இலங்கைக்கு பொதுநலவாயத்தின் தலைமையை கொடுக்கக் கூடாது | சுமந்திரன் எம்.பி.இலங்கைக்கு பொதுநலவாயத்தின் தலைமையை கொடுக்கக் கூடாது | சுமந்திரன் எம்.பி.

தனது சுயநலத்திற்காக இனப்படுகொலைகளை செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொது நலவாய அமைப்பின் தலைமைப் பதவியினை கொடுக்கக்கூடாது. இறுதி நேரத்திலாவது மீள்பரிசீலனை செய்து தலைமைப் பதவியினை தடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கையில் இன்று மனித உரிமை மீறல்களை நாங்கள் தான் செய்கின்றோம் என அரசாங்கம் சர்வதேசங்களுக்கு வெளிப்படையாகவே காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ‘சமகி” அமைப்பினால் நேற்று ‘மனித உரிமைகளுக்கான போராட்டம்” என்னும் தொனிப்பொருளில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கிலான மக்களை கொன்றுகுவித்த, சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஓர் சர்வாதிகாரிக்கே இன்று அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைப் பதவி வழங்கப்படவுள்ளது.

இவ்வாறான சர்வாதிகாரிக்கு ஓர் முக்கிய பொறுப்பினைக் கொடுப்பது சரியானதா என்பதை இப்போதாவது பரிசீலனை செய்து சரியானதொரு முடிவினை எடுக்க வேண்டும்.

பொது நலவாய அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளாத பிரதான நாடுகள் தமக்கான முடிவினை சரியாக எடுத்துள்ளன. கனடா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கின்றமையினாலும், போர்க்குற்றம் புரிந்த ஓர் தலைவரின் அழைப்பினை விரும்பாததன் காரணத்தினாலேயுமே இம் மாநாட்டினைப் புறக்கணித்துள்ளனர். அதேபோல் மொரிஷியஸ், டிரினிடாட் போன்ற நாடுகள் இறுதிநேரத்தில் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து இவ் உச்சிமாநாட்டினை புறக்கணித்துள்ளன.

அதேபோல், இலங்கைக்கு வருகை தந்திருக்கும் நாடுகளும் தமது அழுத்தங்களை பிரயோகித்து மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கட்டளைகளிடவே வந்திருக்கின்றன. எந்தப் பக்கத்தில் பார்தாலும் அரசாங்கம் அழுத்தங்களை சந்திப்பது உறுதியே.

மேலும், இலங்கையில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் சம்பவங்களை நாங்கள் தான் செய்கின்றோம் என்பதனை வெளிப்படையாகவே அரசாங்கம் காட்டிக்கொண்டிருக்கின்றது. ஒருபுறம் பொது நலவாய அரச தலைவர் உச்சிமாநாட்டினை நடத்தும் அரசாங்கம், மறுபுறம் மனித உரிமை மீறல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இன்று வடக்கில் இருந்து வரவிருந்த பலரை இராணுவத்தினர் மூலமாகத் தாக்கி அவர்களை இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத வண்ணம் செய்துள்ளனர்.

சர்வதேச ஊடகங்கள், சர்வதேசத் தலைவர்கள் முன்னிலையில் அரசாங்கம் குற்றச்செயல்களை செய்கின்றது. எனவே, இப்போதாவது சர்வதேசம் சிந்திக்க வேண்டும். பொது நலவாய அமைப்பின் தலைமைப் பதவி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்குவதை தடுக்க வேண்டும்.

இறுதி நேரத்திலாவது சரியான பரிசீலனைகளை மேற்கொண்டு இலங்கையின் தற்போதைய நிலைமையினை அவதானித்து சிறந்ததொரு முடிவினை பொது நலவாய அமைப்பு எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்