Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கண்ணில் மறையும் கனவுகள்! | சிறுகதை | விமல் பரம்

கண்ணில் மறையும் கனவுகள்! | சிறுகதை | விமல் பரம்

10 minutes read

 

அறையிலிருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள் பாரதி. லண்டனுக்கு வரும் போது இருந்த குளிர் இப்போது குறைந்து சூரிய வெளிச்சம் எட்டிப்பார்க்க தொடங்கி விட்டது. நாலு மணிக்கும் வெயில் குறையவில்லை. ஆறுமாத விசாவில் ‘சேர்பிற்றன்’ல இருக்கிற அண்ணாவிடம் வந்து நின்று விட்டு கடைசி ஒருமாதம் இங்கு வந்து ‘சட்பரி ரவுண்’ல, சுதாவோடு நிற்கிறாள். எத்தனையோ தடவை அண்ணா வரச்சொல்லிக் கேட்டும் வர மறுத்த பாரதி இப்போது தான் முதல் தடவையாக லண்டன் வந்திருக்கிறாள். தன் வாழ்நாளில் எங்கு போகக் கூடாது என்று வெறுத்து இருந்தாளோ அந்த இடத்திற்கு வந்திருக்கிறாள். இத்தனை வருடங்களில் எல்லாம் மறந்து இயல்பான வாழ்வுக்கு வந்துவிட்டதாக நினைத்தவளுக்கு இங்கே வந்ததும் தொலைந்து போன நினைவுகள் மீண்டும் எழுந்தது. நினைத்துப் பார்க்க மனமின்றி வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை சுதாவின் குரல் திரும்பிப் பார்க்க வைத்தது.

“இங்க தனியயிருந்து என்ன பார்க்கிறாய். நிர்மலா சுரபியுடன் வாறதாய் போன் பண்ணினாள். என்ர மகளும் சுரபியும் ஒரே வகுப்பு. இப்ப வருவினம். நீயும் வா” என்றாள்.

“நான் வரேல. அண்ணாவோட கதைக்கவேணும்“ என்றாள் பாரதி.

“பிறகு கதைக்கலாம். எப்ப பார்த்தாலும் அறைக்குள்ளேயேயிருக்கிறாய் வா”

இருவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள்.

அதேநேரம் சுதாவீட்டுக்கு முன்னால் வந்து காரை நிறுத்தினாள் நிர்மலா.

அக்காவின் மகனின் திருமணத்திற்கு எல்லோரும் இரண்டு கிழமை லீவில் ஊருக்குப் போய் நேற்றுத்தான் லண்டன் திரும்பியிருந்தார்கள். வரும்போது சுரபி சுமிக்காக வாங்கி வந்த பார்சலைக் கொடுப்பதற்கு வந்திருக்கிறார்கள்.

“உன்னை சுமி வீட்ட விட்டிட்டு நான் போறன். வெளியில கொஞ்ச வேலையிருக்கு, நீ சுதா அன்ரிக்கு கரைச்சல் குடுக்காமல் சுமியோடயிருந்து விளையாடு. ஆறு மணிக்கு வந்திடுவன்” என்று சொன்ன அம்மாவுக்கு,

“ஓகே அம்மா” என்று பதில் சொன்னாள் பத்துவயது சுரபி.

இவர்கள் வருவதை போன் மூலம் சொன்னதால் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சுமி ஓடி வந்து சுரபியின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே போனாள்.

“வாங்கோ நிர்மலா, நேற்றுத்தான் வந்தீங்கள் பயணக்களைப்பு மாறிட்டுதா” என்று கேட்ட சுதாவிற்கு தலையாட்டி சிரித்துக்கொண்டே போய் சோபாவில் அமர்ந்தாள். அவளின் பார்வை சுவரில் ஒட்டியிருந்த அலங்காரத்தில் பதிந்தது. இந்த வீட்டிலும் திருமணம் நடந்திருக்கிறது.

“அக்காவின் மகனின் வெடிங்க்குப் போனதால உங்கட தம்பியின்ர வெடிங்க்கு நிற்கமுடியேல” என்றாள் நிர்மலா.

“இரண்டையும் ஓரே நாளில வைச்சால் என்ன செய்யிறது. வரேலாது தானே. இப்ப பொம்பிளை, மாப்பிளை கனடாவுக்குப் போட்டினம். திரும்பி வர ஒரு மாதம் செல்லும்” என்றாள் சுதா.

