இது ஒரு விசித்திரமான கொலைக்கதையாகும். மூன்று அப்பாவிகள், தெரியாத்தனமாக சூழ்நிலை காரணமாக மாட்டிக்கொண்டு விழித்த கதை. தன்னை ஒரு பெரிய கதாநாயகனாக நினைத்து பீற்றிக்கொண்ட ஒரு மூடன் தேவையின்றி உயிர் துறக்க வேண்டி ஏற்பட்ட கதை.
முதலில் “ஐயோ” என்றால் யார் ? அல்லது என்ன? என்று பார்ப்போம். உங்கள் யாவருக்கும் நன்கு பரிட்சையமான இயமதர்மராஜனின் மனைவி தான் ஐயோ. அதிகாரிகளிடம் அல்லது அமைச்சர்களிடம் ஏதேனும் உதவி பெற அவர்களின் மனைவிமாருக்கு வாழைக்குலை, கருவாடு, தேன், போத்தல் கொண்டு போய் கொடுத்து அலுவல் பார்ப்பது மாதிரி இயமனிடம் உயிர்ப்பிச்சை கேட்க இக்கட்டான சந்தர்ப்பங்களில் அவன் மனைவி ஐயோவைக் கூப்பிடுவது மனிதரின் இயல்பு.

ஒரு வனம் சூழ்ந்த வன்னிக் கிராமத்தில் நடந்த கதையிது. சுற்றிவர நாற்புறமும் யானைகள் நடமாடும் பெரும் காடு. அக்காட்டிலிருந்து சிறுத்தைகள் கிராமத்திற்கு வந்து ஆடுமாடுகளை அடித்து இழுத்துக்கொண்டு செல்வது சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாகும்.கிராமத்தின் நடுவே ஒரு பெரிய குளம். ஆண்டு முழுக்க நீர் நிறைந்து, தாமரைச்செடிகள் படர்ந்த குளம்.
குளக்கட்டின் ஒரு புறம் பிள்ளையார்கோவில். மறுபுறம் ஆசிரியர் குடியிருப்புடன் கூடிய கிராமத்தின் ஒரே ஆசிரியர் மட்டும் உள்ள பாடசாலை. கிராமத்தை ஊடறுத்து பெரிய காட்டாறு ஒன்று ஓடியது. அது மாரிக்காலத்தில் சில நாட்கள் கிராமத்தின் இரண்டு பக்க மக்களையும் தொடர்புகளின்றிப் பிரித்து வைத்துவிடும். முதலைகள் ஊருக்குள் வந்து நாய்கள், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகளைப் பிடித்துச் செல்வதும் வழமை தான்.
அவை கிராம இளைஞர்களின் கண்களில் பட்டால் மரக்கட்டைகளைக் கொண்டு அடித்தே கொன்றுவிடுவார்கள். கிராமத்தைச்சுற்றி அடர்ந்த பனம் கூடல்களும், புளியமரக் காடுகளும் வனத்தின் எல்லையிலே காட்சிதரும்.
செல்வமும் நேசனும் இக்கிராமத்தின் இளைஞர்கள். இருவரும் அண்ணன் தங்கைகளின் பிள்ளைகள். பிறப்பால் மட்டும் மைத்துனர்கள் அல்ல. மாற்றுச் சம்பந்தம் செய்து கொண்டமையால் மேலும் இறுகிய உறவு. ஒரே வயது. ஒரே குடும்பத்தில் பிறந்தமையால் இரட்டையர்களோ என்று எண்ண வைக்கும் தோற்றம். நல்ல உயரம். நல்ல நிறம். நல்ல குணம் மட்டுமல்ல பணிவும் நிறைந்தவர்கள். கடும் உழைப்பாளிகள். என்ன? கிராமத்தவருக்கேயான ஒரே ஒரு சிறிய குறை. வயல்களில மாடுகள் கொண்டு உழுதல், வரம்பு கட்டல், மாடுகளைக் காட்டில் விட்டு மேய்த்தல் என ஓடி ஓடி உழைத்துவிட்டு உடம்புழைவிற்கென்று பனங்கூடல்களிற்கு நடுவே உள்ள கள்ளுக்கொட்டிலில் மூன்று நான்கு பிளா நிறையக் கள்ளருந்திவிட்டுக் கொஞ்சம் வெறியுடன் தான் வீடு வந்து சேர்வார்கள்.

