வடக்குக்கு உரிய அதிகாரங்களை வழங்குக | ஜனாதிபதிக்கு கமரூன் அழுத்தம்வடக்குக்கு உரிய அதிகாரங்களை வழங்குக | ஜனாதிபதிக்கு கமரூன் அழுத்தம்

வடமாகாண சபைக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நேற்று நேரில் வலியுறுத்தினார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்.

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேற்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.   பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இந்தச் சந்திப்பின்போது,  பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விதம் குறித்து  பிரிட்டன் பிரதமர் திருப்தி வெளியிட்டுள்ளார்.    பொதுநலாய மாநாட்டை புறக்கணிக்கும் எண்ணம் தனக்கு இருக்கவில்லை என்றும் அவர் கூறினார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   அத்துடன், தனது வடக்குப் பயணம் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியிடம் கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர்,    “போர் முடிவடைந்தப்பின்னர் வடக்கில் பெருமளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.   வட மாகாண சபைக்கு தேர்தல்களை நடத்தியமை நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு மிகச் சாதகமான நடவடிக்கையாகும்.

எனினும், மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினைகள், வட மாகாணத்தில் இராணுவத்தினரின்  பிரசன்னம் மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபைக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் ஆகிய விடயங்களுடன் தொடர்புபட்ட பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.   இவற்றுக்குப் பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,   மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் மோதலின்போது சேதத்திற்குள்ளான உட்கட்டமைப்பு புனர்நிர்மாணம் போன்ற விடயங்களில் பெருமளவு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.   அரசியல் விவகாரங்களில் இணக்கப்பாட்டை எட்டும் வகையில், தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கும், தீர்வொன்றை எட்டுவதற்கும், சம்பந்தப்பட்ட எல்லா கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தெரிவுக் குழுவே இந்த நோக்கத்திற்கான சிறந்த தளமாகும்.   மோதல் நிறைவுக்கு வந்து நான்கு வருடங்களே கடந்துள்ளன. எனவே, அனைத்து பாரிய சவால்களையும் வெற்றி கொள்வதற்கு இன்னும் காலம் தேவை – என்றார்.   பிரிட்டிஷ், வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக், இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் ரங்கிங் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்  பீரிஸ், பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுணுகம ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்

ஆசிரியர்