இலங்கையில் தமிழர்கள் பீதியுடன் வாழ்கிறார்கள்: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற கனடா மந்திரி தகவல் இலங்கையில் தமிழர்கள் பீதியுடன் வாழ்கிறார்கள்: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற கனடா மந்திரி தகவல்

sri-lanka-1 (1)

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இலங்கை போர்க்குற்றம் செய்ததாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை தலைநகர் கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு நடந்தது.

அதில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண்டார். இறுதி கட்ட போரில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்று நேரில் பார்வையிட்டார். மேலும் அங்கு அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இலங்கை அரசால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எனவே போர்க்குற்றம் தொடர்பாக மார்ச் மாதத்துக்குள் நம்பத்தகுந்த சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கெடு விதித்துள்ளார்.

அதே போன்று கனடா சார்பில் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு மந்திரி தீபக் ஓபராயும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்படுகின்றன.

அங்கு தொடர்ந்து தமிழர்கள் பீதியுடன் வாழும் நிலை உள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதால் பிரதமர் ஸ்டீவன் ஹாப்பர் இந்த மாநாட்டை புறக்கணித்தார். எனவே அவருக்கு பதிலாக மாநாட்டில் பங்கேற்ற நான், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை கண்காணித்தேன்.

மேலும் போரில் பாதித்த வடக்கு மாகாணத்தில் உள்ள ஆணையிறவுக்கு சென்று மரணம் அடைந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினேன் என்றார்.

இதற்கிடையே மனித உரிமை மீறல்கள் விஷயத்தில் இலங்கை அரசு அக்கறை காட்ட வேண்டுமானால் சர்வதேச நாடுகள் அந்நாட்டின் மீது தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை பொதுச்செயலாளரின் பொறுப்பாளர் ஸ்டீவ் க்ரவுசோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் உச்ச கட்டத்தில் இருக்கும்போது அங்கு காமன்வெல்த் மாநாடு நடத்தியது ஏற்று கொள்ளத்தக்கதல்ல.

எனினும், சர்வதேச சமூகம் இலங்கையின் மீது தொடர்ந்து அழுத்தம் தந்தால் போர்க்குற்றம் உள்பட பல விஷயங்களுக்கு தீர்வுகள் காண முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்