ஆயுதக்குவிப்பில் ஆசிய நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டிபோடுகின்றன. சீனாவுக்கு அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு தளவாடங்களை ரஷியா வழங்குகிறது.
இந்தியா, உலக நாடுகளுடன் நல்லுறவை பராமரிக்க விரும்புகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளுடன் இணக்கமான உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறது. ஆனால் அவை ஆயுதக்குவிப்பில் கண்ணும், கருத்துமாக உள்ளன. சமீபத்தில், பாகிஸ்தானுக்கு ரூ.6,200 கோடி ஆயுதங்கள் சப்ளை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்தது. இதன்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ‘ஏஎச்-1 இசட் வைபர்’ தாக்குதல் ஹெலிகாப்டர்கள், ‘டி-700 ஜிஇ 401 சி’ என்ஜின்கள், ‘ஏஜிஎம்-114 ஆர்’ ஹெல்பயர் ஏவுகணைகள், ‘எச்-1’ தொழில்நுட்ப புதுப்பிப்பு பணி கம்ப்யூட்டர்கள், ‘ஏஎன்/ஏஏகியூ-30’ இலக்கு பார்வை சாதனங்கள் என ஏராளமான ஆயுதங்களையும், தளவாடங்களையும் சப்ளை செய்ய உள்ளது.
இந்த நிலையில் இப்போது மற்றொரு ஆசிய நாடான சீனாவும் ஆயுதக் குவிப்பில் ஈடுபடுகிறது. சீனாவுக்கு அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு தளவாடங்களை சப்ளை செய்வதற்கு ரஷியா முன்வந்துள்ளது. இதன்படி சீனாவுக்கு ரஷியா 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.18,600 கோடி) மதிப்பிலான நவீன ஏவுகணை பாதுகாப்பு தளவாடங்களை சப்ளை செய்யும்.
எஸ்-400 என்ற அழைக்கப்படுகிற இந்த அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு தளவாடங்கள், புதிய தலைமுறை ஏவுகணை தளவாடங்கள் ஆகும். இவை தரையில் இருந்து புறப்பட்டுச்சென்று, வான் இலக்குகளை தாக்கும். இந்த விமான எதிர்ப்பு ஏவுகணை தளவாடங்கள், எந்த வான்வழி இலக்கையும் எட்டுகிற ஆற்றல் வாய்ந்தவை. அதுமட்டுமின்றி, கப்பல் மற்றும் தந்திர உபாய கண்டம் விட்டு கண்டம் பாய்கிற ஏவுகணைகளையும் சந்திக்கிற திறன் கொண்டது. விநாடிக்கு 4.8 கி.மீ. வேகத்தில் பாயும் வல்லமையை கொண்டுள்ளது.
இந்த ஏவுகணை பாதுகாப்பு தளவாடம், 3 விதமான ஏவுகணைகளை ஏவும் திறன் வாய்ந்தது. பல அடுக்கு பாதுகாப்பினை கொண்டது. ஒரே நேரத்தில் 36 இலக்குகளை சந்திக்கும். விமானங்களை, ஏவுகணைகளை, தந்திர உபாய ஏவுகணைகளை, கப்பல் ஏவுகணைகளை 400 கி.மீ. இலக்கு வரை சென்று வீழ்த்தும்.
சீனாவுக்கு ரஷியா அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணை பாதுகாப்பு தளவாடங்கள் விற்பனை செய்தை ரஷிய அரசின் ஆயுத வர்த்தக நிறுவனமான ராசோபோரானின் மூத்த அதிகாரி உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “எங்கள் நிறுவனத்துடன் ஏவுகணை பாதுகாப்பு தளவாட சப்ளைக்காக சீனா ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அது குறித்த விவரங்களை வெளியிட மாட்டேன். எங்களுடைய இந்த அதிநவீன எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு தளவாடங்களை வாங்குகிற முதல் வெளிநாடு சீனாதான்” என கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதமே, இதற்காக ரஷியாவுடன் சீனா உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இது சீனாவின் வான்காப்பு படைத்திறனை வலுப்படுத்தும் என்று சீன ராணுவ வல்லுனர்கள் கூறி உள்ளனர்.
பாகிஸ்தானும், சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு ஆயுதங்களை குவித்து வருவது, ஆசிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.