அடர்ந்த கானகத்தின் நடுவே அமைந்த கிராம்மாகையால் வெளியார் தொடர்பு மிகமிக குறைவு. தூரத்து ஊர்களில் குற்றம்புரிந்தவர்கள் கூலியாட்கள் என்ற போர்வையில், சட்டத்தின் கைகளில் இருந்து தப்புவதற்கு அங்கு வந்து வாழ்வது வழமை. கிராமத்தவர்கள் முட்டாள்களல்ல. ஓரிரு வருடங்கள் மிக அவதானமாக கண்காணித்து அபாயம் அற்றவர்கள் என்று கண்டால் மட்டுமே தொடர்ந்து வாழ விடுவார்கள். கெட்டவர் என கண்டால் உடனேயே விரட்டி விடுவார்கள். பண்டாவும் முத்தனும் கிராமத்திற்கு வந்து சில வருடங்களாகிவிட்டன.
பண்டா ஒரு கூனல் விழுந்த கிழவன். கிராம எல்லையில் ஒரு சிறு கொட்டிலில், நான்கு,ஐந்து நாய்களுடன் தானும் தன்பாடுமாய் வாழ்ந்து வந்தான். அவனது நாய்கள் நல்ல வேட்டை நாய்கள். நாய்களுடன் காட்டிற்குள் சென்று முயல், உடும்புகள், உக்குழான், பன்றிக்குட்டிகள் வேட்டையாடி வந்து ஊராருக்குக் கொடுப்பான்.
அவனது வேலியில் உடும்புகள் உயிருடன் திருகணை போல சுற்றப்பட்டு தொங்கிக் கொண்டு இருக்கும். கறிகள் இல்லாத சந்தர்ப்பங்களில் ஊர்ப் பெண்கள் பண்டாவிடம் சென்று நன்கு கொழுத்த உடும்பைத் தெரிவு செய்தால், அவன் அவ்விடத்திலேயே அவற்றைக்கொன்று, உரித்து, சுத்தம் பண்ணி கொடுப்பான். இரவில் ஊராருக்கு வயலில் பன்றிகள் வராது காவல் காக்க சென்று விடுவான். பண்டா கடுமையாக வெறி ஏறிவிட்ட சந்தர்ப்பங்களில் உளறிய கதைகளை வைத்து அவன் ஒன்றும் கெட்டவனல்ல என்றும், ஒருநாள் வெறி ஏறிய போதில் தன்னுடன் எதிர்த்து கதைத்த தன் மனைவியின் மேல் அம்மிக் குழவியை ,தூக்கிப்போட்டுவிட்டு, செத்தாளா? பிழைத்தாளா? என்றும் பார்க்காமல் ஓடி வந்தவன் என்றும் அறிந்து கொண்டனர்.
முத்தன் ஒன்றும் வயது போனவனல்ல. பதினாறு வயதினில் தனது காதலியை நண்பன் ஒருவன் பகிடி பண்ணிவிட்டான் என்பதற்காக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் தடி ஒன்றினால் ஓங்கி அடித்த அடி படக்கூடாத இடத்தில் பட, அந்த நண்பனும் இறந்துவிட்டான். கை பிழைபாட்டுக் கொலை என்பதாலும், முத்தனின் வயது கருதியும் அவனுக்குச் சில வருடங்களே சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
அவனது தண்டனைக் காலத்தில் ஒரு முறை கூட அவனது உற்றார், உறவினர்களோ, ஊரவர்களோ அவனைச் சென்று பார்க்கவில்லை. அவனை ஊரே பகிஸ்கரித்துவிட்டது. ஆனால் அவனது காதலி மட்டும் உறவினரின் கடுமையான வற்புறுத்தலின் பின்பும், வயது போகின்றது என்று கூட பார்க்காது முத்தனுக்காக காந்திருந்தாள்.
