சிவில் சமூகத்தில் இருந்து மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்ட ஒரு ஆளுநரை நியமிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம் : சி.வி.விக்னேஸ்வரன்சிவில் சமூகத்தில் இருந்து மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்ட ஒரு ஆளுநரை நியமிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம் : சி.வி.விக்னேஸ்வரன்

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று விட்டது என்று கருதினால், அதில் இருந்து வரும் மற்றைய விடயங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவதில் தான் எதிர்காலம் இருக்கின்றது’ என வடமாகண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.வி.விக்னேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
வடமாகாண சபை தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற பின்னர் யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய  அவர், ‘வடக்கில் பிரச்சினை இன்றி தேர்தல் நடக்கவில்லை. சில பிரச்சினைகள் நடைபெற்றன. அத்துடன், இந்த தேர்தலை நடத்தி விட்டோம் என்று மார் தட்ட வேண்டிய அவசியம் அரசிற்கு இல்லை. இதைக் காரணமாக வைத்து அப்படி கூறினால், அது வரவேற்கத்தக்கது’ என்றும் அவர் கூறினார்.

‘வேறொரு அரசாங்கமும் வேறு கூட்டணியுமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் வளர்ச்சி திட்டத்திற்கான நிதி எவ்வாறு தரப்பட வேண்டுமென்பது சட்டத்தில் இருக்கின்றது. அதன் அடிப்படையில்தான் நிதி தரப்பட வேண்டுமே தவிர தான்தோன்றி தனமாக தரவேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு செய்ய அனுமதிக்க முடியாது.  அரசாங்கங்கள் மாறலாம். ஆனால், நடைமுறை தொடர்ந்தும் அவ்வாறே இருக்கும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘அரசுடன் இணைந்து 13ஆவது திருத்தத்தினை நல்ல முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம். அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். ஆகவே எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு அரசாங்கத்திடம் தான் கேட்க வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ‘தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க மாட்டோம், எதேச்ச அதிகாரமாக நடப்போம், அதேபோன்று நீங்கள் நடந்துகொள்ளுங்கள் என்று சொன்னால்,  பிரச்சினைகள் ஏற்படும் என்றும் எங்களை பொறுத்தவரையில் அரசாங்கத்துடன் சேர்ந்து ஜனநாயக முறைப்படி ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்களை நல்ல முறையில் செயற்படுத்திச் செல்ல நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதுடன், இந்த விடயங்களை அரசாங்கத்திடம் கேட்பதே சிறந்ததென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ‘இராணுவத்தில் இருந்த ஒருவர் ஆளுநராக இருக்கும் பட்சத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மக்களின் பிரச்சினைகளை முறையாக சரியாக உணர்ந்து செயற்படுத்துகின்றார்களா என்ற கேள்வி எழுகின்றதாகவும்’ அவர் கூறினார்.

அதன்பிரகாரம், சிவில் சமூகத்தில் இருந்து போதிய அதிகாரம் உள்ள மக்களின் பிரச்சினைகளை புரிந்து தெரிந்து கொண்ட ஒருவர் ஆளுநராக இருந்தால் தான் நல்லது. அத்துடன், அவ்வாறு தொடர்ந்தும் வலியுறுத்துவோம்’ என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதியினால் சிவில் சமூகத்தில் இருந்து ஒருவரை அனுப்புவதாக கேள்வியுற்றுள்ளோம். அவருடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசுவதாக கூறியுள்ளோமே தவிர, இணைவதாக கூறவில்லை. இணைந்து செயலாற்றுவதற்கும், பேச்சுவார்த்தையில் பேசுவதற்கும், வித்தியாசங்கள் இருக்கின்றன.

எமக்கென்று சில உரித்துக்கள் இருக்கின்றன. அவ்வாறு சட்டப்படி இருக்கும் உரித்துக்களை பெரும்பான்மை மக்களிடம் இருந்து தரிவித்து எடுக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. பெரும்பான்மை மக்கள் தான் எமக்கு அவ்வாறான உரித்துக்களை தரவேண்டுமென்று கூறியிருந்தால், அது தவறு’ என்றும் சுட்டிக்காட்டினார்.

எமக்கு எவ்வளவு பிரச்சினை இருக்கின்றது. பெரும்பான்மை மக்கள் அந்த எண்ணங்கள் இன்றி இருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். அந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாம் கூறிவருகின்றோம். அவற்றினை தான் எமது மக்கள் இந்த தேர்தலில் எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள். இவற்றினை மையமாக வைத்து அரசாங்கம் தன்னுடைய நடைமுறைகளை மாற்றி எம்மோடு இணைந்து, செயற்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்’ என்று சுட்டிக்காட்டினார்.

‘அரசுடன் பேசும்போது உரித்தோடு பேச வேண்டும், இப்போது பேசும் போது மக்களின் ஆணை கிடைத்திருக்கின்றபோது பேசும் போது அதற்கு வலிமை இருக்கின்றதுடன், வித்தியாசம்  இருக்கின்றதாகவும்’ அவர் சுட்டிக்காட்டினார்.

‘நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு செல்லாததற்கான காரணங்கள் கூறியிருக்கின்றோம். அந்த காரணங்களுக்கு அமைவாக இருந்தால் தெரிவுக்குழுவிற்கு செல்வோம்’ என்றும் அவர் மேலும் கூறினர்.

ஆசிரியர்