இலண்டனில் திருமதி. விமல் பரம் எழுதிய ‘தீதும் நன்றும்’ என்ற சிறுகதைத் தொகுதி பெருந்திரளான மக்கள் மத்தியில் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
வணக்கம் இலண்டன் அமைப்பின் ஏற்பாட்டில் விமல் பரம் அவர்களின் சிறுகதைத் தொகுதி ‘தீதும் நன்றும்’ இலண்டனில் 11/10/2025 சனிக்கிழமை மாலை வெளியீடு நடைபெற்றது. இலண்டனில் Youth Centre, St. Andrew’s Church Hall, Malvern Avenue, South Harrow என்ற மண்டபத்தில் எழுத்தாளர் திருமதி. மாதவி சிவலீலன் தலைமையில் நடைபெற்றது.
இந்நூல் அறிமுக விழாவில் அகல்யா நித்தியலிங்கம் பெண்களின் வாழ்வியல் என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் முதியோர் வாழ்வியல் குறித்து திருப்பரங்குன்றன் சுந்தரம்பிள்ளை அவர்களின் பேச்சும் இடம்பெற்றது.
அத்துடன் ஜெயஶ்ரீ சதானந்தன் அவர்களின் சமூக வாழ்வியல் பற்றிய உரையும் இந்நூல் அறிமுக நிகழ்வில் இடம்பெற்றது. மேலும் சுகுணா சுதாகரன், திருமகள் சிறிபத்மநாதன், சிவாஜினி ஜெயக்குமார் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர்.
விமல் பரம் என்ற எழுத்தாளரின் இயற்பெயர் திருமதி. விமலாதேவி பரமநாதன். இவர் பிறந்த இடம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தன் குமரபுரத்தில். இவர் ஆரம்பக் கல்வியை பரந்தன் இந்து மகாவித்தியாலயத்திலும் தொடர்ந்து யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றார். சிறுவயதிலிருந்து கலை, இலக்கியங்களிலும் புத்தகங்கள் வாசிப்பதிலும் ஆர்வம் அதிகம் பெற்றவர்.
இவரின் முதல் சிறுகதை 2014ம் ஆண்டு தமிழ் அவுஸ்திரேலியன் மாத இதழில் பிரசுரமானது. அதைத்தொடர்ந்து ஒருபேப்பர், ஞானம், சிறுகதை மஞ்சரி, ஜீவநதி, தினக்குரல், தாய்வீடு, வணக்கம் லண்டன், காற்றுவெளி, நடு, பதிவுகள் என்பனவற்றில் பிரசுரமாகியிருக்கிறன. ‘சிறுகதை மஞ்சரி’ சஞ்சிகையின் ஆசிரியர் திரு நற்குணதயாளன் அவர்களினால் இவரது ‘சுமையும் சுகமும்’ ‘ யார்க்கெடுத்து உரைப்பேன்’ என்ற இரண்டு சிறுகதைகளும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இதுவரை 35 சிறுகதைகள் எழுதி இருக்கிறார். சில கதைகளுக்குப் பரிசு கிடைத்திருக்கிறது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019 ல் மூன்றாவது பரிசு, ஞானம் சஞ்சிகை ஒவ்வொரு ஆண்டும் நடாத்தும் ‘அமரர் செம்பியன் செல்வன்’ ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி 2019, 2020, 2021, 2023 ல் பாராட்டுப் பரிசும்,
கிளிநொச்சி பாலு மகேந்திரா நூலகம் நடாத்திய சிறுகதைப் போட்டி2021ல் பாராட்டுப் பரிசும் துகள் நடாத்தும் சிறுகதைப் போட்டி 2024 ல் பாராட்டுப் பரிசும் இவருக்கு கிடைத்திருக்கின்றது.
இவருடைய ‘தீதும் நன்றும்’ என்ற சிறுகதைத் தொகுதி ஜீவநதியின் வெளியீடாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.