விடுதலை பெற்று வந்த இரவில் ஊராருக்குத் தெரியாமல் அவள் முத்தனுடன் ஓடி காட்டின் நடுவே இருந்த அந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தாள். அவளின் கதையைக் கேட்ட ஊரவர்கள், முத்தன் சட்டத்தினால் தேடப்படுபவனல்லன் என்பதாலும், உரியதண்டனையை முறைப்படி அனுபவித்தவன் என்பதனாலும் அவர்களை தங்கள் மத்தியில் வாழ அனுமதித்தனர்
முத்தன், செல்வம் நேசனது வயதை ஒத்தவனாக இருந்ததால் இயல்பாகவே அவர்களின் நண்பனானான். முத்தன் தனது சினேகிதர்களின் வேலைகளில் கூட மாட அவர்களுடன் வேலை செய்யலானான். முத்தனின் மனைவி ஊர் பெண்களுடன் வயல் வேலைகளுக்குப் போய் வந்தாள். காலம் இப்படியே போயிருந்தால் அவர்கள் வாழ்வு எவ்வித குழப்பமும் இன்றி அமைதியாகப் போயிருக்கும்.
பிரிட்டிஸ்காரன், போர்த்துக்கல் நாட்டவர் போலவோ அல்லது ஒல்லாந்தர் போலவோ இல்லை. மிகவும் காரியக்கார ஆட்கள். சின்ன மீன் போட்டு பெரிய மீன் பிடிப்பதில் வல்லவர்கள். அந்த வன்னிக் கிராமத்தின் குளத்தை அபிவிருத்தி செய்தால் அங்கு கூடிய வரியையும் பெறலாம். அந்த மக்களின் நன் மதிப்பையும் பெறலாம் என்று கருதி ஒரு அதிகாரியையும் இரண்டு உதவியாளர்களையும் அனுப்பி வைத்தனர்.
அங்கு நிறைய வண்டில்கள் இருந்தமையால் மண் ஏற்றுவதற்கு அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும், கிராமத்து மக்களைக் கூலியாட்களாக குறைந்த கூலியைக் கொடுக்கலாம் என்றும் சிபார்சு செய்தான். அதிகாரிகளும் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தனர். அவன் கரிய நிறத்தவன். உடல் பெருத்தவன். பனை மரம் போல நெடிய உயரமுடையவன். மூர்க்கன். பண்பாடு தெரியாதவன். கிராமத்து மக்களை அடிமைகள் போல நடத்தினான். கெட்ட வார்த்தைகளால் திட்டுவான். தங்கள் ஊர் குள அபிவிருத்தி என்பதனால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவனது சேட்டைகளைச் சகித்துக் கொண்டனர்.
மேடான இடங்களிலிருந்து வண்டில்களில் மண் ஏற்றப்பட்டு குளத்தின் அணை உயர்த்தப்பட்டது. வார இறுதியில் கூலியைக் கொடுக்கும் போது கூடிய தொகைக்கு கையொப்பம் பெற்று, குறைந்த தொகையை வழங்குவான். வண்டில்களில் மண் ஏற்றிய தடவைகளின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டி, குறைந்த தொகையை வழங்குவான். தட்டிக் கேட்பவர்களின் கன்னத்தில் அடிப்பான். செல்வம், நேசன், முத்தன் போன்ற இளைஞர்கள் அப்படியான சந்தர்ப்பங்களில் தலையிட்டு அந்த அதிகாரியை அடிக்க விடாது நெஞ்சைப் பிடித்துத் தள்ளி விடுவார்கள்.
அதனால் அவர்களிடம் அவனுக்கு கொஞ்சம் பயம். அவன் கள்ளுக் கொட்டிலிலும் ஊராருடன் முரண்பட்டுக் கொள்வான். செல்வம், நேசன், முத்தனுடன் அடிக்கடி பிரச்சனைப் பட்டுக்கொள்வான். அவன் தமிழில் கதைத்த போதிலும் எந்த ஊரான்? எந்த மத்த்தவன்? என்று யாரும் அறியமாட்டார்கள். ஊர் கோவிலைப்பற்றி கேவலமாக கதைப்பான். நண்பர்கள் அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பார்கள்கள். ஊர்ப் பெரியவர்கள் அவர்களை ஒரு மாதிரி அமைதிப்படுத்துவார்கள். ஊர்ப் பெண்களைப்பற்றி ஒரு நாள் கேவலமாக கதைத்துவிட்டான். பொறுக்கமாட்டாத நண்பர்கள் அவனை அடித்துத் துவைத்து விட்டார்கள். அவனால் நண்பர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் ஒரு முட்டாள் தன்மையான செயலைச்செய்தான்.
