December 2, 2023 10:38 am

போராளிகள் புதைக்கப்படும் இடத்திலிருந்து | தேன்மொழி தாஸ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email


எங்கள் கெபிகளை
என்றும் சிலந்திகள் கூட வலை நெய்து
அடைக்கப் போவதில்லை

நீர்க்கால்கள் எம் மண்ணை
பிரித்துப் பார்க்கப் பழகி
ஆண்டுகளாகிவிட்டன

ரத்தம் வழிந்தோடும் இடமெல்லாம்
யுத்தம் என்ற முழக்கம்
எங்கள் குரல்வளையில்
குடியேறிவிட்டன

அகரமும் இகரமும் ழகரமும்
எங்கள் மொழியழகு
நீ எழுதிப் பழகவே யுகம் வேண்டும்

தமிழினத்தின் ஆன்ம எழில்
ஆயுதத்தால் சாகாது
உங்களால் எங்கள்
ஆயுத எழுத்தைக் கூட அழிக்க இயலாது

நதிகள் கொந்தளித்துச்
சிங்களத் தீவுகள் நகர்ந்து வந்தாலும்
பயப்படத் தமிழன்
புல்லுக்குப் பூவாய் பிறக்கவில்லை

வீசிய குண்டுகளால்
குடல் நடுச்சாலையில்
சிதறிய பின்னும்
நாங்கள் நக்கிப் பிழைக்கவில்லை

உணவோடு ரத்தமும் தண்ணீருமாய்
பிசைந்து தின்று திரியும் விரல்கள்
சுதந்திர காலம் வரை துடிக்கும்

பூனையின் காலில் அகப்பட்ட
ஓணாணின் தவிப்பாய்
எத்தனை ஆண்டுகள்
எம்மக்களுக்கு

விளையாட உயிர்
அள்ளி இறைக்க தமிழச்சிகளின்
அங்கம்
மிதியடிகளாய்ச் சிதறிய பிடரிகள்
காறித் துப்ப கருவறை வழிகள்
சிங்களச் சிறுவனுக்கும்
சுட்டுப் பழக தமிழர் நெஞ்சு

உங்கள் ஆயிரம் சிப்பாய்கள்
ஒரு தமிழனின்
அரைஞான் கயிறு

எம் இனம் எழுந்தால்
சிங்களத் தீவினிற்குப் பாலம் இராது

மண் மனிதர்களுக்குத்தான்
முதலில் என
ரத்தம் கேட்கும் காளிகளின் நாக்குகளை
அறுத்தெறிந்து
கடவுள்களையே தள்ளி வைத்தோம்

எம் மண்ணை பிச்சை கேட்கும்
இனத்திற்கு
வரலாறு எழுதும் வரை
வைகை ஆற்றங்கரையில்
குடைபிடித்துக் கொண்டு
நிற்க மாட்டோம்

மலை முகடுகள் மேலே
பருந்துகள் பறந்தால் கூட
மரணமா தோழா என பதைக்கும்
எம் மக்கள்
இனவிடுதலை கொடியை
அண்ணாந்து பார்க்கும் நாள் வரும்

எங்கள் கெபிகளை என்றும்
சிலந்திகள் கூட வலை நெய்து
அடைக்கப்போவதில்லை

போராளிகள் புதைக்கப்படும்
இடத்திலிருந்து
வெறும் காலடித் தடங்கள் புறப்படுவதில்லை


தேன்மொழி தாஸ் – 2007

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்