“வரட்டும். வந்தபிறகு எல்லாரும் ஒரு நாளைக்கு வாறம்“ என்ற நிர்மலா சுதாவிற்கு அருகில் நின்ற பாரதியைப் பார்த்தாள்.

“இவள் என்னுடைய ப்ரெண்ட் பாரதி. கொழும்பு யூனிவர்சிட்டியில ஒண்டாய்ப் படிச்சனாங்கள். இடையில தொடர்பில்லை. பத்து வருசத்திற்குப் பிறகு கொழும்புக்குப் போனபோது எதிர்பாராமல் சந்திச்சோம். புதுப்பிச்ச நட்பு இப்ப தொடருது. வெடிங்க்கு வந்தவள். என்னோட ஒரு மாதம் நிக்கிறாள். ” என்று நிர்மலாவுக்கு பாரதியை அறிமுகப்படுத்தி வைத்தாள் சுதா.

“எங்க இருக்கிறீங்கள். இங்கையா இல்லை கொழும்பில இருந்து வந்தனீங்களா” என்று கேட்டாள் நிர்மலா.

“அண்ணா ‘சேர்பிற்றன்’ல இருக்கிறார். ஆறு மாத விசாவில வந்து அண்ணாவோட இருந்தனான். நாலுமாதம் முடிஞ்சுது. ஒரு மாதம் சுதாவோடு இருந்திட்டு திரும்ப கொழும்புக்கு போயிடுவன்” கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாள் பாரதி.

அதன் பிறகு, நடந்த திருமணங்கள் பற்றியும், ஊர்ப் புதினங்கள் பற்றியும் கதைக்கும் போது பாரதி அமைதியாகயிருந்து கேட்டுக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் நிர்மலா எழுந்தாள்.

“சுரபி இருக்கட்டும். எனக்கு வேலையிருக்கு. முடிச்சிட்டு வந்து கூட்டிக்கொண்டு போறன்” என்று சொல்லி பாரதியையும் பார்த்து தலையாட்டி விட்டு சென்றாள்.

வாசல் வரை சென்று அனுப்பிவிட்டு உள்ளே வந்த சுதா விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம்,

“என்ன சாப்பிடப் போறீங்கள்“ என்று கேட்டாள்.

“இப்ப ஒண்டும் வேண்டாம் அன்ரி. தண்ணி வேணும்“ என்று சொன்ன சுரபி எழுந்து வந்து பாரதியின் அருகிலுள்ள மேசையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள். போகும்போது பாரதியைப் பார்த்து,

“ஹாய் அன்ரி, பேசாமல் இருக்கிறீங்கள். என்னோட கதைக்கமாட்டீங்களா” என்று கேட்டாள்.

“இங்க வா. உன்ர பெயரென்ன“ என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் பாரதி.

“சுரபி “

“அப்பா, அம்மா பெயர்……”

“அப்பா சேகர், அம்மா நிர்மலா. அம்மாவோட நீங்கள் இப்ப கதைச்சீங்களே” என்றாள் சுரபி

ஓம் என்று தலையாட்டிய பாரதி அதன் பிறகு ஒன்றும் கேட்கவில்லை .

“போய் விளையாடு“ என்று அனுப்பி வைத்தாள்.

சுரபி பழையபடி போயிருந்து சுமியுடன் விளையாடத் தொடங்கினாள்.கதையும் சிரிப்புமாய் விளையாடிக்கொண்டிருந்தவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருந்தாள் பாரதி. வாழ்க்கையில் நொந்து இறுகிப் போயிருந்த அவள் மனதில் ஏதேதோ நினைவுகள் வந்து போனது. ஒரு பெருமூச்சோடு திரும்பி சுதாவைப் பார்த்தாள். சுதா பாரதியையே பார்த்துக் கொண்டிருந்தாள் .

“என்ன பார்க்கிறாய்” பாரதி கேட்டாள்.

“ஒண்டுமில்லை. நீ என்ன சாப்பிடுறாய். ரீ போடட்டுமா” என்றாள்.

“சாப்பிட ஒண்டும் வேண்டாம். சுடச்சுட ரீ குடிக்கப்போறன்“ என்றாள் பாரதி.