செல்வமும் நேசனும் பரம்பரையாக கமக்காரர்கள். சொந்தமாக வயல், ஆடு, மாடு, எருமை உடையவர்கள். அதனால் அவர்களின் மனைவிமார் கூலி வேலைக்குச் செல்வதில்லை. முத்தன் அப்படியல்ல. அதனால் அவனது மனைவியும் குளக்கட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. முத்தனின் மனைவி மிகவும் அழகானவள். சிவந்த,உயர்ந்த தோற்றம். நீள் வட்ட முகம். மேலும் அவள் ஓரளவு நாகரீகமான ஊரில் இருந்து வந்தவள். சேலை கட்டுவதிலேயே ஓரு ஒழுங்கு. நீண்ட தலை முடி இடை வரை நீண்டிருக்கும். நாக சர்ப்பம் போல நெளிந்து நெளிந்து மிக அழகாக இருக்கும். முத்தன் மிகவும் அதிஸ்டசாலி என்று அந்த ஊர் விடலைகள் இரகசியமாக கதைத்துக் கொள்வார்கள்.
அவளுக்கு முத்தன் மேல் எவ்வளவு காதல் இருந்திருந்தால் முத்தன் சிறையில் இருந்து வரும் வரை இவனுக்காக காத்திருந்திருப்பாள்.
அதிகாரி ஒரு மூடன். தனது செல்வச்செழிப்பைக் காட்டி அவளை மடக்கி விடலாம் என்று கனவு கண்டான். வேலை நேரத்தில் அவளுடன் அடிக்கடி தனகிக் கொள்வான். முத்தன் அறிந்தால் அவனை கொன்றுவிட்டு மறுபடியும் சிறைக்குச் சென்று விடுவானே என்று பயந்து பயந்து அவனது சேட்டைகளைப் பொறுத்து கொண்டாள். அதனை அவள் தன் மீது உள்ள விருப்பினால் என்று அதிகாரி பிழையாக நினைத்துக் கொண்டான். ஒரு நாள் அவள் தனித்திருக்கும் போது அவளின் கையைப்பிடித்து இழுத்து விட்டான். ஒரு கணம் திகைத்த அவள் மறுகணம் ஓங்கி அவனது கன்னத்தில் அறைந்துவிட்டாள். அதிர்ச்சியில் அவளது கையை விட்டு தனது முகத்தை அவன் தடவிய போது அவள் தப்பி ஓடிவிட்டாள்.
அழுது கொண்டு அவள் ஓடி வந்ததைக் கண்டு பதறிய முத்தன், நடந்தது என்ன என வினவினான். அவள் கூறியதைக் கேட்ட அவன் வீட்டின் உள்ளே ஓடிச் சென்று கத்தியை எடுத்து வந்தான். செய்தி கேள்விப்பட்டு ஓடி வந்த அவனது நண்பர்கள், அவனிடம் இருந்து கத்தியைப் பறித்த வைத்து விட்டு,அவனுடன் அதிகாரியை விசாரிக்கச் சென்றார்கள். ஊர்ப் பெரியவர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அங்கு இதுவரை இப்படிப் பட்ட கேவலமான சம்பவம் நடைபெற்றதில்லை.
இளைஞர்களை தனியே விட்டால் ஏதாவது ஏடாகூடமாக நடந்து விடும் என்று அஞ்சி தாமே விசாரிப்பதாக கூறி, அவர்களுடன் சேர்ந்து அதிகாரியிடம் சென்றார்கள். அதிகாரி ஊரே திரண்டு வருவதைக் கண்டு அஞ்சினான் இல்லை. மிகவும் இறுமாப்புடன் அவர்களை எதிர்கொண்டான். பெரியோர்கள் அவனிடம் வினவியபோது அவள் விருப்பத்துடனேயே தன்னிடம் வந்ததாகவும், ஆட்களைக் கண்டதும் பொய் கூறுவதாகவும் சாதித்தான்.
