இருண்ட காலத்தின் பாடல்களை
எந்த ராகங்களில் பாடுவேன் ?
இரத்தத்தில் நனைந்த வார்த்தைகளை எந்த மொழியில் எழுதுவேன் ?
கண்ணீரும் நிணமும் படர்ந்த நிலத்தில்
என்னைக் கடந்து செல்லும் காற்றில்
கருகல்வாசம்
என்நிழலில் வந்து பதுங்குகின்றன இறக்கை முளைக்காத புறாக்குஞ்சுகள்
அழுகல் கவிச்சியில் ஊறிய பாடல்
என் செவிப்பறையில் மோதுகிறது
என் இதயம் மெழுகாய் உருகி வடிந்து கொண்டிருக்கிறது
என் உயிர் பறவையாய்
பறந்து திரிகிறது
படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட படுகளம்
எங்கும்…
யாவற்றையும்
நான் மெளனமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
சிதறிக் கிடக்கும் உடல் சிதிலங்களை
எந்த காமிராவில் புகைப்படம் எடுப்பேன் ?
பெருகி உறைந்த குருதியை எக்கண்ணில் பார்ப்பேன் ?
தெய்வங்கள் எல்லாம் எங்கே போனது ?
அறம் என்பது என்னவானது ?
எளிய மனிதர்கள் இம்மண்ணில்
பொசுங்கி கருகும் காகிதங்களோ ?
வானம் இடிந்து வீழாமல்…
பூமி வெடித்து பிளக்காமல்…
இக் கொடுமைகள்
இனியும் தொடருவதோ ?
இருண்ட காலத்தின் பாடல்களை
எந்த ராகங்களில் பாடுவேன்?
இரத்தத்தில் நனைந்த வார்த்தைகளை
எந்த மொழியில் எழுதுவேன் ?
வசந்ததீபன்