படிக்கும் போது எந்த நேரமும் கலகலத்துக்கொண்டிருப்பவள் எப்பிடி மாறிவிட்டாள் என்று நினைத்துக்கொண்டே ரீ போட்டு பாரதிக்கு கொடுத்து விட்டு அவள் அருகில் அமர்ந்தாள் சுதா.

“நிர்மலாவை உனக்கு எப்பிடித் தெரியும். சொந்தமா” பாரதி கேட்டாள்.

“சொந்தமில்லை, சுமியோட ஸ்கூலுக்குப் போகும்போது தான் அறிமுகமாச்சு. கதைச்சுப் பழகி நல்ல ப்ரெண்ட்ஸாகி விட்டோம். இங்க பிள்ளைகளைத் தனிய விடேலாது. ஏத்தி இறக்க வேணும் .எங்களுக்கு நேரமில்லாவிட்டால் நிர்மலாவுக்குச் சொன்னால் சுரபியோட சுமியையும் கூட்டிக் கொண்டு போய் வைச்சிருப்பினம். நாங்களும் அப்பிடித்தான். நாலு வருசப் பழக்கம். நிர்மலாவுக்கு நல்ல குணம். உதவியெண்டால் முன்னுக்கு நிற்கும்”

“எங்க இருக்கினம் வீடு தூரமா”

“நாங்கள் இருக்கிறது ‘சட்பரி ரவுண்’ல, அவையள் ‘சட்பரி ஹில்’ல இருக்கினம். இங்கையிருந்து பத்து நிமிஷத்துக்குள்ள தான் கார் ஓட்டம். கிட்ட இருக்கிறதும் எங்களுக்கு வசதியாய் போயிட்டுது.” என்றாள் சுதா.

இருவரும் கதைத்துக்கொண்டிருக்கும் போது நிர்மலாவும் திரும்பி வந்து விட்டாள்.

“இங்க ஒரு வீட்டுக்குப் பார்சல் தந்து விட்டவை. குடுக்கிறதுக்குப் போன் பண்ணினால் ஏழு மணிக்குப் பிறகு தான் வீட்ட வருவினமாம். அது வரைக்கும் இங்க இருந்து குடுத்திட்டுப் போவம்” என்று சொல்லிக்கொண்டு வந்து அமர்ந்தாள்.

“வெடிங்க்குப் போனீங்களே கொழும்பில தான் நடந்ததா” தயங்கியபடி நிர்மலாவிடம் கேட்டாள் பாரதி.

“இல்லை, யாழ்ப்பாணத்தில நடந்தது. ஒரு கிழமை அங்க நிண்டிட்டு மற்றக் கிழமை சேகரின்ர அப்பா, அம்மாவோட சாவகச்சேரியில நிண்டனாங்கள்” என்றாள் நிர்மலா.

“லண்டனுக்கு வந்து எத்தனை வருசமாச்சு” பாரதி திரும்பவும் கேட்டாள்.

“இருபத்திரண்டு வருஷமாச்சு. ஸுடண்ஸ் விசாவில வந்து படிச்சனான். இங்க தான் வெடிங்க் நடந்தது. விரும்பிச் செய்ததால ஊரிலயிருந்து ஒருத்தரும் வரேலை. அஞ்சு வருஷத்துக்குப் பிறகு சுரபி பிறந்து சமாதானமானாப் பிறகு நாங்கள் போக நினைச்சாலும் பத்து வருசத்துக்குப் பிறகு தான் போக முடிஞ்சது. அதுக்குப் பிறகு இப்பதான் போய்வாறம்“ என்றாள் நிர்மலா.

“சாவகச்சேரியில எந்த இடம்”

“மீசாலை. மாமா, மாமி சேகரின்ர அக்கா மல்லிகாவோட இருக்கினம். வயதும் போயிட்டுது. சுரபியைக் கூட்டி வந்து காட்டுங்கோ எண்டு கேட்டபடி. கல்யாணச்சாட்டில போய் பார்த்திட்டு வந்திட்டம்” என்றாள் நிர்மலா. பிறகு பாரதியைப் பார்த்து,

“உங்களுக்கு எத்தனை பிள்ளைகள். என்ன செய்யினம்” என்று கேட்டாள்.

“பிள்ளைகள் இல்லை” என்றாள் பாரதி.