அதிகாரி, கூலி வேலைக்கு வரும் இளைஞர்களில் இருவரை தனக்கு சமைப்பதற்கும், தொட்டாட்டு வேலைகளுக்கும் என்று தன்னுடனேயே வைத்துக் கொள்வது வழக்கம். அவர்களுக்கு சனி, ஞாயிறு கூட சம்பளம் விழும். அவர்களின் சாப்பாடும் அவனுடன் தான். தன்னிடம் சலுகை பெறுபவர்கள்,தன் சார்பாக சாட்சி சொல்வார்கள் என்று நம்பி, அவர்களை அழைத்து விசாரிக்கும்படி ஊர்ப் பெரியவர்களிடம் கூறினான்.
பெரியவர்கள் அவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் “அதிகாரி பொய் சொல்லுகிறான். நாங்களே அவனை அடித்து, உதைக்க வெளிக்கிட்டோம். அதற்குள் அந்தப்பிள்ளை அவனுக்கு நல்ல அறை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டாள்.” என்று உண்மையைக் கூறினார்கள். அவர்களை நன்றி மறந்தவர்கள் என்று பேசியவன் திமிருடன் “என்னைக் கண்டு எல்லாப் பெண்களும் மயங்கி விடுவார்கள். ஏன், செல்வம், நேசனின் மனைவிமார் கூட என்னை வேலியால் எட்டி எட்டி பார்க்கிறவர்கள். “என்றும் கூறினான்.
அவன் சரிப்பட்டு வரான் என்று கூறிய ஊர்ப் பெரியவர்கள் மேற்பார்வைக்காக பெரிய அதிகாரிகள் வரும்போது எல்லோருமே சேர்ந்து முறைப்பாடு செய்வோம் என்று கூறி இப்போதைக்கு அவர்களை அமைதிபடுத்தினர்.
நண்பர்கள் மூவரும் அந்த அதிகாரியைக் கொன்றுவிட முடிவெடுத்தார்கள். அந்த அதிகாரியின் உதவியாளர்கள் திங்கள் வந்து புதன் திரும்பிச் செல்வார்கள். பின்னர் வியாழன் வந்து சனி திரும்பிச் செல்வார்கள். புதன்கிழமைகளில் நன்கு கள் குடித்துவிட்டு தனியாக உறங்குவான். அவனது கூடாரம் தனிமையான இடத்தில் ஊரெல்லையில் இருந்தது. பண்டாவின் கொட்டில் மட்டுமே அருகில் இருந்தது. பண்டா இரவில் தனது கொட்டிலில் உறங்குவதில்லை. எனவே நண்பர்கள் ஒரு புதன்கிழமை இரவைத் தமது அந்த தகாத செயலுக்கு தெரிவு செய்தனர்.

நண்பர்கள் எதிர் பார்த்தது போல பண்டா அன்று பன்றிக்காவலுக்குப் போகவில்லை. கடுமையான குலைப்பன் காய்ச்சலினால் நன்கு போர்த்து மூடிக்கொண்டு தனது கொட்டிலிலேயே படுத்துவிட்டான். நண்பர்கள் மூவரும் மூக்கு முட்டக் கள் குடித்தமையால் தங்களுக்குள் விவாதித்தபடியே அதிகாரியின் கூடாரத்தை நெருங்கினர். திடுக்கிட்டு முழித்த பண்டா “உஸ்” என்ற ஒரு சிறிய சத்தத்துடனே நன்கு பழக்கப்பட்ட தனது நாய்களை அமைதிப்படுத்திவிட்டான். அவை பல வேட்டைகளின் போது மிருகங்களை கலவரப்படுத்தாது அமைதிகாத்துப் பழகிய நாய்கள் அல்லவா?
