என்ன நடக்கின்றது கூட்டமைப்புக்குள்? பதவி ஆசையில் சீர்குலையுமா த தே கூட்டமைப்பு ? என்ன நடக்கின்றது கூட்டமைப்புக்குள்? பதவி ஆசையில் சீர்குலையுமா த தே கூட்டமைப்பு ?

வடமாகாண தேர்தல் முடிவுற்று சில வாரம் ஆகின்றது. த தே கூ அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. வடக்கு மக்கள் இன்று தமது நிலைப்பாட்டினை உறுதியுடன் தெரிவித்துள்ளனர். நிதானமும் தூர நோக்கும் தம்மிடம் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர். இத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் கீழ்த்தரமான அரசியலுக்கு இடமில்லை என்பதைக் சுட்டிக்காட்டியுள்ளது.

பலதரப்பட்ட வேட்பாளர்கள் களம் இறங்கியபோதும் இரு அணிகளாக தேர்தலில் மோதிக்கொண்டன. தமிழ் தேசியம் மற்றும் சுய நிர்ணய உரிமை போன்ற தமிழரின் விட்டுக்கொடுக்க முடியாத கோசத்துடன் த தே கூ களத்தில் இறங்கியபோது வடக்கு மக்களின் உள் உணர்வு துடித்துப்போய் நின்றதை ஆரம்பத்தில் வெளித்தெரியாத போதும் தேர்தல் நெருங்கும் போது வெளிப்படையான ஆதரவினை வழங்க முன்வந்தபொது தெரிந்தது.

அடுத்த அணியாக அரசுடன் இணைந்து சலுகைகளைக் காட்டி மக்களின் இன்றைய தேவைகளுக்கு மட்டுமே அவர்களது வாழ்வை கட்டுப்படுத்தும் வாக்குறுதிகளுடன் களம் இறங்கிய வேட்பாளர்களுக்கு மக்கள் தகுந்த பதில்களை வழங்கியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் வரை சென்று மீண்டு வரும்போது எல்லாவற்றையும் இழந்து வந்தாலும், ஆயுத கலாச்சாரத்தை வெறுத்து வந்தாலும், உயிரைக் காப்பதைத் தவிர மற்றவற்றை மறந்து வந்தாலும் மன உள்கிடக்கையில் தகித்துக்கொண்டு இருத்த அந்த உணர்வு காலத்துக்கு ஏற்ற நேரத்தில் சுவாளையாக மாறியுள்ளது.

மக்கள் தமது தகிப்பை காத்து இன்று கூட்டமைப்பிடம் தந்துள்ளார்கள். இன்னும் சில நாட்களில் மாகாணசபையை கூட்டமைப்பு பொறுப்பெடுக்கப் போகின்றது. படித்த சட்டத்துறையில் அனுபவமுள்ள ஒருவரை கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்திய போது சர்வதேசம் அந்த முடிவை வரவேற்றது. இன்று அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகின்றது.

மாகாணசபையை பொறுப்பெடுத்ததும் எதிர்நோக்க வேண்டிய சவால்கள் நிறைய உள்ளன. தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவற்றை செயல்ப்படுத்த வேண்டியுள்ளது. இலங்கை அரசைப் பொறுத்த வரை சில சர்ச்சைக்குரிய விடையங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதாகவே கருதுகின்றது. ஆயினும் கூட்டமைப்புக்கு இதுவொரு சரியான தருணமாகவே அமைந்துள்ளது.

சிங்கள அரசை கையாள்வதில் பல நெருக்கடிகளை கூட்டமைப்பு இனிவரும் காலங்களில் எதிர்நோக்க வேண்டியுள்ளது. த தே கூ எவ்வாறு வியூகம் அமைக்கப்போகின்றது என யோசித்து நின்ற வேளையில். இன்று தமிழர் தமது அரசியல் எதிர்காலம் கூட்டமைப்புக்குள் சிதைந்து போகுமோ என ஐயம்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

கடந்த வாரம்முதல் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள கூச்சல் மற்றும் சலசலப்பு இன்றுவரை முடிவில்லாமல் தொடர்கின்றது. தமிழ் தேசியமென வாக்கு கேட்ட கூட்டமைப்பு பிரதேச வாதத்தில் அள்ளுண்டு காணாமல் போய்விடுமா? நான்கு அமைச்சுகளை பங்குபோட்டு நிர்வகிக்க முடியாத கூட்டமைப்பு தனியரசு பற்றி சிந்திக்க முடியுமா? இன்று தமிழ் மக்களிடம் உள்ள நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதில் யாரிடமும் இல்லை.

 

– வந்தியத்தேவன் –

 

கேலிச்சித்திரம் : நன்றி தினக்குரல் 

ஆசிரியர்