“ஓ” என்றபடி பாரதியின் நெற்றியில் பொட்டு இருப்பதைப் பார்த்து விட்டு,

“உங்க கணவர் என்ன செய்யிறார்” என்று கேட்டாள்.

“என்னோட இல்லை”

“சொறி. நான் கேட்டிருக்கக்கூடாதோ“ என்றாள் மெல்லிய குரலில்.

“பரவாயில்லை. கேக்கிறதில என்ன தப்பு” என்று பாரதி சொன்னதும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் எல்லோரும் சிறிது நேரம் மௌனமாய் இருந்தார்கள்.

“உங்கட சொந்த ஊர் எது” மௌனத்தைக் கலைத்து நிர்மலா பாரதியைப் பார்த்து கேட்டாள்.

“கொழும்பில தான் கன வருசமாய் மற்ற அண்ணாவோட இருக்கிறன். ஊருக்குப் போறேல. அங்க ஒருத்தரையும் தெரியாது” என்றாள் பாரதி.

அந்த நேரம் போன் வரவும்,

“வந்திட்டினம் நாங்கள் வெளிக்கிடுறம், சுரபி…….” என்று அழைத்தாள் நிர்மலா.

சுரபி வரவும் பாரதி அவளைப் பார்த்து,

“போகும்போது அன்ரிக்கு கிஸ் தரமாட்டீங்களா” என்று கேட்டாள்.

சுரபி அம்மாவைப் பார்க்க

“போய் அன்ரியை ஹக் பண்ணி கிஸ் குடுத்திட்டு வாங்கோ” என்றாள் நிர்மலா.

அவர்கள் போனபின்பும் பாரதிக்கு அவர்கள் நினைவாகவேயிருந்தது. பார்த்த முதல் நாளே பல நாட்கள் பழகியதுபோல நிர்மலா சரளமாய்க் கதைத்ததும் சுரபியின் சுட்டித்தனமும் அவள் மனதில் ஆழப்பதிந்தது. சுரபி கன்னத்தில் முத்தமிட்டதை ஆசையோடு தடவிப் பார்த்தாள். கண்களிலிருந்து வழிந்த நீர் கையை ஈரமாக்கியது. வேண்டாம் ஒன்றுமே நினைக்ககூடாது என்று நினைத்தாலும் மனம் அமைதியில்லாமல் தவித்தது. எனக்கு ஏன் இப்படியொரு கஷ்டத்தைத் தந்தாய் என்று கடவுளை நொந்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

விடிய எழுந்து அறையை விட்டு வெளியே வந்தபோது சுதா ரீயோடு காத்திருந்தாள்.

“ஏன் இரவு நித்திரை வரேலையா. கண்ணெல்லாம் சிவந்திருக்கு” என்றாள்.

“தலையிடி. பனடோல் போட்டும் மாறேலை. நித்திரையும் குறைவு“ என்றாள் நெற்றியைத் தடவியபடி.

“இவ்வளவு நாளும் ஓகேயாய் தானே இருந்தாய். நிர்மலா உன்னைப்பற்றிக் கேட்டு பழைய நினைவுகளைக் கிளறி விட்டிட்டாள்”

பாரதி ஒன்றும் சொல்லாமல் ரீ குடிப்பதில் மும்முரமாகயிருந்தாள்.

“உன்னைப்பற்றி எனக்கும் முழுசாய் தெரியாது. நான் கேட்டு உன்ர மனம் நோகக் கூடாது எண்டு நானும் விபரம் கேட்கவில்லை”

“என்ர கவலையை உனக்குச் சொல்லி உன்னையும் ஏன் கவலைப்பட வைப்பான் வேண்டாம் சுதா” என்றாள் பாரதி.

“கலியாண வாழ்க்கை பிழைச்சுப்போச்சு எண்டாய். அதோட உன்ர வாழ்க்கை

முடிஞ்சுதே. பிள்ளையுமில்லை. கொஞ்சநாள் பொறுத்து இன்னொரு கலியாணம் செய்திருக்கலாமே” என்றாள் சுதா ஆதங்கத்துடன்.

“அந்த நேரம் பட்ட துன்பம் போதாதே” சலிப்புடன் சொன்னாள் பாரதி.