நேசன் வெளியார் வருகிறார்களா? என்று பார்ப்பதற்கு கூடாரத்துக்கு வெளியே காவல் பார்ப்பது எனவும், செல்வன் அதிகாரியின் கைகளை அமுக்கிப் பிடிப்பது எனவும், தனது மனைவிக்கு அவன் ஏற்படுத்த இருந்த கழங்கத்திற்கு பழி தீர்ப்பதற்காக முத்தன் அதிகாரியை வெட்டிக் கொல்வது என்றும் முன்பே பேசி வைத்திருந்தார்கள். வெறியின் காரணமாக செல்வன் அதிகாரியின் கைகளைப் பிடிப்பதற்குப் பதிலாக அவனது தலையை அமுக்கிப் பிடித்தான். முத்தன் அதிகாரியின் கழுத்தை வெட்டுவதாக கருதி ஓங்கி வெட்டினானஞஅந்த வெட்டு செல்வனின் தோள்மூட்டில் ஆழமாக இறங்கியது. உடனேயே செல்வன் “ஐயோ,அது நான் மச்சான்” என்று குளறினான். அவன் மட்டும் அப்படிக் கத்தாமல் இருந்திருந்தால் இந்த கதையே மாறி இருக்கும். செல்வனின் தலை நிலத்தில் உருண்டிருக்கும்.
செல்வன் கத்தியதைக் கேட்டதும் முத்தனின் வெறி மறைந்தது. தான் செய்ய இருந்த செயலை எண்ணிப் பயந்து விட்டான். செல்வனின் மறுகையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கொண்டு போய் கூடாரத்திற்கு வெளியே தள்ளிவிட்டான். அதிகாரி மட்டும் கொஞ்சம் நிதானமாய் இருந்திருந்தால் இந்தக் கலவரத்தைப் பயன் படுத்தித் தப்பி ஓடி இருப்பான். அவன் “ஆ…ஊ…” என்று புலம்பி விட்டு மறு பக்கம் திரும்பிப் படுத்தான். முத்தன் அதிகாரியை ஓங்கி வெட்டினான். கதறக் கதற வெட்டினான். வெட்டிக் கொன்றுவிட்டு, செல்வனது கையிலிருந்து வழியும் இரத்தத்தை தடுக்க தமது சேர்ட்களை கிழித்து கட்டுப்போட்டுவிட்டு முத்தனும் நேசனும் கிராமத்தை நோக்கி ஓடினர்.
இந்த நாடகங்கள் யாவற்றையும் நேரில் பார்த்துவிட்ட பண்டாவின் காய்ச்சல் பறந்துவிட்டது. பயத்தில் மேலெல்லாம் உதறத் தொடங்கிவிட்டது. இப்போது கட்டுப்பாட்டை இழந்த நாய்கள் பயங்கரமாக் குலைக்கத் தொடங்கின. ஊர் மக்கள் யாவரும் விழித்துவிட்டனர். நண்பரகள் செய்துவிட்ட மா பாதகமான செயலை எண்ணி மனம் பதறிப்போய் விட்டனர். பெரியோர்கள யாவரும் ஒன்று கூடி விவாதித்தனர். பொலிசுக்குப் போகலாம் என்றனர் சிலர்.பொலிஸ் வந்தால் நண்பர்கள் மூவருக்கும் மரணதண்டனை தான் என்றனர் இன்னும் சிலர்.
அந்தக் கிராமத்தில் முன்னர் எப்போதும் இப்படியான மாபாதகமான செயல் நடந்ததில்லை. விடிந்து விட்டால் அதிகாரியின் உதவியாளர்கள் வந்துவிடுவார்கள். செயல் பாவகரமானதென்றாலும் இறுதியில் தம் உறவுக்கார இளைஞர்களைக் காப்பாற்றுவதென்றே பெரியவர்கள் முடிவு செய்தார்கள்.
