விமானப் பயணங்களின் போது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பெற்றோர்கள் அருகில் அமருவதற்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க இங்கிலாந்து அரசு புதிய சட்டச் சீர்திருத்தங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இதற்காக முன்வைக்கப்பட்டுள்ள சிவில் விமானப் போக்குவரத்து மசோதா (Civil Aviation Bill) நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றால், குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர்களுக்கு இருக்கை ஒதுக்கீட்டுக்காக தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பில் போக்குவரத்துத் துறை (DfT) புதிய விதிமுறைகளை பரிசீலிக்க உள்ளது.
தற்போது, ஒரு பெற்றோர் தனது குழந்தையுடன் ஒன்றாக அமருவதற்கான இருக்கை ஒதுக்கீட்டுக்கு சில விமானங்களில் £104 வரை செலவிட வேண்டியுள்ளதாக இங்கிலாந்து போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மேலும், விமான முன்பதிவுகளில் ஏற்படும் சிறிய நிர்வாகப் பிழைகளை திருத்துவதற்கும் சில நிறுவனங்கள் £40 வரை கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விதிமுறைகளில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை 14 வயது வரை விரிவுபடுத்துவது குறித்தும் புதிய திட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
எனினும், இந்த திட்டத்துக்கு விமான நிறுவனங்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன.
Airlines UK, easyJet மற்றும் Ryanair ஆகியவை சிறிய பெயர் திருத்தங்களுக்கு ஏற்கெனவே கட்டணம் வசூலிப்பதில்லை என்றும், குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஒன்றாக அமர கட்டாயமாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளன.
Ryanair தலைமை நிர்வாகி மைக்கேல் ஓ’லரி, அரசின் இந்த அறிவிப்பை விமர்சித்துள்ளார்.
மேலும், விமானப் பயணங்களின் போது மோசமாக நடந்துகொள்ளும் பயணிகளைக் கண்காணித்து, அவர்களின் தகவல்களை விமான நிறுவனங்களுக்கு இடையே பகிரும் புதிய அமைப்பையும் மசோதா முன்மொழிகிறது. 2025ஆம் ஆண்டில் இதுபோன்ற 1,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதாவுக்கு அரச ஒப்புதல் கிடைத்தால், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு முன்னதாக புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.