“ஒரு வாழ்க்கை சரியில்லையெண்டால் மற்றதும் சரிவராதே. நீ ஏன் அப்பிடி நினைக்கிறாய். எனக்கு உன்ர இரண்டு அண்ணாமாரிலும் தான் கோபம். நீ வேண்டாம் எண்டால் விடுறதே”

“எல்லாரும் கேட்டு நான் மறுத்ததால அவையளும் என்னோட கொஞ்சக்காலம் கதைக்கேல” என்று வருத்தத்துடன் சொன்னாள் பாரதி.

“உனக்கெண்டு ஒரு குடும்பம் வேண்டாமா பாரதி. நீ யோசிச்சிருக்கலாம்”

“ஊருக்குள்ள அவமானப்பட்டு, துன்பப்பட்டு, மனம் தேறி நிமிர காலம் கடந்து போயிட்டுது. பிறகு என்ன வாழ்க்கையடி. விடு எல்லாம் முடிஞ்சுது. இனி அதைப்பற்றிக் கதைச்சு என்ன ஆகப்போகுது” என்று சொல்லிக்கொண்டு அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றாள் பாரதி.

அன்று மாலை நிர்மலாவிடமிருந்து சுதாவிற்கு போன் வந்தது.

“சனிக்கிழமை ஏதாவது பிளான் இருக்கா. இல்லையெண்டால் எல்லாருமாய் பார்க்குக்கு போய் வருவமா” என்று கேட்டாள் நிர்மலா.

“நாங்களும் எங்கையாவது போவம் எண்டு நினைச்சிக் கொண்டிருந்தனாங்கள். எந்த பார்க்குக்குப் போவம். யார் யார் வருகினம்” சுதா கேட்டாள்.

“நாங்களும், நீங்களும் ‘றைசிலிப் லிடோ’ பார்க்குக்குப் போவம். சாப்பாட்டையும் கொண்டு போனால் பிள்ளைகளை விளையாட விட்டு ஆறுதலாய் வரலாம்” என்றாள்.

போனை வைத்துவிட்டு பாரதியிடம் வந்தாள் சுதா.

“ குளிர் நேரத்தில ஒரு இடமும் போகேலாது. இனி பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வெளியில போக வேணும். வாற கிழமை எல்லாருமாய்ப் போனால் பிள்ளைகள் சேர்ந்து விளையாடுவார்கள். நாங்களும் ஆறுதலாயிருந்து கதைச்சிட்டு வரலாம்.நீயும் வா” என்றாள்.

பார்க்குக்குப் போவதற்கு முதல் நாள் சமையலுக்கும், கொண்டுபோவதற்கும் தேவையான பொருட்களை வாங்குவதற்கு சுதாவும், நிர்மலாவும் போக சுமியும் சுரபியும் பாரதியோடு இருந்தார்கள். வாய் ஓயாது கதைத்துக் கொண்டிருக்கும் இருவரின் கதைகளையும் கேட்டு கொண்டு எழுந்து போக மனமின்றி அவர்களோடிருந்தாள் பாரதி.

“அன்ரி என்ர பேர்த்டேக்கு இன்னும் எட்டு நாள் இருக்கு. நீங்கள் கட்டாயம் வரவேணும்” என்றாள் சுரபி.

“நீ வரச்சொன்னால் வருவன். எங்க கொண்டாடிவீங்கள்”

“எங்கட வீடு பெரிசு. வீட்டில தான் கொண்டாடுவோம்” என்றாள் உற்சாகமாக.

“வீட்டில எத்தனைபேர் இருக்கிறீங்கள்” கேட்டாள் பாரதி.

“அப்பாவும், அம்மாவும், நானும் இருக்கிறம்”

“யார் உனக்கு பாடம் சொல்லித்தாறது”

“அம்மா தான். எனக்கு அப்பாட்ட படிக்கத்தான் விருப்பம். அப்பா எனக்கு பேசமாட்டார். அம்மாவுக்கு கோவம் வந்தால் பேசுவா. நெடுகவும் படி படியெண்டு சொல்லுவா” தாயின் மீது குற்றச்சாட்டை அடுக்கிக் கொண்டே போனாள்.

“படிச்சால் தானே கெட்டிக்காரியாய் வரலாம்”

“இப்பவே ஏன் பிள்ளையை கஷ்டப்படுத்துறாய் எண்டு அப்பா சொல்லுவார் .நான் வளந்தாப் பிறகு படிப்பன் தானே அன்ரி” வாயைச் சுழித்து கதைக்கும் அழகில் தன்னை மறந்து சுரபியை தன்னோடு அணைத்துக் கொண்டாள் பாரதி.

