ஒரு கையில் துப்பாக்கி
மறு கையில் உம் சிலை
மாபெரும் பேரழிவின் படையெடுப்புமுன்
ஓதினர் புத்தம் சரணம் கச்சாமி
கொலைவெறி பூண்டு
வன்மம் புரியும் கைகளில்
கட்டினர் பிரித்
யாவற்றையும் துறந்த புத்தபெருமானே
உமக்காகவே யுத்தமென்றனர்
சனங்கள் துரத்தப்பட்ட ஊரை குருதிக்கடலாக்கி
உம் சிலையை குடியேற்றி
ஊர்ச் சனங்களை வீசினர் தொலைதூரத்தில்
அப்பாவிக் குழந்தையின் சிதறிய
சதைத் துண்டம் உம் வாயில்
வன்புணர்வு செய்யப்படுமொருத்தியின்
கிழியும் யோனியின் குருதி
தெறித்ததுமும் மூடியவும் விழிகளில்
உம் பெயரால் போரேடுத்து
உமைக் கொலையாளியாக்கினர்
உம் பெயரால் நம் நிலத்தைக் கைப்பற்றி
உமை ஆக்கிரமிப்பாளனாக்கினர்
உமைக் குற்றவாளியாக்கினர்
கோபத்தை விலத்தியவரே
எம் குருதியில் நீருறைவீரா?
துறவு பூண்டவரே
எம் நிலத்தை ஆக்கிரமிப்பீரா?
வெறும் வெளிச்சக்கூடுகளிற் பேரிருள் நிறைய
தெருவெங்கும் கருகிக்கிடந்த
வண்ண வண்ண ஒளியை கண்டீரா?
பூர்வீக மண்ணிலிருந்து நமை விரட்டிய நாளொன்றில்
இத்தீவை விட்டுப் பெயர்ந்த புத்தபெருமானே!
வெறும் சிலைகளை நடும் இவர்கள்
மெய்யாகவே உமை அறிந்திருந்தால்
நிலங்களைத் திருடும் இவர்கள்
மெய்யாகவே உம் ஞானத்தைப் பெற்றிருந்தால்
இங்கு பாய்ந்திராது குருதியாறு
சுதந்திர பூமியில் வாழ்ந்திருப்பர் நம் குழந்தையர்
நம் கரங்களும் ஏந்தியிராது ஆயுதம்.
தீபச்செல்வன்
0