கொஞ்சம் விபரம் தெரிந்தவரான ஒரு பெரியவர் பொறுப்பை எடுத்துக் கொண்டார். கண்கண்ட சாட்சியான பண்டாவை முதலில் ஊரை விட்டு அனுப்ப வேண்டும். பண்டாவிடம் அவன் கண்கண்ட சாட்சி, அதனால் அனுப்புகறோம் என்று சொல்ல முடியாது. அவர் பண்டாவை அழைத்து “பண்டா, இன்று எப்படியும் பொலிஸ் வரும். நீ, உன்னுடைய மனிஷியைக் கொன்ற விபரம் தெரிந்தால் ,உன்னையும் பிடித்து மறியலில் போட்டுவிடுவார்கள். ஆனபடியால் நீ, உன்னுடைய நாய்களையும் கூட்டிக்கொண்டு, உன்ரை முக்கியமான சாமான்களையும் எடுத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓடித்தப்பிவிடு. ஓடும் போது ஆற்றில் இறங்கி கொஞ்சத் தூரம் தண்ணியில நடந்து போய் மறுகரையில் ஏறி காட்டுக்குள்ளால் ஓடிவிடு. இல்லாவிட்டால் பொலிஸ் நாய்கள் உன்னை மோப்பம் பிடித்துவந்து உன்னைப் பிடித்துவிடும். ஓடு.” என்று கூறி கைச் செலவுக்கும் சிறிது பணத்தைக் கொடுத்து அவனை விரட்டி விட்டார்.
அடுத்ததாக கொலைக்கருவியான கத்தியை மறைக்க வேண்டும். அவர் இரண்டு இளைஞர்களை அழைத்தார். ஒரு சாக்கு கொண்டுவரப் பணித்தார். முத்தனைக் கொண்டே கத்தியைச் சாக்கினுள் போடச் செய்தார்.மற்றவர்களின் கை ரேகை அந்தக் கத்தியில் படக்கூடாதல்லவா? சாக்கினைச்சுற்றி எடுத்துக்கொண்டு சிறிது தூரம் ஆற்றுத்தண்ணீரில் நடந்து கடலுக்குள் செல்லும்படியும், கடலினுள் சிறிது தூரம் நடந்து சென்று கத்தியைத் தலையைச் சுற்றி எறிந்துவிட்டு திரும்பிப் பாராமல் வந்துவிடும்படியும், வரும் போது ஆற்றில் நன்கு முழுகி விட்டு வரும்படியும் அறிவுறுத்தினார்..

அடுத்ததாக பண்டா விட்டுச்சென்று விட்ட பழைய துணிகளையும் பாயையும் எடுத்து வரச்செய்து பாயினுள்ளே அவனது உடுப்புக்களையும், கொலை செய்தவர்களின் இரத்தக்கறை பட்ட உடுப்புக்களையும் போட்டு சுற்றி எடுத்துச் சென்று வயல்களின் எல்லையில் பன்றிக் காவலுக்கு மூட்டும் நெருப்பில் போட்டு மேலதிக மரங்களை போட்டு முழுமையாக எரியும் வரை பார்த்திருந்து வரும்படி பணித்தார்.
தோள் மூட்டில் விழுந்த வெட்டுக் காயத்திற்கு ஏற்கனவே கை வைத்தியம் செய்து இரத்தப்பெருக்கு நின்று விட்ட செல்வனை ஒரு வண்டியில் ஏற்றி தூரத்திலுள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப் பணித்தார். கொக்கைச் சத்தகத்தால் முருக்கங்காய் பிடுங்கும் போது கொக்கைச் சத்தகம் கழன்று விழுந்து வெட்டிவிட்டதாக கூறி அவனை அங்கு அனுமதிக்கும் படி கூறினார். அங்குள்ள ஓடலி அவரது தூரத்து உறவினர். பெரியவர் அனுப்பியதாக அவர்கள் கூறினார்கள். செல்வனும் ஒரு வகையில் அவருக்கு உறவு முறையானவன்.
நடந்தவற்றை அறிந்த அவர், அவர்களுக்கு உதவத்தீர்மானித்தார். வன்னியான் எப்போதும் இன்னொரு வன்னியானுக்கு ஒத்தாசை புரிவான். அவர்கள் கேட்டுக் கொண்டபடி திங்கட்கிழமையே செல்வனை அனுமதித்ததாக பதிவு செய்து அவனுக்கு முறைப்படி வைத்தியத்தையும் ஆரம்பித்தார். அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் வழமையாக புதன் கிழமை பத்து மணி போல வந்து திங்கள் தொடக்கம் வேலை செய்வது போல கையொப்பமிடுபவர் என்பதனால் பெரியவரின் திட்டம் எளிதாக நிறைவேறியது.