நிர்மலாவும் சுதாவும் வந்தார்கள். கொண்டு போகும் பொருட்களை ஒழுங்கு செய்து வைத்து விட்டு நிர்மலா சுரபியுடன் வீட்டுக்குபோக ஆயத்தமாக சுரபி ஓடி வந்து பாரதியை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாள்.

“அன்ரி நீங்கள் கேக்க முதலே கிஸ் தந்திட்டன். ஓகே தானே” சிரித்துக் கொண்டு சொன்ன சுரபியை கண்வெட்டாமல் கண்களில் துளிர்த்த நீரோடு நிமிர்ந்து பார்த்தாள் பாரதி.

இரவு படுத்து கண்களை மூடினாலும் சுரபியின் கதையும் சிரிப்புமே கண்ணுக்குள் வந்து நின்றது. அன்ரி என்று காதுக்குள் அழைப்பது போலிருந்தது. சுரபியை விட சுமியோடு அதிக நேரமிருந்தாலும் சுரபியின் அணைப்பும் கொஞ்சலும் அவளின் மன வைராக்கியத்தைப் பாடாய்ப்படுத்தியது. மனதை அடக்கி, கவலைகளைப் புதைத்து சாதாரணமாய் இருப்பதாகக் காட்டிக் கொண்டதெல்லாம் பொய்யாகிப் போனதுபோல் உணர்ந்தாள். நான் ஏன் பலவீனமாகிப் போனேன். பதில் தெரிந்தும் நினைத்துப் பார்க்க பயந்தாள். நித்திரையும் வரமறுத்தது.

விடிய எழுந்த போது தலையே வெடிப்பது போலிருந்தது. கண்கள் சிவந்திருந்தது. சுதா அவளைப் பார்த்து பயந்துவிட்டாள்.

“என்ன செய்யுது. பனடோல் போட்டிட்டு கொஞ்ச நேரம் படுத்திரு.போற நேரம் எழும்பலாம்” என்றாள்.

“பயங்கரமாய் தலையிடிக்குது இதோட வரேலாது. இப்பிடி அடிக்கடி வாறது. பனடோல் போட்டிட்டு படுத்தால் கொஞ்சம் சுகமாயிருக்கும். நீங்கள் போயிட்டு வாங்கோ. நான் வரேல”

எல்லோரையும் அனுப்பிவிட்டு வந்து கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

மனவேதனையா….உடல்வேதனையா…..தாங்கமுடியாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அடுத்தநாள் அண்ணாவோடு போய் ஒரு கிழமை நின்றுவிட்டு வருவதாகச் சொல்லி விட்டுப் போனாள். பார்ட்டிக்கு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனாலும் அவளால் வரமுடியவில்லை. திரும்பி சுதா வீட்டுக்கு வந்த போது சுரபியும் அங்கேயிருந்தாள்.

“அன்ரி நீங்கள் ஏன் என்ர பேர்த்டேக்கு வரேலை” என்று அழும் குரலில் கேட்டாள் சுரபி. “வரமுடியேலயடா. நீங்கள் சந்தோஷமாய் கொண்டாடினீங்களா” என்று கேட்டாள்.

“ஓ… நிறையப்பேர் வந்தவை. பெரிய கேக் வெட்டினனான். நீங்கள் எங்கட வீட்டுக்கு வரவேணும் எப்ப வருவீங்கள்” கேட்டு அடம்பிடித்தாள்.

“வாறன்” என்று சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்.

கொழும்புக்குப் போவதற்கு முதல்நாள் அறையிலிருந்து பாரதி தன் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.

“அண்ணாவின்ர பிள்ளைகளுக்கு கொடு“ ஒரு பார்சலை அவளிடம் கொடுத்தாள் சுதா.

“நான் எல்லாருக்கும் வாங்கிக்கொண்டு போறன் தானே. பிறகு நீ ஏன் வாங்கினாய்”

பாரதி சொல்லியும் கேளாமல் அவளின் பெட்டிக்குள் வைத்தாள்.

அந்தநேரம் கதவு மணியின் சத்தம் கேட்டது.

“நீ இரு நான் பார்த்திட்டு வாறன்“ என்று சொல்லி எழுந்து போனாள் சுதா. கதவைத் திறந்தபோது வெளியே நிர்மலாவும் சுரபியும் நின்றிருந்தார்கள்.

