நேபாள-திபெத் எல்லையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக வீடுகள், வீதிகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் இதுவரை 177 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், 800க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 33 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திபெத்தின் கைரோங் (Gyirong) பகுதியில் குறைந்தது 558 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
காணாமல் போனவர்களில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். நேபாள சுற்றுலா வாரியத்தின்படி, 644 சுற்றுலாப் பயணிகள் இன்னும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இதில் இந்தியாவின் 178 பேர், நேபாளத்தின் 127 பேர், உக்ரைனின் 53 பேர், மலேசியாவின் 51 பேர், அமெரிக்காவின் 65 பேர், ஆஸ்திரேலியாவின் 35 பேர், மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 33 பேர் அடங்குவர்.
பாதிக்கப்பட்ட பகுதியானது இந்துக்கள் மற்றும் பௌத்தர்களின் புனிதப் பயண இடமான கைலாச மானசரோவர் (Kailash Mansarovar) செல்லும் முக்கிய பாதையாகும்.
முன்னதாக இப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) நடத்திய ஆய்வில், நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்றும், “பனிப்பாறை சரிவு மற்றும் சிதைவுக் கழிவுகளின் பெருக்கெடுப்பே” (glacial collapse and debris flow) இந்த பேரழிவை ஏற்படுத்தியது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதே இத்தகைய நிலச்சரிவுகளுக்குக் காரணம் என்று விஞ்ஞானி சைமன் குக் விளக்குகிறார்.
நேபாள இராணுவம் நிலத்திலும் வான்வழியிலும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 2,000 வீரர்களை நியமித்துள்ளது. இவர்களுடன் 3,318 பொலிஸாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரசூவா (Rasuwa) மாவட்டத்தின் ஹாகு பகுதியில் நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். திமுரே பகுதியில் இருந்து 21 இந்திய சுற்றுலாப் பயணிகள் உட்பட 95 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான துஞ்சே மற்றும் நுவாகோட்டில் இரவு நேரப் பார்வைக் கருவிகள் கொண்ட ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணி தொடர்கிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், வீதி வசதி மற்றும் இணையத் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
திபெத் பகுதியில் 1.5 மீட்டர் ஆழமுள்ள சேறும், குறுகிய மலைப் பாதைகளும் மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளன.
திரிசூலி ஆற்றின் குறுக்கே குப்பைகள் அடைத்துக்கொண்டு மற்றொரு பாரிய வெள்ளத்தை (landslide dam) உருவாக்கும் அபாயம் உள்ளதாக ஐசிஐஎம்ஓடி (ICIMOD) எச்சரித்துள்ளது.
சீன மீட்புக் குழுவினர் ஆற்றின் மேற்பகுதியில் உள்ள தற்காலிக ஏரியைப் பாதுகாக்க முயன்று வருகின்றனர்.
இந்த பேரழிவுக்கு ஆழ்ந்த இரங்கலை பௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
மேலும், நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லையோரக் கட்டமைப்புகள் சேதமடைந்திருப்பதால், நேபாளத்துக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
