பார்த்து வியந்து சீன மொழியில் ரீமேக் செய்ய முன்வந்துள்ளனர். இதுகுறித்து சீன தயாரிப்பு நிறுவனம் அசுரன் படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் சீன மொழியில் ரீமேக் ஆன முதல் தமிழ் படம் என்ற பெருமையை அசுரன் பெறும். ஏற்கனவே ரஜினிகாந்தின் 2.0 மற்றும் பாகுபலி படங்களை சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

ஆசிரியர்