செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அப்பா..!! | ந. பிரதீப்

அப்பா..!! | ந. பிரதீப்

0 minutes read

அறுபது வயசாச்சாப்பா உனக்கு?

அப்பா..!!

நடிக்காதே
பொய் பேசாதே,

நான்
ஏறி மிதித்த இடங்களில்
உனக்கு
கனத்ததில்லையா..?

தோற்றுப்போன காதலால்
சிகரெட் நாறும்
என் உதடுகளின் மேல்
சினக்காமல்,
கன்னங்களைத்தடவி
கெஞ்சுகிறாயே
தாடி மழிக்கச்சொல்லி….!

உன் இடுப்பில்
யானை ஏறி சேனை விரட்டி,
அலுத்துப்போய் உறங்கிப்போன
விறாந்தையில்த்தான் நீயும் கிடக்கிறாய்…

துடுப்பு வலித்து
சோர்ந்து போன கைகளை
தடவிப்பார்க்க ஆசை,

ஆனால்
அதை நான் செய்ததேயில்லை…

அடுப்புக்கரி அப்பி
மாமிச வெடுக்கேறி
வெளுத்துப்போன சாரத்தை
அலம்பி காயவைக்க நினைப்பேன்,

கொழுத்துப்போன மனம்
கொஞ்ச நேரத்தில் மாறிப்போகும்…

புகை எரித்து
பொங்கிப்போன கண்களை
நேருக்கு நேரே,பார்க்க
தாங்கவில்லை அப்பா…

நோகாதே…
என் பேரன்பும் பிரியங்களும்
உனக்கு போதும்…

உன்
மிதிவண்டியிலும் முதுகிலும்
சுற்றி வந்த பயணங்களுக்காக,

அடம்பிடித்து வாங்கிய
படம்போட்ட புத்தகப்பைக்காக,

உனக்காக
எப்போதுமே வாழாத
உனக்காக

நன்றியோடு
இருக்கிறேன் அப்பா…!!!

ந. பிரதீப்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.