“அன்ரி நாளைக்குப் போறாவாம். பேர்த்டே கிவ்டை குடுக்கவேணுமாம். கொண்டு வந்திருக்கிறாள். வீட்டில ஒரே அன்ரி புராணம் தான்” சிரித்துக் கொண்டே சொன்னாள் நிர்மலா.

“வாங்கோ வந்து இருங்கோ“ என்று சுதா அழைத்தாள்.

“இல்லை. நாங்கள் அவசரமாய் ஒரு இடத்துக்குப் போகவேணும். சேகர் காருக்குள்ள இருக்கிறார். பிறகு வாறன். அன்ரிட்ட குடுத்திட்டு வாம்மா” என்றாள் நிர்மலா.

அறையிலிருந்த பாரதிக்கு ‘சேகர்’ என்ற சொல் காதில் விழுந்ததும் மெதுவாக எழுந்து ஜன்னல் அருகில் வந்து திரைச்சீலையை ஒதுக்கி வெளியே பார்த்தாள்.

காரில் அமர்ந்தபடி காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு இவர்களுக்காகக் காத்திருக்கும் சேகரின் முகம் கண்ணில் பட்டதும் மனதில் ஏற்பட்ட வலி உடலெல்லாம் பரவியது. வருடங்கள் கடந்ததால் ஏற்பட்ட முதிர்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த திருமணமும் நினைவுக்கு வந்தது. ஒரு மாதத்தில் லண்டன் போய் கூப்பிடுவேன் என்று போனதும், லண்டனில் வாழப்போகும் கனவோடு காத்திருந்ததும், மெல்ல மெல்ல தொடர்புகள் குறைந்து மௌனமாயிருந்ததும், ஒரு வருடத்தில் டிவோஸ் கேட்டு வந்ததும், குடும்பமே பதறி சமாதானத்திற்கு அலைந்ததும், காரணம் தெரியாமல் துடித்ததும், இரண்டு வருடத்தில் உன்னோடு வாழ விருப்பமில்லை என்றதும், விருப்பமில்லாதவனோடு என்ன வாழ்க்கை என்று சம்மதித்து டிவோஸானதும், குடும்பமே இடி விழுந்தது போல் கலங்கியதும், ஊருக்குள் அவமானப்பட்டு நொந்துபோனதும், இன்னொரு வாழ்க்கையைத் தேடப்பயந்தது எல்லாம், அவன் முகம் பார்த்தும் நினைவுக்கு வந்து அனுபவித்துக் கொண்டிருந்த வலியை மேலும் கிளறியது.

நாங்கள் விரும்பி செய்தனாங்கள் என்று நிர்மலா சொன்னது நினைவில் வர, அதனால் தான் என்னை வேண்டாம் என்றானா. சொல்லியிருக்கலாமே. காரணம் தெரியாமல், எனக்கென்று ஒரு வாழ்க்கையையும் தேடாமல் துன்பப்பட்டேனே.. கண்ணீர் வழிய மனதிற்குள் மறுகினாள்.

“அன்ரி“ கையைப் பிடித்து அழைத்த சுரபியை திரும்பிப் பார்த்தாள்.

“எங்களை விட்டிட்டுப் போறதை நினைச்சு அழுறீங்களா அன்ரி. இந்த கிவ்ட் உங்களுக்கு” பார்சலை நீட்டினாள்.

“அப்பா எங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் போகோணும்” என்றாள்.

அப்பா, அப்பாவென்று உருகும் இவள் துன்பப்படக் கூடாது. அவன்தான் என்று தெரிந்ததும் ஓடி, ஓடி ஒளிந்தது போதும். எல்லா நினைவுகளுக்கும்,இந்த லண்டனுக்கும் குட்பை சொல்லிவிட்டு போய் விடவேண்டும். இவளையும் பார்ப்பது இதுவே கடைசியாய் இருக்கட்டும். நினைவுகள் தொண்டையை அடைக்க சுரபியை தன் நெஞ்சோடு அணைத்து, தன் அன்பையெல்லாம் திரட்டி அவள் கன்னத்தில் முத்தமாய்ப் பதித்தாள் பாரதி.

 

நிறைவு..

 

– விமல் பரம்

நன்றி : IBC தமிழ் பத்திரிகை

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More