கூட்டமைப்பு ஆட்சியினை அமைத்து விட்டது: அரியநேந்திரன்கூட்டமைப்பு ஆட்சியினை அமைத்து விட்டது: அரியநேந்திரன்

வட மாகாண சபைத் தேர்தலிலே நாம் படைக்கப் போகின்ற சாதனை என்பது சர்வதேசத்திற்கு கொடுக்கப்படுகிற ஆணையாக இருக்கப்போகிறது. ஆகவே தான் இந்தத் தேர்தலில் வாக்களிக்குமாறு எம்மக்களாகிய உங்களைக் கேட்கிறோம். எமது விடுதலைப்போராட்டமானது இன்று ஒரு இராஜதந்திரப் போராட்டமாக மாற்றம் பெற்றிருக்கிறது. இந்த இராஜதந்திரப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் ஒரு விளைவாகத்தான் இந்த மாகாண சபைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் திரு அரியநேந்திரன் தெரிவித்தார்.

வரவிருக்கின்ற 21ம் திகதி நடக்கப் போகின்ற இந்த வட மாகாண சபைத் தேர்தலில் நிச்சயமாக நாங்கள் ஆட்சியினை அமைப்போம். ஆட்சி அமைத்து விட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தனது தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ததோ அன்றே ஆட்சியினை அமைத்து விட்டது. ஆட்சி அமைப்பது மட்டும் தான் இந்தத் தேர்தலில் நோக்கமல்ல என்பதனை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதன் நோக்கம் நாங்கள் பல இன்னல்களைச் சந்தித்த இனம், பல அவலங்களைச் சந்தித்த இனம், முள்ளிவாய்க்கால் வரை போய் கொத்துக்குண்டுகளால் அழிக்கப்பட்ட இனம், எந்த ஒரு தீர்வும் இல்லாமல் 92 வீதமான தமிழர்கள் வாழுகின்ற ஒரு இனம். இன்றுவரை நாம் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு இனம். இந்த அடிமைத் தளையிலிருந்து விடுபடவேண்டும்.

ஒட்டு மொத்தமான 92 வீதமான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்துக்குள், தமிழ் பற்றுடன் இருக்கிறோம் என்பதை சர்வதேசத்திற்குக் காட்டவேண்டும். இது எம் மக்களாகிய உங்களது தார்மீகக் கடமையாக இருக்கிறது. இந்த்த் தார்மீகக் கடமையை நீங்கள் செய்வீர்களாக இருந்தால் மட்டுமே சர்வதேசம் தமிழர்களது உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும். 2004இல் விடுதலைப்புலிகள் இருந்தவேளையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் காட்டிய உத்வேகத்தின் விளைவாக 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த உத்வேகத்தை நீங்கள் இம்முறையும் இத் தேர்தலிலும் காட்ட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்