December 2, 2023 9:32 am

தீயில் கருகிய தேசம்! | முல்லை லக்சி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

அன்றொரு நாள்
நாம் அழுத கதை
வன்னியவன் தீயில்
கருகிய கதை இது!

கடல் கொந்தளிக்கும்
தேசத்தில்
அன்று உயிர்
தத்தளித்தது

ஈழம் தந்தவலிகள்
கொஞ்சம் இல்லை
இழந்த இழப்புக்களும்
கொஞ்சம் இல்லை

கொத்து குண்டும்
பிய்ந்த பிணங்களும்
ஆங்காங்கே தீக்கிரையாய்
கிடந்த குடிசைகளும்

அம்மா எனும் அலுகுரலோடு  குழந்தைகளும்
ஐயோ? என அள்ளி அணைத்துக்கொண்ட
தாயின் மார்பும்
பாசமாய் அரவணைத்த
தந்தையின் கைகளும்
எங்கே போனது?

கண்கள் இரண்டும்
மூடாமலே
துயில் நீத்தோம்

உற்றார் இல்லை
உறவினர் இல்லை
பெற்றோர் இல்லை
பெரும் பரிதாபம்
அது

உணவில்லை
உடையில்லை
உண்டி சுருங்கியே
உயிர் நீத்தோம்!

ஒரு புடி சோறும்
ஒரு சொட்டும் நீரும் தொண்டையில்
பட்டுவிடாதா என்ற
ஏக்கம் மட்டுமே எமக்கு

ஊர் ஊராய்
நடை
பயணம்
இடை இடையே
உயிர் போய்விடுமோ?
என மன பயம்

தரப்பால் கொட்டிலிலும்
மண் பங்கர்களிலும்
இறந்தவர்கள் எத்தனையோ?
எண்ணிக்கை இல்லை

பிணந்திண்ணி
கழுகுகளாய் சிங்களவன்
அங்கே
உயிரோடு எரித்து விட்டான் தமிழீலத்தையே

புழுதி படிந்த
மண்ணில்
இன்று
குருதி படிந்து போனது!
நம் ஈழத்தின் சாபம் தானோ?

இசை மீட்டும்மூங்கில் சோலையில்
இன்று
தீக்கிரை தேசத்தின்
அவலக்குரல்
கேட்குதய்யா!
அம்மா ?ஐயோ என

பட்ட மரத்தில்
ஊஞ்சலாடும்
பிசாசுகளாய்
வாழ்வா சாவா
என நம் வாழ்வும்
நிர்கதியானதே

வாய் பிளந்து
வெடிக்கும்
குண்டுகள்
குருதி வழிந்து
ஓடும் வாய்க்கால்
புற் தரைகள் எல்லாம்
பிணந்தரைகள்
கால் வைக்கும் இடமெல்லாம்
கண்ணி வெடிகள்
இறந்தவர்களை விட
எறிந்தவர்களே அதிகம்

அன்றெரிந்த தீக்காடு
இன்னும் அணையவில்லை
எமக்குள்

தீயில்
கருகியது
வன்னி
தேசம் மட்டுமல்ல
எம்மவர்
நெஞ்சங்களுமே

முல்லை லக்சி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்