வட மாகாணம் : சூடுபிடிக்கும் தேர்தல் களம் | களம் 3வட மாகாணம் : சூடுபிடிக்கும் தேர்தல் களம் | களம் 3

வட மாகாணசபையை வெற்றிகொள்ள மும்முனைப் போட்டியில் வலுவான எதிர்பார்ப்போடு கட்சிகள் களம் இறங்கியுள்ள நிலையில் எவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள் எனப் பார்ப்போம்.

 

களம் – 3 | 06-09-2013

 

மனோ கணேசன்:

வாக்களிப்பு என்பது எம்மக்களின் சமூகப் பொறுப்பாக, வரலாற்றுக் கடமையாக உள்ளது. எனவே எங்களிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் உள்வாங்கப்பட என வேண்டும் என “ அறிவகத்தில்” நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மனோ கணேசன் தெரிவித்தார்.

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை அதிலும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தளவில் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கிளிநொச்சி என்ற பெயர் இப்பொழுது உலகம் முழுக்கப் பரீட்சயமாக இருக்கிறது. அனைத்து நாடுகளிலும் கிளிநொச்சி என்ற பெயர் அறியப்பட்டிருக்கிறது. அந்தக் கிளிநொச்சி என்ற பெயருக்குப் பின்னால் ஒரு உறவு, உணர்ச்சி, அழகு, வீரம் என்பன இருக்கிறது.

அனத்துமே இந்த தேர்தலின் பின்னர் சிறப்பாகப் பரிணமிக்க வேண்டும். ஆகவே வாக்களிப்பு என்பது உங்களது சமூகப் பொறுப்பாக வரலாற்றுக் கடமையாக உள்ளது. எங்களிடையே வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் ஒன்றாக உள்வாங்கப்பட வேண்டும்.

 

அன்ரன் ஜெகநாதன்:

இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையிலே நாங்கள் போட்டி போடுகின்றோம், நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் அதில் தடையேற்படின் போராடுவோம் என ஓய்வுபெற்ற அதிபரும் கோட்டக்கல்வி அதிகாரியுமான அன்ரன் ஜெகநாதன் தெரிவித்தார்.

 

வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம்:

இன்றைய சூழலில் தமிழருடைய பலமாகவும் அரனாகவும் இருந்த விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதான கருத்தை நான் ஏற்பதில்லை மாறாக அது பின்னடைவு என வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம்  தெரிவித்தார்.

********************************************************************

sritharan-mp (1)

 

களம் – 2 | 05-09-2013

 

சிசிறீதரன் பா.உ:

முகநூல் மற்றும் இணையம் ஊடாக கிளிநொச்சி மண்ணின் மைந்தர்களை வெற்றிக்கு அழைத்துச் செல்வோம், எனது மாவட்ட வேட்பாளர்களான திரு. ப.அரியரட்னம், திரு.சு.பசுபதிப்பிள்ளை மற்றும் திரு.த.குருகுலராசா ஆகியவர்களை பெருவாரியாக வெற்றியடைய அனைத்துலக தமிழர்களது  உதவியை நாடி நிற்பதுடன். இத் தகவலை உங்கள் உறவுகள் நண்பர்களிடமும் எடுத்துச் செல்வது எம் இனத்தின் இருப்பிற்கு இன்றியமையாதது என தனது ஊடகச் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டதுடன் தனது முகநூல் மற்றும் இணைய விபரங்களை வெளியிட்டுள்ளார்.

 

எம்.எம்.ரதன்: 

போராட்ட வடிவங்கள் மாறின ஆனால் போராட்ட இலட்சியங்கள் மாறவில்லை கடந்தகால தியாகங்கள் வீண்போகக்கூகூடாது எங்களுடைய தேசம் வட கிழக்கிணைந்த தாயகம் என்பதை வடமாகாண சபைத்தேர்தலிலே நிரூபிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர் எம். எம். ரதன் தெரிவித்தார்.

 

இரா.சம்பந்தன் பா.உ:

வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களின் எதிர்கால அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தவிதமான சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டு தமது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையிலான தீர்வை தேர்தல் மூலம் தமிழ் மக்கள் நிரூபிக்க வேண்டும். அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உடைக்க முயற்சித்தனர். கூட்டமைப்பில் பியசேனா என்ற ஒருவர் மாறியது உண்மை. ஆனால் அதனைத் தவிர வேறு எந்த பிளவையும் அரசாங்கத்தினால் கூட்டமைப்பிற்குள் ஏற்படுத்த முடியவில்லை.

*******************************************************************

CV-sampanthan

 

 

களம் – 1 | 04-09-2013

 

இரா சம்பந்தன் பா. :

தமிழ் மக்கள் தமது தாயக மண்ணில் இருந்து விரட்டப்படு வதையும் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதையும் தடுத்து, தமிழ் மக்களிடமிருந்து பலாத்காரமாகப் பறிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சொந்தக் காணிகளை மீண்டும் பெற்றுத்தர முடியுமா என இணக்க அரசியல் பேசுபவர்களுக்குப் பகிரங்க சவால் விடுத்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். நேற்று மாலை வடமராட்சி மாலு சந்தியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சம்பந்தன் இந்தப் பகிரங்கச் சவாலை விடுத்தார்.

 

எம்.ஏ சுமந்திரன் பா. :

65 ஆண்டுகளாக நாம் செய்த தியாகங்கள் வீண்போகக் கூடாது. எமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் இழந்து விடக் கூடாது. இத் தேர்தல் எமது அரசியல் போராட்ட வடிவங்களின் ஒரு திருப்புமுனை என்பதை மக்கள் உணர வேண்டும். போராட்டங்கள் காலத்துக்குக் காலம் வடிவங்கள் மாறுபடலாம். இது நியதி. நாம் இப்போது சர்வதேசத்தை இணைத்து நாம் தொடுத்திருக்கும் ஜனநாயகப் போரிலே நாம் வெல்வது உறுதி என முழங்காவில் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

சீ.வி. விக்னேஸ்வரன்:

வட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற மாபெரும் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் உரையாற்றும் போது நடைபெறவுள்ள தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்த இலங்கை இராணுவமும் அரசாங்க தரப்பினரும் தயாராகி வருகின்றனர் எனவும், அரசாங்க தரப்பு வாக்கு மோசடிகளிலும் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும்  தெரிவித்துள்ளார். மேலும் வடக்கில் மக்களுக்குரிய காணிகளில் மக்கள் மீளச் சென்று வசிக்க முடியாது அவர்களது காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.

இராணுவம் நாளாந்தம் எங்களது வாழ்க்கையில் உள்ளே வந்து சிக்கல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றது.

தமிழர்களின் வாழ்க்கையில் இராணுவம் எல்லா விடயங்களிலும் தலையிட்டு பிரச்சினைகளைத் தந்து கொண்டிருக்கின்றது.

 

சுரேஷ் பிரேமச்சந்திரன் பா.:

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிநாட்டு கோரிக்கையினையும், ஆயுதப் போராட்டத்தையும் மீள உருவாக்குவதற்கு நினைக்கவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் பூரண சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றினையே நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் தமிழர்களுக்கு உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்க மறுக்கும் சிங்கள இனவாத அமைச்சர்களும், அவர்கள் சார்ந்துள்ள அரசாங்கமுமே தமிழர்களிடம் மீள ஆயுதங்களை திணிக்கப் பார்க்கிறார்கள் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆசிரியர்