மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் பல பகுதிகளை குறிவைத்து இன்று கடுமையான விமானத் தாக்குதல்களை மேற்கொண்டன. இந்த தாக்குதல்களின் விளைவாக, ஈரானின் பல நகரங்களில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதுடன், பெரும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமனெயி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில், தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் அமைந்துள்ள ஒரு பெண்கள் தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவங்கள் மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்பு கவலைகளையும் அதிகரித்துள்ளன.
Live Updates
பிரான்ஸ் நாட்டின் கோரிக்கையை ஏற்று, பாரீஸ் நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரகாலமாக கூடி ஆலோசிக்க உள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இருதரப்பு தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் அலி காமனெயின் மறைவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், 07 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் அரசு செய்தி சேனலான IRINN, பின்னணியில் குர்ஆன் ஓதல் ஒலிக்க, திரையின் மேல் இடது மூலையில் கருப்பு பதாகையுடன் காமனெயியின் புகைப்படங்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. இந்த ஒளிபரப்பு நாடு முழுவதும் உணர்ச்சிப்பூர்வமான சூழலை உருவாக்கியுள்ளது.
இதற்கு முன்னர், ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை செய்தி தொகுப்பாளர் வாசித்தார். அந்த அறிக்கையில், காமனெயியின் மரணத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் காரணம் என கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், காமனெயியின் “தியாகம்” அடக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் புதிய எழுச்சியின் தொடக்கமாக அமையும் எனவும், இந்த சம்பவம் ஈரானிய மக்களிடையே மேலும் ஒருமைப்பாட்டையும் உறுதியையும் உருவாக்கும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்துக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரங்களான துபாய் மற்றும் அபுதாபியில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாயில் உள்ள துபாய் சர்வதேச விமான நிலையம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலின் போது, நான்கு விமான நிலைய ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். இடைமறிக்கப்பட்ட ஏவுகணை அல்லது ட்ரோனின் சிதறல்கள் விழுந்ததில் விமான நிலையத்தின் ஒரு பகுதி லேசான சேதத்தை சந்தித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணிகள் ஏற்கனவே அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்ததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அபுதாபியில் அமைந்துள்ள சயீத் சர்வதேச விமான நிலையம் அருகே நடந்த தாக்குதலில், இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் பாகங்கள் கீழே விழுந்ததில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அமீரக அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் மேலும் தீவிரமடைந்து வருவதை வெளிப்படுத்துவதாக சர்வதேச பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமனெயி மரணம் குறித்து கடும் சொற்களுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “வரலாற்றில் மிகக் கொடூரமான மனிதர்களில் ஒருவராகக் கருதப்பட்ட காமனெயி இப்போது உயிரிழந்துள்ளார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, அவரது வன்முறை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள பலருக்கும் கிடைத்த நீதியாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எங்கள் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளை அவர் ஏமாற்ற முடியவில்லை. இஸ்ரேலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட துல்லியமான நடவடிக்கையில், அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.
“இப்போது ஈரானிய மக்களுக்கு தங்கள் நாட்டை மீட்டெடுக்க கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பு இது. புரட்சிகர காவல் படை, இராணுவம் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்த பலரும் இனி சண்டையிட விரும்பவில்லை என்றும், பாதுகாப்பு நாடுகின்றனர் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன” என டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், “மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு நடவடிக்கைகள் தொடரும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இரானிய மக்களை நோக்கி உரையாற்றி, “அடக்குமுறையின் சங்கிலியை கழற்றி, சுதந்திரமும் அமைதியும் நிறைந்த இரானை உருவாக்க வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததற்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்த நெதன்யாகு, “மனிதகுலம் முழுவதையும் அச்சுறுத்தக்கூடிய அணு ஆயுதங்களை இரான் வைத்திருக்கக் கூடாது” என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
“எங்கள் கூட்டு நடவடிக்கை, துணிச்சலான இரானிய மக்கள் தங்கள் எதிர்காலத்தை தங்களது கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும்” என அவர் கூறியதுடன், தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இஸ்ரேலிய குடிமக்கள் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
ஈரான் சார்பில் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் ,ராணுவம் தெரிவித்துள்ளது, மேலும் தேவைப்படும் இடங்களில் அச்சுறுத்தல்களை இடைமறித்து தாக்க தாங்கள் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளது.
இஸ்ரேலின் ஹைஃபா நகரம் மற்றும் பிற இடங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. ஆனால், அவை ஏவுகணைகள் விழுந்ததால் ஏற்பட்டதா அல்லது அவை தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்டதா என்பது குறித்துத் தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
பிராந்தியத்தின் மற்ற பகுதிகளில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5ஆவது கடற்படைப் பிரிவின் சேவை மையம் "ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக" பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவசரகால எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும், மக்கள் அமைதியாக இருக்குமாறும், அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இந்தச் செய்தி வந்துள்ளது.
அத்தியாவசியத் தேவையின்றி இஸ்ரேலியர்கள் கூட்டமாகச் சேர வேண்டாம் என்றும் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த வழிகாட்டுதல் திங்கள்கிழமை இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய ஊடகங்களின்படி, இஸ்ரேலின் வான்வெளியும் மூடப்பட்டுள்ளது.