இனி ஒருவரையும் எதுவும் கதைக்காது வழமை போல குளத்து வேலையைச் செய்யும் படியும் பணித்தார். காலை விடிந்தது. ஊர் மக்கள் எதுவுமே நடக்காத மாதிரி குளக்கட்டு வேலையைச் செய்தபடி இருந்தனர். பத்து மணி போல வேலைக்குவந்த உதவியாளர்கள் கூடாரத்திற்குச் சென்றனர். உள்ளே சென்று பார்த்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். ஊராரும் அப்போது தான் பார்த்து தெரிந்துகொண்டது போல போய்ப்பார்த்தனர். அவர்களும் கூப்பாடு போட்டுக் கொண்டு ஓடி வந்தனர்.
உதவியாளர்கள் பொலிசுக்குப் போய் முறைப்பாடு செய்தனர். பொலிசும் வந்தது. உதவியாளர்கள் நண்பர்கள் மூவரையுமே சந்தேகப்படுவதாக கூறினார்கள். நேசன் தனது மனைவியைத் தனியே விட்டு விட்டு இரவில் ஓரிடமும் செல்வதில்லை என்று சாதித்தான். முத்தனின் மனைவியோ முத்தன் இரவு முழுக்க தன்னோடு இருந்ததாக உறுதியாக கூறினாள். பண்டா இல்லை என்பதை ஒருவரும் கவனிக்கவேயில்லை.
நண்பர்கள் மூவரும் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர். திங்கள் முதலே செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக டாக்டர் சாட்சியமளித்தார். கண்கண்ட சாட்சி யாரும் கிடைக்கவில்லை. கொலைக்கருவியையும் யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. முறையான சாட்சிகளில்லை என்று கூறி நீதிபதி வழக்கைச் தள்ளுபடி செய்தார்.
முத்தனின் மனைவி ஊர்ப் பெண்கள் தன்னுடன் முன்பு போல பழகுவதில்லை எனக்கூறி, அவனை வேறு ஊருக்கு கூட்டிச்சென்று விட்டாள். அந்த ஊர் பண்டா போன ஊருக்கு எதிர்த்திசையில் இருந்தது என்பதை யாரும் கூறத் தேவையில்லை.
அதிகாரிகள் கூடாரத்தையும் கழற்றிக்கொண்டு போய்ச் சேர்ந்தனர். குளக்கட்டு வேலை ஓரளவு முடிந்துவிட்டது .ஊர்ப் பெரியவர்களை அழைத்து தாம் எதிர் பார்ப்பது மாதிரி மிகுதி வேலையை முடிக்கும்படியும் அதற்கான பணத்தை தருவதாகவும் கூறினர். அதன்படியே ஊர்ப் பெரியவர்கள் முன் நின்று அவர்கள் எதிர் பார்த்ததை விடச்சிறப்பாக வேலையைச்செய்து முடித்தார்கள்.மகிழ்ச்சியடைந்த அதிகாரிகள் உரிய பணத்தை பெரியவர்களிடம் கொடுத்தனர். பெரியவர்களும் அதனை சரியாகப் பட்டுவாடா செய்தனர்.
இப்போது கூடாரமும் பண்டாவின் கொட்டிலும் இருந்த இடம் பாழடைந்து, பற்றைகள் முளைத்து காடாகத்தோற்றமளிக்கிறது. இரவில் அதிகாரியின் பேய் அந்தக் கொட்டிலை சுற்றி சுற்றி வருவதாக ஊரார் கூறுகின்றனர். பகலில் கூட ஒருவரும் அவ்விடத்திற்கு தனியே செல்வதில்லை.
அந்த அதிகாரியின் நடத்தை சரியில்லை என்பதையும், அந்த ஊர் மக்கள் அப்பாவிகள் என்பதையும் சரியாகப் புரிந்து கொண்ட அவனது மேலதிகாரிகள் அந்த வழக்கை மேலும் கிழற முனையவில்லை.
தாமும் தம் பாடும், வயல் வேலைகளும், மந்தை மேய்ப்பும், வேட்டையும் கோவில் வேலைகளும், காவடி ஆட்டமும் கூத்தும் என்று அந்த ஊர் மக்களின் வாழ்வு வழமை போல தொடர்ந்தது.
நிறைவு……
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வு நிலை அதிபர்